பேருந்திலோ, புகைவண்டியிலோ ஒரு விபத்து நடந்தால், அங்கே அருகில் இருக்கின்ற மக்களின் உதவியாவது கிடைக்கும். அதிகபட்சமாய் 50,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் பழுது என்றால் யார் வந்து உதவுவார்கள்? ஆளில்லாத் தீவுகளில் விமானம் விழுந்தால் குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்காது. இவ்வகையான விபத்துகளில் உயிரிழப்புகளும், அதிக பொருட்சேதமும் ஏற்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளானது உறுதியாகி, ரத்தமும் சதையுமாய் உடன் வாழ்ந்தவர்களின் சடலத்தைக்கூடப் பெறமுடியாத நிலையில் இருக்கும் உறவினர்கள் நிலை இன்னமும் மோசம். சென்ற நூற்றாண்டில் வானில் மாயமாகி, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னரும் கிடைக்காத விமானங்கள் 125-க்கும் மேல். அவற்றின் நிலை என்ன? யாருக்கும் தெரியாது.
2014-ம் வருடத்தில் மட்டும் 8 விமான விபத்துகள் நடந்திருக்கின்றன. பிப்ரவரி 11 ல் அல்ஜீரிய விமானம் லாக்ஹீட் சி 130 ஹெர்குலஸ் முதல் தொடங்கிய விபத்து, டிசம்பர் 28ல் இந்தோனேசிய விமானம் ஏர் ஏசியா 8501 வரை தொடர்ந்தது.
சி 130 ஹெர்குலஸ்
74 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் என 78 பேருடன் அல்ஜீரியாவை நோக்கி சென்று கொண்டிருந்த சி 130 ஹெர்குலஸ், மோசமான வானிலை காரணமாக ஃபெர்டாஸ் மலைச் சிகரத்தில் மோதி நொறுங்கியது. ஒருவர் மட்டுமே தப்பிப் பிழைத்தார். மற்றவர்கள் 77 உடல்களாகக் கிடைத்தனர்.
ஃப்ளைட் 183
அடுத்த ஐந்தாவது நாளிலேயே நேபாளிலும் இதே மாதிரியான விபத்து நடந்தது. நேபாளை நோக்கிச் சென்று கொண்டிருந்த உள்நாட்டு விமானமான ஏர்லைன்ஸ் ஃப்ளைட் 183, நேபாளுக்கு 40 மைல் தொலைவில் திகுரா காடுகளில் உள்ள மலையில் மோதி வெடித்துச் சிதறியது. பின்னர் வந்த கண்காணிப்பு ஹெலிகாப்டர், இடிபாடுகளுக்கிடையில் எரிந்து போய்க் கிடந்த 18 உடல்களை அடையாளம் காட்டியது.
எம்.ஹச். 370
உலகத்தையே உலுக்கி எடுத்த நிகழ்வு மார்ச் 8ஆம் தேதி நடந்தது. அன்று மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி 12 மலேசிய ஊழியர்களைச் சேர்த்து 239 பயணிகளுடன் பயணித்த எம்.ஹச். 370 விமானம் என்னவானது என இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பயணத்தை ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து விலகிய விமானம், திட்டமிடப்பட்ட பாதையில் இருந்தும் விலகியது. ரேடாரால் கண்காணிக்கப்பட முடியாமல் மறைந்த எம்.ஹச்.370யின் தேடுதல் பணி கடந்த 10 மாதங்களாகத் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஒருவேளை, பயணிகள் உயிர் தப்பியிருந்தாலும் இத்தனை நாட்கள் வெளி உலகத்தொடர்பு இல்லாமல் அவர்கள் வாழ்வதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவுதான்.
எம்.ஹச்.17
அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே அதே மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.ஹச்.17 மாயமானது. கோலாலம்பூரில் இருந்து ஜூலை 17 அன்று புறப்பட்ட எம்.ஹச்.17 ரஷ்ய- உக்ரைன் எல்லைக்கருகில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளால் இலக்கு நோக்கிப்பாயும் ஏவுகணையைக் கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை 298.
ஃப்ளைட் 222
அடுத்த ஆறு நாட்களில் ஜுலை 23ல் தைவானிலும் விபத்து ஏற்பட்டது. உள்நாட்டு விமானமான ட்ரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் ஃப்ளைட் 222, தரையிறங்கும்போது தன் கட்டுப்பாட்டை இழந்து பெங்கு தீவில் ஒரு கட்டிடத்தின் மீது மோதியதில், 48 பயணிகள் உயிரிழந்தனர். 10 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
ஃப்ளைட் 5017
அடுத்த நாளே திரும்பவும் அல்ஜீரியாவில் 118 பேர் விமான விபத்தால் இறந்தனர். ரேடாரில் இருந்து விலகிய இவ்விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஃப்ளைட் 5915
சர்வதேச எல்லைகளில்தான் விமான விபத்துக்கள் அதிகம் நடக்கிறது என்ற எண்ணம் முற்றிலும் தவறு என்பதை அடுத்தடுத்து நிகழும் உள்நாட்டு விபத்துகள் நிரூபித்தன. ஆகஸ்டில் டெஹ்ரானில் இருந்து ஈரானில் உள்ள டாபாஸ் என்ற நகரத்துக்குக் கிளம்பிய சீபஹன் ஏர்லைன்ஸ் ஃப்ளைட் 5915 புறப்பட்டவுடனேயே இன்ஜின் பழுது காரணமாக அஸாதி ஸ்டேடியம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 39 பயணிகள் இறந்தனர்.
ஃப்ளைட் 8501
நேற்று (டிசம்பர் 28) சர்பயாவில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய இந்தோனேசிய ஏர் ஏசியா ஃப்ளைட் 8501, ஜாவா எனப்படும் கடலின் அருகில் சென்று கொண்டிருந்தபோது மாயமாகி இருக்கிறது. தீவிரத் தேடுதலில் இருக்கும் இந்த விமானம் கடலின் அடியில் சென்று புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவசர காலங்களில், அபாய எச்சரிக்கைகளை அனுப்பும் இவ்விமான சாதனங்களில் இருந்து எந்தவொரு சமிக்ஞையும் இந்தோனேசியாவோ, சுற்றியுள்ள அண்டை நாடுகளோ பெறவில்லை. தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்; எம்.ஹச். 370 க்கு ஆன கதி இதற்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.
காரணங்கள்
தொழில்நுட்பக் கோளாறுகள், விமானிகளின் கவனக்குறைவு, வானிலை மாற்றங்கள், விமானம் தன் கட்டுப்பாட்டை இழப்பது, காரணங்கள் தெரியாத நிலை போன்றவைகளால் விமானம் விபத்துக்குள்ளாவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நாளில் பிறப்பையும் இறப்பையும் தள்ளிப்போட முடிகிறது. விரைவாகவும், வசதியாகவும் பயணிக்க புதுப்புது தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளோம். ஆனால், விமானப் பயணங்களின் பாதுகாப்பில் முன்னேற்றம் கண்டுள்ளோமா?
பயணக்காலத்தைச் சுருக்கத்தான் நாம் விமானத்தை நாடிப் போகிறோம். அதுவே நம் வாழ்க்கையை சுருக்கி விடக்கூடாது.
courtesy;The Hindu tamil edition