Tuesday, December 23, 2014

போலி ஆவணங்களின் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற தெலுங்கானா விவசாயி சென்னையில் கைது


போலி ஆவணங்களின் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற தெலுங்கானா விவசாயி சென்னையில் கைதுகாலாகாலத்தில் பெய்ய வேண்டிய பருவ மழை சில ஆண்டுகளில் பொய்த்தும், பல ஆண்டுகளில் பெருக்கெடுத்தும் பெய்வதால் விவசாயத்தில் தொடர்ந்து இழப்பை சந்தித்து வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயியான கேசவ்ராவ் கஞ்சட்டி என்பவர் வாழ வழியறியாமல் வேதனையில் வாடி வந்தார்.

அவரது நிலையை கண்டு பரிதாபப்பட்ட சிலர், ‘பேசாமல் ஏதாவது வெளிநாட்டுக்குப் போய் கூலி வேலை செய்து பிழைப்பது தானே..,’ என்று அவரை உசுப்பேற்றி விட்டனர். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் வேண்டுமே என்று அவர் யோசிப்பதை அறிந்த சில நண்பர்கள் ஐதராபாத்தில் உள்ள ஒரு பாஸ்போர்ட் ஏஜெண்ட்டை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.

கேசவ்ராவ் கஞ்சட்டியிடம் பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அவற்றை போலியாக தயாரித்து தருவதற்கு அந்த ஏஜெண்ட் 25 ஆயிரம் ரூபாய் பேரம் பேசினார். கேசவ்ராவ் கஞ்சட்டியும் அதற்கு சம்மதித்து பணத்தை தந்தார்.

இதனையடுத்து, போலி ஆவணங்கள் மூலம் அவருக்கு அந்த ஏஜெண்ட் பாஸ்போர்ட்டை தயாரித்து தந்தார். அந்த பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவுக்கு செல்லும் ஆசையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா பெறுவதற்காக அவர் தனது மனைவியுடன் நேற்று வந்திருந்தார்.

அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை ஆய்வு செய்த போது அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலிச் சான்றிதழ்கள் மூலம் பாஸ்போர்ட் எடுத்து, அமெரிக்காவுக்கு செல்ல விசா கேட்டு வந்த கேசவ்ராவ் கஞ்சட்டி சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரையும் அவரது மனைவியையும் காவலில் வைத்து விசாரித்து வரும் போலீசார் தலைமறைவாக இருக்கும் ஐதராபாத் ஏஜெண்ட் ஹலிம் என்பவரை தேடி வருகின்றனர்.
courtesy;Malaimalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval