கடந்தவாரத்தில் அரசு அதிகாரி
ஒருவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தபொழுது ,
"சார் , வேலைல நான் பர்பெக்ட். என்னோட வேலைய இழுத்தடிக்கமாட்டேன். அதே சமயம் ரொம்ப புவர்ன்னா ( எளிய மனிதர்களை சொல்கிறார்...) குடுக்கறத வாங்கிக்குவேன். ஆனா பசையுள்ள பார்ட்டின்னா கறாரா வசூல் பண்ணிடுவேன். இருக்கறவங்கதானே..கொடுக்கட்டுமே...என்ன சார் ..சரிதானே?" என்று தன்னை ஒரு பெரிய நியாயஸ்தாரக, நேர்மையான(??) மனிதராக அவர் காட்டிக்கொள்ள முற்பட்டபொழுது சிரிப்புதான் வந்தது.
ஆமோதிக்கும்விதமாய், தலையை ஆட்டினேன். வேறென்ன செய்ய..?
அன்பளிப்பு வாங்குவதே தவறு. ஆனால் அதில் நியாய தர்மம் வேறு பார்ப்பதாக சொல்வதை என்னவென்று சொல்வது?
அதைவிட, இப்பொழுதெல்லாம் அரசு அலுவலகத்தில் ஏதாவது ஒரு வேலைக்காக போய், அந்த வேலையை முடித்த பிறகு சம்பந்தப்பட்ட அரசு பணியாளர் , தலையை சொறியாமல் இருந்தால் கூட (மேஜைக்கு அடியில் கையை நீட்டாத நேர்மையான மனிதராக இருப்பவரை சொல்கிறேன் ) நாமாக வலியப்போய் , "சார் , என்ன பார்மாலிட்டீஸ்? " என்றோ , " சார்,எவ்ளோ?" என்றோ கேட்காமல் வந்துவிட்டால் ஏதோ ஒரு தர்மசங்கடமான சூழலில்
மாட்டிக்கொண்டதுபோல , மனது கிடந்து அடித்துக்கொள்கிறது.
அவ்வளவு தூரம் , "ஊழல் என்பது இயல்பானது. அவர்கள் கேட்காமல் விட்டாலும் ,நாமதான் கேட்டு தரவேண்டும் " என்கிற அளவில் ஒரு சுய வேலை செய்பவராக(Self employed) அரசு அலுவலர்களை பார்க்கிற மனோநிலைக்கு வந்துவிட்டோம்...
"இலஞ்சம் வாங்குவது குற்றம்; தருவது பெருங்குற்றம்" என்பதுபோய் " இலஞ்சம் வாங்காமலிருப்பது குற்றம்; கேட்காவிட்டாலும் தராமலிருப்பது பெருங்குற்றம்" என்பதே பொருத்தமாயிருக்குமென்று நினைக்கிறேன்.
"வாழ்நாளில் எந்த ஒரு இடத்திலும்,எந்த ஒரு சூழலிலும், எந்த ஒரு காரணத்திற்காகவும், எந்த ஒரு விதமாகவும் ஒத்தை பைசா கூட நான் இலஞ்சமாக கொடுத்ததில்லை.வேறு யார் மூலமாகவும் தந்ததில்லை " என்கிற மனிதர் யாராவது இருந்தால் அவர்தான் இந்த நூற்றாண்டின் அதிசயமனிதராய், தேவதூதராய்... இருக்கமுடியும்.. அப்படிப்பட்ட அதிசயமனிதர் யாராவது நம்மிடையே இருக்கிறார்களா... என்ன ?!!
Thank You ; முருகானந்தன்
பதிப்புரை N.K.M.புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval