Friday, March 27, 2015

பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) வீட்டில் நடந்த அற்புத கலந்துரையாடல்

handmade pottery blue crab pattern
பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) வீட்டில் நடந்த அற்புத கலந்துரையாடல்

ஒரு சமயம் அருமை பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமது தோழர்களான ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு), ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு), ஹஸ்ரத் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அனைவர்களையும் அழைத்துக் கொண்டு தனது அருமை மகள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள்.

காரணம் தன் மருமகன் ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உடல்நிலை சரி இல்லாமல் இருந்தார்கள். நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தலைமையில் ஒரு சிறிய கூட்டம் வருவதை படுக்கையில் இருந்த ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) புரிந்துகொண்ட பெரும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக எழுந்து வரவேற்று உள்ளே அழைத்து அமர வைத்தார்கள்.



உள்ளே இருந்த தன் அன்பு மனைவி பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் விஷயத்தை சொன்ன போது அவர்கள் உள்ளம் துள்ளிக் குதித்தது. ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் உடல்நலம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் விசாரித்தார்கள். விருந்தினர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே, ஹஸ்ரத் (அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், அருமை மனைவி பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் சென்று, “ஏதாவது உணவு இருக்கிறதா?” என்று விசாரித்தார்கள்.

“இப்போது நம் வீட்டில் தேன்தான் இருக்கிறது. அதை கொடுங்கள்” என்று அழகான பிரகாசமான கிண்ணத்தில் தேனை ஊற்றிக் கொடுத்தார்கள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள். அதை வாங்கி விருந்தினர்களின் முன் வைத்தார்கள் ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.

மகள் வீட்டின் தேனைப் பருகும்போது அதில் ஒரு முடி இருப்பதை கண்டு கொண்டார்கள் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள். சிறிது நேரம் கிண்ணத்தை உற்றுப் பார்த்து யோசித்து தம்முடன் வந்த தோழர்களைப் பார்த்து “அருமைத் தோழர்களே! இதோ பிரகாசமான கிண்ணம். இனிமையான தேன். அதில் ஒரு முடி, இதை வைத்து உங்கள் பொன்னான கருத்துக்களை சொல்லுங்களேன்’ என்று அன்புடன் வேண்டிக் கொண்டார்கள்.

முதலாவதாக தேன் கிண்ணத்தைக் கையிலெடுத்த ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘ஈமான் இந்த தேன் கிண்ணத்தை விட பிரகாசமானது. ஈமானோடு வாழ்வது தேனைவிட இனிமையானது. ஈமானோடு இறப்பது இந்த முடியைவிட சிக்கலானது” என்றார்கள்.

அடுத்து ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது கருத்தை முன் வைத்தார்கள். “ஆட்சி அதிகாரம் இக்கிண்ணத்தை விட பிரகாசமானது. ஆட்சி புரிவது தேனைவிட இனிமையானது. ஆட்சியில் நீதமாக நடந்து கொள்வது முடியைவிட சிக்கலானது” என்றார்கள்.

ஹஸ்ரத் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தேன் கிண்ணத்தைக் கையிலெடுத்து “கல்வி இக்கிண்ணத்தை விட பிரகாசமானது. மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வது இந்த தேனைவிட இன்பமானது. கல்வி கற்றதின்படி அமல் செய்வது முடியை விட கடினமானது” என்றார்கள்.

அடுத்து ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தங்களின் கருத்தை முன்வைத்தார்கள். “விருந்தாளிகள் இந்த கிண்ணத்தை விட பிரகாசமானவர்கள். விருந்தாளியை உபசரிப்பது இந்த தேனைவிட இனிமையானது. விருந்தாளியை திருப்திப்படுத்துவது இந்த முடியை விட சிக்கலானது” என்றார்கள்.

அடுத்து தனது அருமை மகள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் கருத்தை கேட்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்.

அதற்கு சுவர்க்கத்து பேரரசி பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “யா ரஸுலலல்லாஹ்! பெண்களிடம் வெட்கம் என்பது இந்த கிண்ணத்தை விடப் பிரகாசமானது. பெண்கள் பிறரிடம் இருந்து உடலை மறைத்து வாழ்வது இந்த தேனை விட இனிமையானது. பெண்கள் தங்களைத் தாமே இவ்வுலகின் தீயப்பார்வை, தீய நடத்தைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது இந்த முடியைவிட சிக்கலானது” என்றார்கள்.

அனைவர்களின் கருத்துகளையும் வாங்கிய பின் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்களின் முபாரக்கான வாய் திறந்து தங்களின் பொன்னான கருத்துகளை இப்படிச் சொன்னார்கள்.

“உருவமில்லாத இறைவன் இக்கிண்ணத்தை விட பிரகாசமானவன். அந்த இறைவனிடம் ஒன்றி விடுவது இத்தேனை விட இனிமையானது. இறைவனின் கட்டளையின் பிரகாரம் வாழ்வது இந்த முடியை விட சிக்கலானது” என்றார்கள்.

உடனே வானவர் கோமான் ஹஸ்ரத் ஜிப்ரீயில் (அலைஹிஸ்ஸலாம்) அங்கு வந்து, “யா ரஸூலல்லாஹ்! எனது கருத்தையும் சொல்லி விடுகிறேன்” என்று அனுமதி வாங்கி, “அல்லாஹ்வின் பாதையில் செல்வது இந்த தேனை விட இனிமையானது. அல்லாஹ்வின் பாதையில் கடைசி வரை இஸ்திகாமத்தாக இருப்பது முடியை விட சிக்கலானது’ என்றார்கள்.

இந்த புனிதமான உரையாடல்களை கேட்டு கொண்டிருந்த இறைவன் தனது கருத்தை சொல்லி அனுப்பினான். “யா முஹம்மது அவர்களே! சுவர்க்கம் இந்த கிண்ணத்தை விடப் பிரகாசமானது. சுவனத்தில் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தேனை விட இனிமையானது. சுவனத்தின் பாலத்தை (சிராத் பாலம்) கடப்பது இந்த முடியை விட சிக்கலானது” என்று கூறினான்.

படிப்பினை:-
நோய் விசாரிக்க சென்ற இடத்தில் ஒரு அற்புதமான அறிவு சார்ந்த உரையாடல் நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். அல்லாஹ்வும், ஜிப்ரியீலும் தங்களின் கருத்தைச் சொல்லும் அளவுக்கு இந்த கலந்துரையாடல் நடந்திருக்கிறது. ஸஹாபாக்களை அறிவு சார்ந்த சிந்தனைவாதிகளாக உருவாக்கினார்கள்.

பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் பெண்குலத்திற்கு மாபெரும் படிப்பினையான கருத்துகளை சொல்லி பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொன்னது போல இன்றைய இஸ்லாமியப் பெண்மணிகள் நடந்து கொண்டால் ஈருலகிலும் மாபெரும் வெற்றியை அடையலாம்.

1 comment:

  1. Iidarkana adaram velai idungal sahodara?

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval