Thursday, July 10, 2014

இன்றய ஹதீஸ்

quran : A design of the holy quran spelled in Arabic and isolated on a white background
4341. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்
உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் (வெளியூருக்குப்) புறப்பட்டுச் சென்றிருந்தபோது,அக்குழந்தை இறந்து விட்டது. அபூதல்ஹா (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது ”என் மகன் என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். (அவருடைய துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (துக்கத்தை வெளிக் காட்டாமல்) ”அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்” என்று பதிலளித்துவிட்டு, கணவருக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் இரவு உணவை அருந்தினார்கள். பிறகு (அன்றிரவு) மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். உறவு கொண்ட பின், உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (தம் கணவரிடம்), ”குழந்தையை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்” என்று கூறினார்கள். (அப்போதுதான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குக் குழந்தை இறந்த விவரமே தெரிந்தது.) விடிந்ததும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இன்றிரவு தாம்பத்திய உறவில் ஈடுபட்டீர்களா?” என்று கேட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், ”ஆம்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இறைவா! அவர்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) வழங்குவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். பின்னர் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஆண் மகவொன்றைப் பெற்றெடுத்தார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், ”குழந்தையை எடுத்துக்கொண்டு (நேராக) நபி (ஸல்) அவர்களிடம் செல்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். (அப்போது) என்னிடம் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு, ”இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?” என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள், ”ஆம், பேரீச்சம் பழங்கள் உள்ளன” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவற்றை வாங்கி (தமது வாயால்) மென்று, பிறகு தமது வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவலானார்கள். குழந்தைக்கு ”அப்துல்லாஹ்” எனப் பெயர் சூட்டினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 38. நற்பண்புகள்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval