Tuesday, December 23, 2014

மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் ! [ ஒரு நினைவூட்டல் ]


ஒருகாலத்தில் பாமரமக்கள் முதல் பெரும் செல்வந்தர்கள் வீடுவரை இந்த மண்பாண்டத்திலான பாத்திரவகைகள் தான் அதிகப் புழக்கத்தில் இருந்தது. பெரும்பாலும் சமையல் மற்றும் இதர தேவைகளுக்கு மண்பாண்டத்திலான பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் தான் அனைத்து வீடுகளிலும் பயன்பாட்டில் இருந்தது.

அதாவது தண்ணீர் குடம், பானை, தோன்டி, தொட்டி,சிட்டி, மூடி, களையான், அடுப்பு, ஆனச்சட்டி, ஆப்பச்சட்டி, சோத்துப்பானை, குடுவை, உண்டியல், குதுர் [ நெல், அரிசி சேமித்து வைக்கும் சாதனம் ] இப்படி இன்னும் பலவகையில் மண்பாண்டத்திலான பாத்திரங்கள் தான் அன்று பிரதானமாக புழக்கத்தில் இருந்தன. இன்னும் சொல்லப் போனால் மழலையர்களின் விளையாட்டுப் பொருள்கள் கூட மண்பாண்டத்தில் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மற்ற உலோகத்திலான ஈயம், பித்தளை, செப்பு அலுமினியம் போன்ற பாத்திரங்கள் அரிதாகவும் வேறு பெரிய தேவைகளுக்கு மட்டுமே பயன்பட்டு வந்தன. குறிப்பாகச் சொல்லப் போனால் வீட்டு சமையெலுக்கென மண்பாண்டப் பாத்திரத்தையே அதிகபட்சமாக பயன்படுத்தி வந்தனர்.

மண்பானைச் சோறும் மண்சட்டிக் குழம்பும் புகைபோட்ட குடத்துத் தண்ணீரும் கமகம மணத்துடன் அடடா..அதன் ருசியே தனிதான். அதைச் சுவைத்தவர்களுக்கே அதன் அருமை தெரியும். அதற்க்கு ஈடிணையான சுவையில் இன்று புழக்கத்திலிருக்கும் எந்தப் பாத்திரத்தில் சமைத்தாலும் அச்சுவை கிடைப்பதில்லை என்றே சொல்லலாம்.

மண்பாண்டத்திலான பாத்திரத்தில் சமைக்கும்போது உணவு எளிதில் கெடுவதில்லை மாறாக சுவையையே கூடுதலாகத் தரும்.குளிர்சாதனப் பெட்டி என்று ஒரு நவீன சாதனம் அறிமுகமாகாத அக்காலத்தில் மண் பாண்டத்தில் சமைத்த உணவை 2,3 நாட்கள்வரை வைத்து மீண்டும் மீண்டுமாகச் சுடவைத்து சாப்பிடுவார்கள்.

மண்பாண்டத்தில் சமைத்துச் சாப்பிட்ட நமது முன்னோர்கள் நூறு வயதைக் கடந்தும் நல்ல ஆரோக்கியத்துடனும் திடகாத்திரத்துடனும் உயிர் வாழ்ந்தார்கள். காரணம் அன்றைய காலத்தில் சாப்பாட்டுப் பொருளும் சமைக்கும் பாத்திரமும் மனிதருக்கு கேடுவிளைவிக்காத இயற்கையுடன் சார்ந்து கலப்படமற்று இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்..

மண்பாண்டத்திலான பாத்திரங்கள் மற்ற உலோகத்திலான பாத்திரங்களை விட அனைத்து தரப்பினரும் எளிதில் வாங்கும்படியும் விலையால் குறைவாகவும் பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் இருந்தன.இன்னும் சொல்லப் போனால் மனிதர்களைக் கூட ஏழை பணக்காரர்,உயர்ந்தவன் தாழ்ந்தவன் என இரகம் பிரிக்காமல் எல்லோரையும் இப்பாத்திரத்தில் சமைத்து சாப்பிட வைத்து அனைவரையும் ஒன்றுபடுத்தி வைத்திருந்தன.என்று கூடச்சொல்லலாம். .

இப்படிப் பலவகையிலும் பயனளித்துவந்த மண்பாண்டப் பாத்திரங்கள் நவீனங்களும், நாகரீக வாழ்க்கையும் தலைதூக்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக மறையத்தொடங்கி விட்டன. புதுப்புது கண்டுபிடிப்புக்களின் ஆதிக்கம் ஆரம்பமாகி சில்வர், அலுமினியம்,பித்தளை, செப்பு,என உலோகத்திலான பாத்திரங்கள் வண்ணவண்ண வடிவம் பெற்று புதுப்புது பெயரைத் தாங்கிக் கொண்டு பளபளப்புடன் வரத்தொடங்கி மண்பாண்டங்களை உடைத்தெரிந்து விட்டன என்றே சொல்லலாம்.

ஒருகாலத்தில் குடிசைத் தொழிலாக சிறுமுதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மண்பாண்டப் பாத்திரத் தொழில் இன்றைக்கு ஈயம், பித்தளை, சில்வர், அலுமினியம் போன்ற உலோகப் பொருளாக உருமாறி பெருமுதலீட்டில் பெரும் தொழிற்ச்சாலைகளை உருவாக்கி தயாரிக்கப்பட்டு பெருந்தொழிலாக மாறிவிட்டன.வீட்டுப்பயன்பாட்டின் பாத்திரத்திற்க்கான இடத்தை உலோகப்பொருட்களால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் தக்கவைத்துக் கொண்டு மண்பாண்டப் பாத்திரங்களை முற்றிலும் மறையச்செய்து விட்டன மக்களும் மறக்கத் தொடங்கி விட்டனர்.

இன்றைக்கு நகர்ப்புறங்களில் பெரும்விளம்பரத்துடன் உலோகத்திலான பாத்திரக்கடைகள் துவங்கப்பட்டு பெருவியாபாரமாக நடைபெற்றுக் கொண்டு இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.மண்பாண்டப் பாத்திரங்கள் மறையத் தொடங்கினாலும் இன்னும் அதன் வாசனை மாறாமல்தான் இருக்கிறது என்று சற்று ஆறுதலடையும் வகையில் சில உயர்தர அசைவ உணவகங்களில் விலை உயர்ந்த உணவுகள் மண்சட்டியைப் பயன்படுத்தி கடாய்ச்சிக்கன், கடாய் மட்டன் என பெயரிட்டு பிரத்தியேகமாக தயாரித்து சுடசுட சாப்பிடும் இடத்திற்கே மண் சட்டியோடு கொண்டுவந்து வழங்கப்படுகிறது. இன்னும் சில இடங்களில் மோர்ப்பானையும், ஒரு சில அலுவலங்கள் ஒருசில வீடுகளில் மண்குடத்தில் தண்ணீரும் வைத்து ஒருசில மண்பாண்டங்களை மறக்காமல் புதுமையோடு சேர்த்து வைத்திருப்பது சற்று ஆறுதலாக உள்ளது.

பழமைகளை சற்று திரும்பிப் பார்ப்போம்...!!!
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval