மாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று கடந்த 5.1.1994 அன்று ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் அனைத்து மாவட்ட கோர்ட்டுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீல் கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இருந்த போதிலும், அந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படவில்லை.
இதைத் தொடர்ந்து அந்த சுற்றறிக்கை தமிழ் ஆட்சி மொழி சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்து விட்டு மாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்றும் உத்தரவிடக்கோரி வக்கீல்கள் ரத்தினம், சோலைசுப்பிரமணியன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
தமிழ் ஆட்சி மொழி
இந்த மனுக்கள் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் 1956-ம் ஆண்டு ஆட்சி மொழி சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியானது.
சட்டத்திருத்தம்
ஆனால், நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வில்லை. இதைத் தொடர்ந்து 1976-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, மாவட்ட கோர்ட்டுகளில் சாட்சி விசாரணை தமிழில் தான் நடக்க வேண்டும். தீர்ப்புகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது தான் அந்த திருத்தம் ஆகும்.
இந்த சட்டத்திருத்தம், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே, அந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வக்கீல் ரெங்கா என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்பு, தமிழை தாய் மொழியாக கொண்டிராத மாவட்ட கோர்ட்டு நீதிபதிகள் தங்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ரத்து
அதன் அடிப்படையில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு எடுத்த முடிவின் படி ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் மாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில், தமிழ் தெரியாத நீதிபதிகளுக்கு தமிழில் தீர்ப்புகளை எழுத குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு நிரந்தரமான ஒன்றாக உள்ளது. இந்த உத்தரவு, தமிழ் ஆட்சி மொழி சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
தேர்ச்சி பெற வேண்டும்
தமிழை தாய்மொழியாக கொண்டிராதவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் போது தமிழ்நாடு சார் நிலை பணியாளர் பொது விதிகள்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் மொழி தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்ச்சி பெற வேண்டும். தமிழை தாய்மொழியாக கொண்டிராத நீதிபதிகள், இந்த விதிப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம், “மாவட்ட கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும்” என்பது குறிப்பிடத்தக்கது.
courtesy;todayindia.info
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval