Friday, February 3, 2017

கலாசாரத்தைக் காத்த ‛தனி மனுஷி’... தேடி வந்தது பத்மஸ்ரீ!

பத்மஸ்ரீ விருது வென்ற சுக்ரிஜிபத்மஸ்ரீ விருது வென்ற பேட்மின்டன் வீராங்கனை சிந்துவை தெரியும். மல்யுத்த வீராங்கனை சாக்ஷியைத் தெரியும். சுக்ரி பொம்ம கவுடாவைத் தெரியுமா? நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஜல்லிக்கட்டு நமது கலாசாரம் என்று போராடுகிறோம். அதுபோல தன் இனத்தின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் காப்பற்ற பல ஆண்டுகளாக போராடி வரும் தனி மனுஷிதான் இந்த சுக்ரி.  எந்த இனமும் தன் கலாசாரத்தை இழந்து விடக் கூடாது, அதனைக் காப்பற்ற எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக வேண்டும் என்பதுதான் சுக்ரியின் கொள்கை. 
கர்நாடகாவின் வடக்கே அங்கோலா என்ற பகுதியில் ஹலாக்கி வொக்கலிக்க இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். சுக்ரியை அறிவதற்கு முன், ஹாலாக்கி வெக்கலிக்க இன மக்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஹலாக்கி இன மக்கள் வயல்வெளிகளில் கடுமையாக உழைப்பார்கள். எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள். நாட்டுப்புற பாடல் இவர்களது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. ரத்தத்துடன் கலந்தது .பாட்டும் இசையும்தான் வாழ்க்கை. குழந்தை பிறந்தாலும் பாட்டு,  துக்க வீட்டிலும் பாட்டு, இப்படி என்ன விசேஷம் என்றாலும் பாட்டுதான். உண்மையை மட்டும்தான் நம்பினர். பூமிதான் தாய். தாயை காப்பற்றினால், அவள் நம்மைக் காத்தருள்வாள் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 
கால ஓட்டத்தில் நம்மைப் போலவே ஹலாக்கி இனத்தின் இளைய தலைமுறையும் கலாசாரத்தை மறந்தது. நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டது. தாய் மண்ணை விட்டு நகரத் தொடங்கியது. நாட்டுப்புறப் பாடல்கள் என்றால் என்ன? நாட்டுப்புற இசை என்றால் என்ன என கேள்வி எழுப்பியது.
கழுத்தில் ஏராளமான பாசிமணிகளை அணிவதும் ஹலாக்கி வொக்காலிக்க இனப் பெண்களின் வழக்கம். அதுவெல்லாம் வழக்கொழியத் தொடங்கியது. சொல்லப் போனால், பாசி மணிகள் அணிவதைக் கூட அவமானமாகக் கருதியது இளைய தலைமுறை. இதுநாள் வரை கட்டிக்காத்த கலாசாரம், தன் கண் முன்னே காலாவதியாவதைப் பார்த்து கலங்கி நின்றார் 75 வயது சுக்ரி.  
ஆனால் சுக்ரியின் சொந்த வாழ்க்கை அதைவிட கலக்கம் நிறைந்தது. பதினாறு வயதில் 45 வயது மனிதருக்கு பொம்மகவுடாவை திருமணம் செய்து வைத்தனர். இரண்டு குழந்தைகள் பிறந்தன. சில வருடங்களில் கணவரையும் குழந்தைகளையும் இழந்தார். ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்தார். அந்த மகனும் மதுப் பழக்கம் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு இறந்தார். தற்போது தாயுடன் வசித்து வருகிறார் சுக்ரி. 
துயரம் நிறைந்த சொந்த வாழ்க்கையில் இருந்து மீண்டு கலாசாரத்தை மீட்டெடுக்கப் போராடினார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ளார். அந்த ஏரியாவில் இவரது பாடல்கள் பிரபலம். அந்தப் பாடல்களை தங்கள் இன பெண்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். கலாசாரத்தின் முக்கியத்துவத்தை தங்கள் இனத்தவருக்குப் புரிய வைத்தார். ஒரு குழுவாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அந்தக் குழுவுக்கு சுக்ரிதான் தலைவி. மகன் மதுப் பழக்கத்துக்கு அடிமையாக இறந்ததால், மதுவுக்கு எதிராகவும் போராடி வருகிறார்.                                                       
தங்கள் இனத்தின் கலாசாரத்தைக் காக்க போராடிய சுக்ரிக்கு சமீபத்தில், மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. இதற்கு முன் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார் சுக்ரி. கன்னடப் பாடப்புத்தகங்களிலும் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் எழுத படிக்கத் தெரியாது. தன்  பாடல்களை ரெக்கார்டிங் செய்வது கூட அவருக்கு பிடிக்கவில்லை. செய்முறை மூலமே எதையும் செய்ய வேண்டுமென நம்புகிறார். இவரது பாடல்கள் சமீபத்தில்தான் ரெக்கார்டு செய்யப்பட்டன. தங்கள் தலைமுறைக்குத் தாங்களே அதனை கற்றுக் கொடுக்க வேண்டுமென்பது அவரது ஆசை. தனக்கு பின்னாலும் இந்த சேவை தொடர வேண்டுமென விரும்புகிறார்.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval