வாழ்க்கையில் ஏற்படும்
வறுமையை நீக்க
வட்டிக்கு பணமெடுக்கும்
வெட்டிமனிதன் மட்டுமல்ல
கடன்காரன்
வானுயர செல்வமிருந்தும்
வீண்விரயம் செய்தபோதும்
வறுமைக்கு கொடுத்துதவி
மறுமைக்குத் தேடிக் கொள்ளாதவன்
கடன்காரன்
கடமைகள் ஆயிரமிருந்தும்
மடமையின்பால் மூழ்கிருந்து
உடமையும் உணர்வையும் இழப்பவன்
கடன்காரன்
மதிகெட்ட நடத்தையிலே
கதியற்று நிர்க்கதியாய்
துணையற்று போனவன்
கடன்காரன்
மனிதாபிமானம் இல்லாதவரும்
மறுமையை நினைக்காதவரும்
புனிதனாக வாழாதவரும்
புண்ணியம் தேடிக்கொள்ளாதவரும்
கடன்காரன்
எந்நிலையானாலும்
தன்னிலை மறந்து
ஏகபோக சிந்தனைகள்
யாவையும் மறந்து
மண்ணறை போகும்வரை
மக்கள் மனத்தில் நில்லாதவன்
கடன்காரன்
ஆண்டவனின் சன்னதியில்
அனைத்துலக மனிதனுமே
மாண்டபின்பு மதியுணர்ந்து
மன்றாடி நிற்கும் அனைவரும்
கடன்காரர்களே
அதிரை மெய்சா
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval