Friday, June 23, 2017

கொலை நகரமாக மாறி வரும் தலைநகரம்!

கொலை நகரமாக மாறி வரும் தலைநகரம்!சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னைக்கு, வேலைத்தேடி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணங்களும், சுகபோக வாழ்க்கையும் எளிய மக்களின் முன்பு, சென்னை மீதான கவர்ச்சியை பிரதானப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 25 நாட்களில் மட்டும் 13 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 27-ஆம் தேதி சாஸ்திரி நகரில், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி, சந்திரன் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினமே கீழ்பாக்கத்தைச் சேர்ந்த காவலாளி தேஷ் பக்தூர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதேபோன்று, கடந்த மாதம் 28ம் தேதி பட்டினப்பாக்கம் மாநகராட்சி திடலில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. 

பணத்துக்காகவும், சொத்து தகராறு காரணமாகவும் கூலிப்படைகளை ஏவி கொலைகள் செய்யப்படுகின்றன. கடந்த 30ம் தேதி பெசண்ட் சாலையில் ரியல் எஸ்டேட் தரகர் முகமது ஹனிப் கொலை செய்யப்பட்டார். இதேபோன்று, கடந்த 4ம் தேதி ஜோதிநகரை சேர்ந்த தொழிலதிபர் உதயபாலன் அவருடைய வீட்டிலேயே மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யபட்டு கிடந்தார். இந்த கொலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னையில், வீட்டில் தனியாக இருப்பவர்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது அச்சத்தை அதிகரித்துள்ளது. எம்.ஜி.ஆர்.நகர் அதிமுக பிரமுகர் சின்னகுமார், ஈக்காட்டுத்தாங்கல் ஆட்டோ ஓட்டுனர் பாலமுருகன் உள்ளிட்டோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதேபோன்று மாதவரத்தை சேர்ந்த தியாகராஜன் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கடந்த 25 நாட்களில் மட்டும் 13 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 
courtesy;News7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval