2011-12-ம் ஆண்டுக் கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013- 14-ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன.
ஓ.பன்னீர் செல்வம்
2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை 4 பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை முதல்-அமைச்சர் மற்றும் நிதி மந்திரியுமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் மீதான விவாதம் ஒரு சில நாட்கள் நடைபெற்றது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் கடந்த ஆண்டு ஜூன் 10-ந் தேதி தொடங்கி, சில நாட்கள் நடந்தது. பின்னர் கடந்த நவம்பர் மாதம் சட்டசபை குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்றது.
இந்த ஆண்டின்முதல் கூட்டத் தொடர்
அதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் பிப்ரவரி 17-ந் தேதி தொடங்கியது. அன்று நடந்த முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ரோசய்யா உரையாற்றினார்.
பிப்ரவரி 23-ந் தேதி வரை அந்தக் கூட்டத் தொடர் நீடித்தது. இறுதி நாள் கூட்டத்தில் அவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ப.தனபால் தள்ளி வைத்து அறிவித்தார்.
25-ந் தேதி பட்ஜெட்
இந்த நிலையில் 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 25-ந் தேதி காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. அதை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதுகுறித்து சட்டசபை செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்,
அதில், ‘‘மார்ச் 25-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று 2015-16-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 25-ந் தேதி அவைக்கு அளிக்க வேண்டும் என்றும் 2015-16-ம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் 28-ந் தேதி (சனிக்கிழமை) பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும் கவர்னர் நாள் குறித்துள்ளார். 2014-2015-ம் ஆண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை 28-ந் தேதி (சனிக்கிழமை) பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும் கவர்னர் நாள் குறித்துள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
வரவு-செலவு
இதன்படி, 25-ந் தேதி தமிழக பட்ஜெட்டை நிதி இலாகாவை தன் பொறுப்பில் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.
இந்த பட்ஜெட்டில் 2015- 2016-ம் ஆண்டுக்கான வரவு- செலவு, புதிய திட்டங்கள், வரி மாற்றங்கள், சலுகைகள் அறிவிக்கப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன், அன்றைய கூட்டம் முடிந்துவிடும். மரபுப்படி அடுத்தநாள் விடுமுறை. மீண்டும் 27-ந் தேதி சட்டசபை கூடும். அன்று ஆளுங்கட்சி தரப்பில் பட்ஜெட்டுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்படும்.
நிதி ஒதுக்கீடு
இந்த தீர்மானத்தின் மீது அனைத்துகட்சி உறுப்பினர்களும் பேசுவார்கள். சில தினங்கள் நடக்கும் இந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார்.
பின்பு ஒவ்வொரு துறைக்குமான மானியக் கோரிக்கையை அந்தந்த அமைச்சர்கள் தாக்கல் செய்து நிறைவேற்றியவுடன், அந்தந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஏறத்தாழ ஒரு மாத காலம் நடக்கும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று, சட்டசபை கூட்டம் முடிந்தவுடன் சபாநாயகர் தலைமையில் நடக்கும் சட்டசபையின் அனைத்துகட்சி தலைவர்களின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் வகுக்கப்படும். அப்போது எத்தனை நாட்கள் இந்த கூட்டம் நடக்கும், எந்தெந்த நாளில் எந்தெந்த மானியக்கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்று முடிவெடுக்கப்படும்.
2011-ம் ஆண்டு பதவி ஏற்ற அ.தி.மு.க. அரசு, 2016-ல் தேர்தலை சந்திக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், கட்சிகளுக்கு இடையே ஏற்படும் கூட்டணி உறவுக் கான உணர்வுகளை, சட்டசபையின் இந்தக் கூட்டத்தொடரில் காண முடியும்.
தே.மு.தி.க. நிலை என்ன?
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடரில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றிய கருத்து ஒன்றை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மோகன்ராஜ் (தே.மு.தி.க.) கூறினார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர) அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
கூட்டத் தொடர் முழுவதும் அவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் உரைக் கான கூட்டத் தொடர் முடிக் கப்படாமல் தொடர்ந்து நீடிப்பதால், நடக்க இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள முடியாத நிலை எழுந்துள்ளது.
குற்றப்பத்திரிகை
அதோடு அந்த சம்பவம், உரிமைக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. தே.மு.தி.க.வினரை அவையை விட்டு வெளியேற்றியபோது அவைக் காவலர் ஒருவர் தாக்கப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக தினகரன், சேகர் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மீது கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval