Thursday, March 5, 2015

எதையும் அலட்சியப்படுத்தாதீர் !?


மனிதன் இவ்வுலக வாழ்வை சீராக செம்மையாக நகர்த்திச்செல்ல ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் கவனமுடன் செயல்படுவது அவசியமாகிறது. அப்படி கவனமுடன் செயல்பட மிக முக்கியமாக நாம் எதையும் அலட்சியப்படுத்துதல் கூடாது.

அலட்சியப் போக்கினால் அன்றாடம் எத்தனையோ விபரீத நிகழ்வுகள் விபத்துக்கள் , உயிரிழப்புக்கள், உடமை இழப்புக்கள், பரிதாப நிகழ்வுகள் என பல வகை நிழ்வுகள் ஏற்ப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாமும் பார்த்துக் கொண்டும் கேள்விப்பட்டுக் கொண்டும் இருக்கிறோம்.சின்னச்சின்ன அலட்சியம் கூட சிலசமயம் பேராபத்தைக் விளைவித்துவிடும்.

இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒரு வாகன ஓட்டுனர் அலட்சியம் காட்டினால் விபத்துக்கள் ஏற்படுகிறது. ஒரு மருத்துவர் அலட்சியம் காட்டினால் உயிருக்கு ஆபத்தை ஏற்ப்படுத்துகிறது. ஒருபொறுப்பான அதிகாரி அலட்சியம் காட்டினால் முக்கியப் பணிகள் ஸ்தம்பித்துப் போகிறது. ஒரு ஆசிரியர் அலட்சியம் காட்டினால் மாணாக்களின் படிப்பு பாழாகிவிடுகிறது. இப்படி இன்னும்பல அலட்சியங்களின் காரணத்தால் தான் நாட்டில் எத்தனையோ அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

அதுமட்டுமல்ல ஒரு முக்கிய தகவல்களை முக்கியமாக கொண்டு சேர்க்கவேண்டிய மருந்துப் பொருள்களை சான்றிதல்களை அலட்சியப் படுத்துவதால் அவர்களின் வாழ்க்கையே கேள்விக் குறியாகி விடுகிறது.

விஞ்ஞானம் வளர்ந்து நவீனங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருப்பதால் மனிதனுக்கு அலட்சியப் போக்கும் அதிகரித்து விட்டன என்று தான் சொல்லமுடியும்.

சாதாரணமாக அலட்சியமாக நாம் நினைக்கும் சிலவற்றில் அடுத்தவர்களின் வாழ்க்கையே அடங்கியிருக்கும். இதை கொஞ்சம் உணர்ந்தோமேயானால் எதிலும் கவனம் செலுத்தி நடந்து கொள்வோம்.

நாம் எதையும் பெரிதாக பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தினால் நமது மூலையில் சிந்தனைத் திறன் குறைந்து கவனம் சிதறுண்டு போய் விடுகிறது. அதன் காரணமாக நாம் பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டியதாக உள்ளது. சில காரியங்களை செயல்படுத்தும் போது அதன் பின்விளைவுகளையும் நினைத்துப் பார்க்கவேண்டும். அப்படி பின்விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் அலட்சியப் போக்கில் செய்வதினால் பல அப்பாவிகளின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக ஆகிவிடுகிறது. மனதில் பொறுப்புணர்வு இருக்கும் யாவரும் ஒருபோதும் எந்த விசயத்திலும் அலட்சியம் கொள்ள மாட்டார்கள். ஒரு மனிதனுக்கு பொறுப்புணர்வும் , புரிந்துணர்வும் மிக அவசியமாக இருக்கவேண்டும்.

ஆகவே நாம் இவ்வுலக வாழ்வை இனிமையாய் கழிக்க மகிழ்வுற்று வாழ எந்த ஒரு விசயத்தையும் அலட்சியப் படுத்தாமல் இலட்சியம் கொண்டு பொறுப்புடனும்,புரிதலுடனும், கவனமுடனும் செயல் பட்டு மகிழ்வுடன் வாழ்வோமாக.!!!
அதிரை மெய்சா





No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval