Wednesday, December 3, 2014

மறைந்து வரும் பெட்ரோமாக்ஸ் லைட் ! [ ஒரு நினைவூட்டல் ]


பொருளாதாரம், விஞ்ஞானம், நவீனக் கண்டுபிடிப்புகள் ஆகியவைகளில் பின்தங்கியிருந்த அந்தக் காலத்தில் மின்சார இணைப்பு என்பது எல்லோரும் பெற்றிருக்க வில்லை. சில செல்வந்தர்களின் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களில் மட்டுமே மின் இணைப்பு இருந்தது.. இன்னும் சொல்லப் போனால் அரசு சம்பந்தப்பட்ட ஒருசில அலுவலகங்களில் கூட மின் இணைப்பு இல்லாமல் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் வீட்டில் நடைபெறும் விசேச காரியங்களிலிருந்து மற்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் அன்று காந்த லைட்டு என்று சொல்லப்படும் பெட்ரோமாக்ஸ் லைட்டையே பிரதானமாக பயன்படுத்தி வந்தார்கள்


அந்தக்கால வாழ்க்கையில் வெளிச்சத்திற்க்காக மண்ணெண்ணையில் எரியும் சிம்ளி விளக்கு, முட்டை விளக்கு, குத்து விளக்கு, அரிக்கன் விளக்கு காண்டா விளக்கு, பந்த விளக்கு, என்று சொல்லக் கூடிய விளக்குகளே பயன்பாட்டில் இருந்தன.

மேலே சொல்லப்பட்ட விளக்குகளை விட உயர்வாக நல்ல வெளிச்சம் தரக்கூடிய அதே மண்ணெண்ணையில் எரியக்கூடிய பெட்ரோமாக்ஸ் லைட்டுதான் இரவில் வீட்டில் நடக்கும் விசேஷ காரியங்களுக்கும்,கல்யாண ஊர்வலங்களுக்கும், விழாக்களுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வந்தன. இதில் விழாக்களுக்கு, ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்லும் பெட்ரோமாக்ஸ் லைட் தலையில் தூக்கிச் செல்லும்படியான வடிவமைக்கப்பட்டு இருக்கும்.மற்ற நிகழ்ச்சிகளுக்கு கையில் தூக்கிச் செல்லும்படியான அமைப்பில் இருக்கும்.

இரவு நேரத்தில் யாருடைய வீட்டிலாவது பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சம் தெரிந்தால் அவர்கள் வீட்டில் ஏதாவது விசேஷ காரியங்கள் நடப்பதாக அறிந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு பெட்ரோமாக்ஸ் லைட் நம் வாழ்வில் ஒரு முக்கிய சாதனமாக அங்கம் வகித்தது.

பெரும்பாலும் பெட்ரோமாக்ஸ் லைட்டை யாரும் சொந்தமாக வாங்கி வைத்துக் கொள்வதில்லை.தேவைக்கு ஏற்ப வாடகைக்கே எடுத்துக் கொள்வார்கள்.இதற்காக அன்று இவ்விடம் பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்கு கிடைக்கும் என்கிற விளம்பரப் பலகையுடன் கடைகள் கடைத்தெரு பகுதிகளில் நிறைய இருந்தது. அன்றைய காலத்தில்  இது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் இருந்தன.

அதுமட்டுமல்லாது இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடும் நேரத்தில் கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் இந்தப் பெட்ரோமாக்ஸ் லைட்டையே பயன்படுத்தி வந்தார்கள்.இன்னும் சொல்லப் போனால் இரவு நேரங்களில் தள்ளு வண்டியில் வறுத்த கடலை, சுண்டல்,சோன்பப்டி போன்ற நொறுக்குத் தீனி வியாபாரம் செய்ய மிகவும் கைகொடுத்தது என்று கூடச் சொல்லலாம்

எத்தனையோ தேவைகளுக்கு அத்தியாவசியமாக இருந்த பெட்ரோமாக்ஸ் லைட் இன்றைய நவீன காலத்தில் அவசியமற்றதாக போய்விட்டது. காரணம் இன்றைய சூழ்நிலையில் மின்சாரம் மிக அவசியமான ஒன்றாகி குடிசைவீடு முதல் அனைத்து இடங்களுக்கும் மின் இணைப்பு இல்லாத பகுதியை இல்லையென்று சொல்லும் அளவுக்கு எங்கும் மின்சாரம் நிலைகொண்டு விட்டது..

காரணம் புதுப் புது கண்டுபிடிப்பின் அசுர வளர்ச்சியால் மனிதனின் தேவைகளும் அதிகமாகி பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் பெரும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆகவே மின்சாரத்தை பிரதானமாக வரவேற்கும்படி ஆகிவிட்டது. மின்சாரத்திற்கு முக்கியத்துவம் அளித்ததால் மின் தடை ஏற்ப்படும்போது ஜெனரேட்டர், ரீ சார்ஜர் பேட்டரிகள், சார்ஜ் லைட், சார்ஜ் ஃபேன், என கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்த பிறகு இதன் மவுசு குறையத் தொடங்கின. நாளடைவில் இதன் அவசியம் மிகக்குறைவாகி இன்றையகாலத்தில் பெட்ரோமாக்ஸ் லைட்டைக் காண்பதே அரிதாகிவிட்டன.

ஒருகாலத்தில் விழாக்களுக்கும், வீட்டு விஷேசத்திற்க்கும் ஏனைய முக்கியத் தேவைகளுக்கும் அவசியப் பொருளாய் இருந்து நம் வாழ்வில் ஒரு அங்கம் வகித்த இந்தப் பெட்ரோமாக்ஸ் லைட் அனைத்து இடங்களுக்கும் மின் இணைப்பு வந்ததும் இதன் வெளிச்சம் மங்கத் தொடங்கிவிட்டன. மக்கள் மறக்கத் தொடக்கி விட்டனர். இருந்தாலும் பழமையை நினைவு கூறுவது சிறந்த பண்பாடாகும். ஆகவே பழமையை மறவாது பொக்கிசமாய் எண்ணி நினைவுகூறுவோம்.
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval