Sunday, November 11, 2018

எவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் !

Inline image
அதிகாலை ஆறு மணி . அந்த விடியல் பொழுதிலும் பரபரத்துக்கிடக்கிறது சென்னை திருவான்மியூரில் உள்ளா டாக்டர் ஜெயராஜின் கிளினிக் . இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய அறையில் , நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் , பெண்களும் , முதியவர்களும் வாடிய முகத்துடன் அமர்ந்திருக்க , இன்னொரு பகுதியில் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து கனிவாகப் பிரச்னைகளைப் பேசியபடி பொறுமையாகச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார் ஜெயராஜ் . இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா ? ஜெயராஜ் ஏழைகளிடம் சிகிச்சைக்கானப் பணத்தைத் துளியும் வாங்காத அபூர்வ மருத்துவர் . அதுமட்டுமல்ல . வசதியானவர்களிடம் கூட எதையும் எதிர்பார்க்காதவர் .

இப்படியும் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என ஆச்சரியப்பட வைக்கும் இந்த மனிதநேயரை ஒரு காலைப் பொழுதில் சந்தித்தோம் .

“ 2007ல் இருந்து இந்தக் கிளினிக்கை நடத்துறேன் . குறிப்பா , பள்ளிக்குழந்தைகள் , பணிபுரியும் பெண்கள் , ஐடி துறையினருக்கு இது ஸ்பெஷல் கிளினிக் " என உற்சாகமாக பேசும் ஜெயராஜ் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் மருத்துவ இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . தமிழகத்தின் முதல் தொழிற்சாலை மருத்துவர் என்பது மட்டுமல்ல இவரின் சிறப்பு . Occupational Medicine எனப்படும் தொழிற்சார்ந்த மருத்துவத்தில் எம் . எஸ் . சியும் , பி . ஹெச்டியும் முடித்த ஒரே மருத்துவரும் இவர்தான் . தற்போது இந்தக் கிளினிக் தவிர தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகவும் , பெரிய மருத்துவமனைகளில் ஆலோசகராகவும் பணி செய்கிறார் .

Inline image

" என் சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் பிரம்மபுரம்னு ஒரு கிராமம் . ஆனா , அப்பா கோலார் தங்க வயல்ல வேலை பார்த்ததால் குடும்பத்துடன் அங்க செட்டிலானோம் . நான் பொறந்தது வளர்ந்தது . படிச்சது எல்லாம் கோலார்லதான் . 1973ல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில எம் . பி . பி . எஸ் . , முடிச்சேன் . அந்த வருஷமே நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துல வேலைக்கு விளம்பரம் வந்துச்சு . தற்காலிகப் பணிதான் . அங்கபோய் சேர்ந்த ரெண்டாவது நாள்லேயே பிரச்னை . அந்த அனுபவமே என்னை இந்தளவுக்கு கொண்டு வந்திருக்கு " என ஒரு ஓப்பனிங் கொடுத்தவர் தொடர்ந்தார் .

" அந்த பிரச்னை சேர்மன் அளவுக்குப் போச்சு . அவர் இதைக் கேள்விப்பட்டதும் தலைமை “ மருத்துவர்கிட்ட ' இவருக்கு அஞ்சு புரோமோஷன் குடுங்க . மருத்துவத்துடன் பிரச்னையை தைரியமா கையாளத் தெரியிற டாக்டர்தான் நமக்குத் தேவை ' னு சொன்னார் . எனக்கு அப்பதான் நிறைய நம்பிக்கை வந்துச்சு . என்னை நிறுவனம் முழுவதும் ரொம்ப மரியாதையா பார்க்க ஆரம்பிச்சாங்க . நானும் எல்லோர்கிட்டயும் சகஜமா பழகினேன் . இதனால் , இருபத்தி மூணு வயசுலயே நிர்வாகப் பணிக்கு நியமிக்கப்பட்டேன் , ” என்கிற இவர் 
தொழிற்சாலை மருத்துவப் பணிதொடர்பாக கல்கத்தாவுல ஒன்றரை வருஷ டிப்ளமோவும் அப்புறம் , 1985ல் உலக தொழிலாளர் நிறுவனம் ஸ்பான்சர் ஷிப்பில் லண்டனிலும் படித்துள்ளார் . “ இந்தியா வந்ததும் சுற்றுச்சுழல் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரவும் , தொழிற்சாலை விதிகள்ல மாறுதல் ஏற்படவும் நான் ஒரு காரணமானேன் ” எனப் பெருமையோடு குறிப்பிடும் ஜெயராஜ் இன்று இந்தியாவிலுள்ள அனைத்து தொழிற்சாலை மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து ஒரு சங்கமும் அமைத்துள்ளார் .

“மனைவி ஒரு சைக்காலஜிஸ்ட் . அவங்க இல்லைன்னா என்னால இவ்வளவு தூரம் பயணிச்சிருக்க முடியுமானு தெரியல . ஓய்வு பெற்று வந்ததும் இங்க கிளினிக் ஆரம்பிக்கக் அவங்களும் ஒரு காரணம் . இந்த ஏரியாவுல ஒருபக்கம் ரொம்ப வசதியானவங்களும் , இன்னொரு பக்கம் நடுத்தர , ஏழை மக்களும் வாழ்றாங்க . இதுல ஏழைப் பெண்கள் பலரும் இங்குள்ள வச் தியானவர்கள் வீடுகள்ல வேலை பார்க்குறாங்க . கை , கால் வலி , காய்ச்சல்ன்னா என் வீட்டுக்கு வருவாங்க . இதனால் , தனியா ஒரு கிளினிக் போடலாம்னு முடிவெடுத்தேன் . இரவு நேரம் நோயால் அவதிப்படுறவங்க காலையில சீக்கிரமே பார்க்கணும் நினைப்பாங்க . ஏன்னா , எல்லோருமே மருந்து சாப்பிட்டுட்டு வேலைக்குப் போனாதான் அன்றைய பொழுதை ஓட்டமுடியும் . இல்லையா ? அதனால் , காலையில ஆறு மணிக்கே கிளினிக் திறந்தேன் . பிறகு , சாயங்காலமும் பார்க்க ஆரம்பிச்சேன் . ஆனா , மருத்துவத்திற்கு யார்கிட்டயும் காசு வாங்கக் கூடாதுனு உறுதியா இருந்தேன் ” என்கிறவருக்கு இலவச சிகிச்சை வேண்டாமென மக்களிடம் இருந்தே அழுத்தம் வந்தது . சிலர் ஒரு ரூபாய் , இரண்டு ரூபாயெல்லாம் கொடுத்து வாங்கிக்கொள்ளுமாறு நெகிழ்வுடன் வேண்டியிருக்கிறார்கள் .

“ இந்த விஷயங்களை வேலை செய்ற வீடுகள்ல இவங்க சொல்ல , அந்த வீட்டு உரிமையாளர்களே நேரா எங்கிட்ட வந்து , " நீங்க அவங்களுக்கு இலவசமா மருத்துவம் செய்ய வேண்டாம் . நாங்க அதுக்கான பணத்தை தந்திடுறோம் ' னு சொன்னாங்க . அப்புறம் , அந்த வீட்டு உரிமையாளர்களும் எங்கிட்ட மருத்துவம் பார்க்க ஆரம்பிச்சு ரொம்ப நண்பர்களா ஆகிட்டாங்க . இருந்தாலும் இப்ப வீட்டு வேலை செய்றவங்களுக்கும் , உடலாலும் , மனதாலும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவசமாதான் மருத்துவம் செய்றேன் . பணம் கொடுத்தாலும் வேண்டாம்னு மறுத்திடுவேன் . மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு வசதி யானவங்களா இருந்தாலும் சரி . இது என் தர்மம் , " என்கிற ஜெயராஜ் லீவு நாட்களில் முழு நேரமும் கிளினிக்கை திறந்து வைத்திருக்கிறார் . எதற்காக ? எனக் கேட்டோம் .

" எந்த லீவு நாட்கள்லயும் முழு நேரமும் பணி செய்வேன் . குறிப்பா , தீபாவளி மாதிரியான பண்டிகை நாட்கள்ல இங்கேயேதான் . ஏன்னா , அந்த மாதிரியான நேரங்கள்ல விபத்துகள் அதிகம் நடக்கும் . அதனால் , எப்பவும் இருப்பேன் , " என்கிற ஜெயராஜ் பெரிய விபத்துகள் ஏற்பட்டால் இங்கே முதலுதவி அளித்துவிட்டு பின்னர் பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுகிறார் . தன் நோயாளிகளின் எண்ணை வாங்கிக் கொள்ளும் இவர் மறுநாளே போனில் அழைத்து குணமாகிவிட்டதா எனக் கேட்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் .

" நம்மால இந்தச் சமூகத்துக்கு என்ன முடியுமோ அதைச் செய்யணும் . அவ்வளவுதான் , " என நெகிழ்கிறார் இந்த மனிதநேய மருத்துவர் .

படித்ததில் பிடித்தது.....

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval