மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக, இந்தியா முழுவதும் இருந்து வந்த விவசாயிகள் நேற்று டெல்லியில் பாராளுமன்றம் அருகே போராட்டம் நடத்தினார்கள். இதில் தமிழக விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பாராளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேறிவிட்ட இந்த மசோதா, இனி மேல்–சபையில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் மேல்–சபையில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக சென்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக மனு கொடுத்தனர்.
விவசாயிகள் போராட்டம்
இந்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக டெல்லியில் பாராளுமன்றம் அருகே நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். ‘இந்திய விவசாயிகள் சங்கம்’ என்ற பெயரில் விவசாயிகளின் அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த விவசாயிகளும் கலந்துகொண்டார்கள். உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கு கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், நிலம் கையகப்படுத்தும் மசோதா தங்கள் நலனுக்கு எதிரானது என்றும், எனவே மசோதாவை வாபஸ் பெறும் வரை நகர மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கே.செல்லமுத்து கூறியதாவது:–
போராட்டம் தொடரும்
மோடி அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் விவசாயிகளுக்கு எந்த சாதகமும் இல்லை. இவர்களாக நிலங்களை எடுத்துக்கொள்ளலாம். இவர்கள் கொடுத்ததுதான் விலை. விவசாயிகள் நீதிமன்றம் செல்லமுடியாது.
எனவே இந்த மசோதாவை உடனடியாக திரும்பப்பெற்று விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்களை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் இருந்து சுமார் 300 பேர் வந்திருக்கிறோம். இந்த மசோதா குறித்து அரசு ஒரு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு கே.செல்லமுத்து கூறினார்.
தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வழுக்குப்பாறை பாலு, பொதுச்செயலாளர் பி.கந்தசாமி ஆகியோர் கூறுகையில்; 1894–ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நில எடுப்பு சட்டத்தில் கூட, அந்த நில எடுப்புக்கு எதிராக விவசாயிகள் நீதிமன்றம் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval