Thursday, March 5, 2015

மனிதநேயத்திற்கும் இரக்கத்திற்கும் எல்லையேது: இந்திய மாணவர்கள் 12 பேரின் ரத்த தானத்தால் உயிர் பிழைத்த பாகிஸ்தானியர்

மனிதநேயத்திற்கும் இரக்கத்திற்கும் எல்லையேது: இந்திய மாணவர்கள் 12 பேரின் ரத்த தானத்தால் உயிர் பிழைத்த பாகிஸ்தானியர் மனித நேயத்திற்கும், இரக்கத்திற்கும் எல்லை கிடையாது என்பது நாமெல்லாம் அறிந்ததே. அதற்கு உதாரணமாக மற்றுமொரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிப்பவர் அமன் லால் மக்கிஜா. அவரது கல்லீரல் திடீரென பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு சென்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு அந்நாட்டு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
மக்கிஜாவுக்கு தனது கல்லீரலை அவரது மைத்துனரான தில்ஷாத் அலி அளிக்க முன்வந்தார். இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துமனைக்கு மக்கிஜாவும், தில்ஷாத் அலியும் வந்து சேர்ந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கிஜாவின் அறுவை சிகிச்சைக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்பட்டது. இதையடுத்து புத்திசாலித்தனமாக செயல்பட்ட தில்ஷாத் அலி, மருத்துவமனைக்கு அருகே உள்ள இடங்களில் உடனடியாக ரத்தம் தேவை என்ற நோட்டீசை ஒட்டினார். இது சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வந்த மாணவர்களின் கண்களில் பட்டது. 12 மாணவர்கள் தங்களது ரத்தத்தை தானமாக தர முன்வந்தனர்.

சரியான நேரத்தில் மாணவர்கள் ரத்த தானம் செய்ததால், கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி மக்கிஜாவுக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. மாணவர்களின் உயர்ந்த குணத்தை மக்கிஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களான கே.ஆர். வாசுதேவன் மற்றும் அபிதீப் சவுத்ரி ஆகியோர் வெகுவாக பாராட்டினர். அதே போல் கல்லீரலை தானமாக தந்த தில்ஷாத் அலியையும் அவர்கள் பாராட்டினர். தற்போது மக்கிஜாவும், அலியும் நல்ல உடல் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் மருந்தகம் ஒன்றை நடத்திவரும் மக்கிஜா கூறுகையில், எனக்கு மறுபிறப்பு எடுத்ததை ஹோலி பரிசாக எண்ணுகிறேன் என்றார். தான் வசிக்கும் பகுதியில் 400 இந்து குடும்பங்கள் வசிப்பதாகவும், ஒரு போதும் தங்களுக்கும், அவர்களுக்கும் எவ்வித முரண்பாடும் தோன்றியதில்லை என்றார். இங்கு வசிக்கும் மக்களும், ரத்த தானம் செய்த மாணவர்களும் உதவும் மனப்பான்மையுடன் பெருந்தன்மையாக நடந்து கொண்டனர் என்றார்.

மனம் தெளிவாக இருந்தால், மதம் என்ற சொல் சதிராட்டம் போடாது என்பதையும், மனவேற்றுமையை விட மனித நேயமே அமைதியான வாழ்க்கையையும், மகிழ்ச்சியான எதிர்காலத்தையும் தரும் என்பதற்கும், இதை விட நல்ல உதாரணத்தை எப்படி கூற முடியும்
courtesy;malaimalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval