Tuesday, June 13, 2017

மத நல்லிணக்கம்

நேற்று இரவு 11 மணிக்கு, ஹைதராபாத் நகரத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு ஓலா டாக்சி புக் பண்ணினேன். முகமது என்று ஒரு மூத்த ஓட்டுநர் வந்தார். ஹாலிவுட் நடிகர் ஆன்டனி ஹாப்கின்ஸ் போலிருந்தார், ஆனால் ரொம்ப களைப்பாக.

கொஞ்ச தூரம் சென்றதும் அவருக்கு ஒரு ஃபோன் வந்தது. மறுமுனையில் ஒரு ஆண்குரல் பேசுவது கேட்டது.
பின்னர் அவர் ஃபோனை கட் பண்ணாமலே என்னிடம் திரும்பி, `சார், நான் விமான நிலையம் வந்துட்டு வந்தா ரொம்ப லேட் ஆய்டும்; ஒங்கள மெஹந்திபட்டினத்தில் விட்டுடறேன்; வேற டாக்சி புடிச்சி போயிடறீங்களா?' என்றார்.
`முடியாது; நான் புக் பண்ணும்போதே விமான நிலையம் போகணும்னுதானே புக் பண்ணினேன்; நீங்க கன்ஃபர்ம் பண்ணி வந்து்ட்டு, இப்படி பண்ணினீங்க்னா எப்படி? நான் என் லக்கேஜ்லாம் எடுத்துட்டு அங்க நடுத்தெருவில் நிக்க முடியாது' என்றேன்.
`சரி' என்று என்னிடம் சொல்லிவிட்டு, ஃபோனில், `அவர் ஒத்துக்கல' என்றார். மறுமுனையில் ஏதோ சொன்னதும், ஃபோனை என்னிடம் கொடுத்து, `கார் ஓனர் பேசறாரு' என்றார்.
ஃபோனை வாங்கி, `ஹலோ' என்றேன் விறைப்பாக.
மறுமுனையில் பேசியவர், `சார், அவர் காலைலேருந்து ட்யூட்டி பாக்கறாரு; இன்னும் நோன்பு முடிக்கல. ஒரு ஆர்வத்துல இந்த ட்ரிப் எடுத்துட்டார். நீங்க மெஹந்திபட்டினத்தில் கட் பண்ணிட்டீங்கன்னா நல்லாருக்கும் ப்ளீஸ்' என்றார்.
`ரொம்ப சாரிங்க. நிலைமை தெரியாம பேசிட்டேன். நோன்பு முடிக்கலன்னு சொல்லியிருந்தார்னா, உடனே ஒத்துக்கிட்டு இருப்பேன். நான் மெஹந்திபட்டினத்தில் கட் பண்ணிடறேன்' என்றேன்.
`ஓக்கே சார். உங்களுக்கு அடுத்த வண்டி கிடைக்கிற வரை, அவர் அங்கேயே இருந்து உங்கள ஏத்தி விட்டுட்டுதான் வருவார்' என்றார்.
`அவசியமில்லை; நான் பாத்துக்கறேன்' என்று சொல்லி, ஃபோனை ஓட்டுனரிடம் கொடுத்தேன்.
`சரி, ஏத்தி விட்டுட்டு வந்துடறேன்' என்று ஃபோனில் சொல்லிவிட்டு, ஃபோனை கட் பண்ணினார்.
`உங்க கார் ஓனர் பேர் என்ன?' என்றேன்.
`ராஜேந்திரா' என்றார்.
(இந்த நல்லிணக்கத்தை சீர்குலைக்கத்தான் சில அரசியல் கட்சிகள், முன்னணிகள், சேனாக்கள் முயல்கின்றன)
- Victor Raj எழுதியது

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval