Thursday, September 11, 2014

தெரிந்து கொள்ளவேண்டிய ஹதீஸ்


Islamic Prayer - stock photoஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! இன்னார் (தொழுகை நடத்தும் போது) தொழுகையை எங்களுக்கு நீட்டிக் கொண்டே போவதால் என்னால் பெரும்பாலும் (கூட்டுத்) தொழுகையைப் பெறவே முடிவதில்லை' என்று கூறினார். (இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள்.) அவர்கள் தங்களின் உரையில் அன்றைய தினம் கடுமையாகக் கோபப்பட்டது போல் கோப்பட்டதை நான் பார்த்தே இல்லை!
(அவ்வுரையில்) 'மக்களே! நீங்கள் நிச்சயமாகவே வெறுப்புக் கொள்ளும் படியே நடந்து கொள்கிறீர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துபவர் அதை இலகுவாக்குங்கள். ஏனெனில், தொழவந்தவர்களில் நோயாளிகள், நலிவுற்றவர்கள், தேவைகளுடையவர்கள் இருப்பார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மஸ்வூத் (ரலி) கூறினார். (புகாரி)
                                                                              (2)
   
Muslim Arabic man praying at Kaaba in Mecca - stock photoIslamic Prayer - stock photo

     
"நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் நின்றிருந்தார்கள். மக்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, மினாவில் குர்பானி கொடுப்பதற்கு முன் என் தலைமுடியைக் களைந்து விட்டேன்' என்றார். அதற்கவர்கள் 'பரவாயில்லை; நீர் இப்போது குர்பானி கொடுக்கலாம்' என்றார்கள். அப்போது இன்னொருவர் நான் அறியாதவன் எனவே, கல் எறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்து விட்டேன்' என்றார். அதற்கு நபியவர்கள் 'பரவாயில்லை; எறிந்து கொள்ளும்!' என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம் 'பரவாயில்லை! செய்து கொள்ளுங்கள்' என்றே பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். ( புகாரி )
                                                                         
                                                                          (3)
"'                                                        
                                             

இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?' என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவால் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து - தூய்மையான எண்ணத்துடன் 'வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்' என்று கூறினார்கள்" அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி)

(இறைவனை வழிபடுவது போதாது, தூய்மையான எண்ணத்துடன் வழிபடக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது தான் அண்ணல் நபி ( ஸல் ) அவர்களின் பரிந்துரை நமக்கும் கிடைக்கும்.)
                                                                 (4)

 
"'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வழியில் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி (சட்டம்) கேட்டதற்கு, 'அதனைக் கட்டியிருக்கும் கயிற்றைப் பற்றி, அந்தப் பொருளிருக்கும் பாத்திரத்தைப் பற்றி, பொருளுக்குப் போடப்பட்டிருக்கும் உறையைப் பற்றி (அதன் முழு விவரங்களை) நீர் அறிந்து வைத்துக் கொள்! பிறகு ஓராண்டு காலம் அதனைப் பற்றி விளம்பரப்படுத்துவீராக! அதற்குப் பிறகு அதனை நீர் பயன்படுத்திக் கொள்ளும். அதன் உரிமையாளர் அதனைக் கேட்டு வந்தால் அதனை அவரிடம் ஒப்படைத்து விடு!' என்று கூறினார்கள். 'அப்படியானால் வழி தவறி வந்துவிட்ட ஒட்டகத்தைப் பற்றிய சட்டம் என்ன?' என்று அவர் கேட்டார். உடனே தம் கன்னங்கள் இரண்டும் சிவந்து போகும் அளவு அல்லது அவர்களின் முகம் சிவந்து போகும் அளவுக்கு - கோபப்பட்டவர்களாக, 'கால் குளம்புகளும் அதற்கான தண்ணீரும் அதனுடன் இருக்க அதனை நீர் ஏன் பிடிக்கப் போகிறீர்? அது நீர் நிலைகளுக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும். மரங்களை மேய்ந்து கொள்ளும். எனவே, அதனை அதன் உரிமையாளரே பிடித்துக் கொள்ளும் வரை அதன் போக்கில் விட்டுவிடுவீராக!' என்று கூறினார்கள். 'அப்படியானால் வழி தவறி வந்து விடும்     ஆட்டின் சட்டம் என்ன?' என்று கேட்டார். 'அது உமக்கே உரியது. அல்லது (அதனைப் பிடிக்கும்) உம்முடைய அந்த சகோதரருக்குரியது. (அவ்வாறு அதனைப் பிடிக்காவிட்டால்) அது ஓநாய்க்குச் சொந்தமாகி விடும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜைத் இப்னு காலிது அல் ஜுஹைனீ(ரலி) அறிவித்தார். (புகாரி)
                                                           (5)                                
நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்" அனஸ்(ரலி) அறிவித்தார். 
"நாங்கள் சென்ற பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அஸர் தொழுகையின் நேரம் நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் எங்களை வந்தடைந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்திக் கூறினார்கள்" அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி)
                                                           (6)
"மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (புகாரி)
                                                         (7)


praying woman - stock photo

"ஆயிஷா(ரலி) தொழுது கொண்டிருந்தார். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, 'மக்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். ஆயிஷா(ரலி) வானை நோக்கிச் சுட்டிக் காட்டினார். (தொழுகையில் பேசக் கூடாது என்பதால்), 'ஸுப்ஹானல்லாஹ்' என்றும் கூறினார். அப்போது 'இது (ஏதாவது) அடையாளமா?' என நான் கேட்டதற்கு, ஆயிஷா(ரலி), 'ஆமாம் அப்படித்தான்' என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் மயக்கமுற்றேன். (மயக்கத்தைப் போக்க) என்னுடைய தலையின் மீது தண்ணீரை ஊற்றினேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, 'எனக்கு இது வரை காட்டப்படாத சுவர்க்கம், நரகம் உட்பட அத்தனைப் பொருட்களையும் இந்த இடத்திலேயே கண்டேன். மேலும் எனக்கு அறிவிக்கப்பட்டது. நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் மஸீஹுத் தஜ்ஜால் என்பவனுடைய குழப்பத்துக்கு நிகரான சோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். (அப்போது மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) 'இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?' என்று கேட்கப்படும். நம்பிக்கையாளர் 'அவர்கள் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) ஆவார்கள்; அவர்கள் எங்களுக்குத் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள்; நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்றோம்' அவர்களைப் பின் பற்றினோம்; அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள்தாம்' என்று மும்முறை கூறுவார். அப்போது '(சுவனப் பேரின்பங்களைப் பெறத்) தகுதி பெற்றவராக நீர் (நிம்மதியாக) உறங்குவீராக!' என்றும் 'நிச்சயமாகவே நீர் நபி(ஸல்) அவர்களைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாமறிவோம்' என்றும் கூறப்படும். நயவஞ்சகனோ 'எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்' என்பான்' என்று கூறினார்கள்" என அஸ்மா(ரலி) அறிவித்தார். (புகாரி)



      

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval