படித்ததில் வலித்தது,
தந்தை ஓடிப்போனார், தாய் புற்றுநோயால் மரணம்...
- ஓர் நிஜ ஹீரோ!
- ஓர் நிஜ ஹீரோ!
“நான் அன்னைக்கு வெல்டிங் பட்டறையில் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். ‘அம்மா செத்துடுச்சி’ன்னு என்னுடைய கடைசித் தம்பி வந்து சொன்னான். அழுதுக்கிட்டே வீட்டுக்கு ஓடியாந்தேன். ஒரே ஆறுதலாக இருந்த அம்மாவும் செத்துடுச்சி. இனிமேல் நம்மளை யார் பாத்துக்குவாங்கன்னு நினைச்சு அழுதேன்” என்ற மாரியப்பன் கண்களில் இப்போதும் கண்ணீர் வழிகிறது. இது எந்த ஒரு சமூக வலைதளத்திலும் வைரல் ஆன கதை அல்ல. ஈரோடு நகரில் ஒரு சிறிய அறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐந்து சகோதர, சகோதரிகளைக் காக்கும் ஓர் இளைஞரின் கண்ணீர் கதை.
மாரியப்பன் தொடர்ந்து பேசினார். “எங்க அப்பா எட்டு வருஷத்துக்கு முன்னாடி வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு ஓடிப்போய்ட்டார். இப்ப அவர் எங்க இருக்காருன்னு தெரியல. எங்க அம்மா மீனாட்சி, குப்பை பொறுக்கி, அதை வித்து எங்களைப் பாத்துக்கிச்சி. எனக்கு பண்ணாரி (18), நாகராஜ் (14), தேவி (12), கார்த்திகாயினி (10), ஆறுமுகம் (8) என மொத்தம் 5 தம்பி, தங்கச்சிங்க” என்று அவர்களை அறிமுகப்படுத்தினார் மாரியப்பன். ஈரோடு மல்லி நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில், 300 சதுர அடிக்கும் குறைவான சின்ன அறையில்தான் அவர்கள் வாழ்கின்றனர்.
‘‘‘எனக்கு அப்புறம் புள்ளைங்களை நீ தாண்டா பாத்துக்கணும்னு’ அம்மா சொல்லும். வெல்டிங் பட்டறையில வாரம் 1,200 சம்பளம். ஞாயிற்றுக்கிழமை பட்டறை லீவு. அன்னைக்குப் பனியன் குடோனுக்கு வேலைக்குப் போறேன். அன்னை சத்யா நகர் ஹவுசிங் போர்டு சொந்த வீட்டுல இருந்தோம். வீடுங்க பழசாகிடுச்சின்னு, அதை இடிச்சிட்டு அரசாங்கத்துல புதுசா கட்டிக்கிட்டு இருக்காங்க. அதுக்கு 70 ஆயிரம் கட்டணும்னு சொன்னாங்க. பேப்பர் பொறுக்கி வித்த காசுல, 25 ஆயிரத்தை அம்மா கட்டுச்சி. ‘மிச்ச காசையும் கட்டிட்டா, ஏழு பேரும் புது வீட்டுக்குப் போகலாம்னு’ அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கும். ஆனா, அதுக்குள்ள அம்மா இறந்துடுச்சி. எங்க அம்மா இருந்திருந்தா முழுக் காசையும் கட்டிருக்கும். எப்படியாவது கடனை வாங்கியாவது வீடு வாங்கணும். எங்க அம்மாவோட ஆசை அது” என அழுகையை அடக்கிக்கொண்டு பேசினார்.
இடைமறித்த மாரியப்பனின் தங்கை பண்ணாரி, “ஒரு நா அம்மா வயிறு வலி தாங்க முடியலைன்னு அழுதுச்சி. ஈரோடு ஜி.ஹெச்-க்குக் கூட்டிட்டுப் போனோம். டாக்டர்ங்க, ‘உங்க அம்மாவுக்குக் குடல்ல கேன்சர் இருக்கு. ஏன் இத்தனை நாளா கூட்டிட்டு வரலைன்னு’ திட்டுனாங்க. ‘உங்க அம்மாவைக் காப்பாத்துறது கஷ்டம். வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடுங்கன்னு’ சொல்லிட்டாங்க. ‘நான் செத்துப் போயிட்டா என் புள்ளைங்களை யார் பார்த்துக்குவாங்க’ன்னு அம்மா அழ ஆரம்பிச்சிடுச்சி. வீட்டுக்கு வந்து ஒரே வாரத்துல அம்மா செத்துப்போயிடுச்சி” எனக் கண்ணீர் வடித்தார்.
9-ம் வகுப்பு படிக்கும் மாரியப்பனின் தம்பி நாகராஜுக்கு போலீஸ் ஆகவேண்டும் என ஆசை. ‘எனக்கு நர்ஸ் ஆகணும்னு ஆசை. எங்க அம்மா மாதிரி யாருக்கும் வரக்கூடாது. முடியாதவங்களுக்கு ஊசி போட்டு, அவங்க உடம்பை சரி செய்யணும்’’ என மனதில் இருக்கும் வலியை வார்த்தைகளில் கூறினார் 7-வது படிக்கும் தேவி. கார்த்திகாயினிக்கு, அவளுடைய டீச்சர் மாதிரி ஆக வேண்டுமாம்.
‘‘எனக்கு மிலிட்டரிகாரங்க மாதிரி ஆகி, நாட்டை காப்பாத்தணும்னு ஆசை’’ எனக் கடைக்குட்டியான ஆறுமுகம் தன்னுடைய ஆசையை வெட்கத்துடன் சொல்லிவிட்டு ஓடினான்.
அவர்களையே பார்த்துக்கொண்டு உதடு பிரியாமல் சிரித்தார் மாரியப்பன்.
அது சிரிப்பல்ல...
நம்பிக்கை....
நம்பிக்கை....
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval