Monday, September 1, 2014

355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்

Tamil_News_522040963173ஆங்கிலேயர் காலத்திலிருந்து, 355 ஆண்டுகாலமாக இருந்த காவல்நிலையத்தின் அடையாளமாக இருந்த சிவப்பு நிற பெயின்ட்டுக்கு பதிலாக காவல்நிலைய கட்டிடங்கள் பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டது. 1659ம் ஆண்டு முதன் முதலில் துவங்கப்பட்ட காவல் நிலையங்கள் முக்கிய மாகாணங்களில் செயல் பட்டு வந்தது. சுதந்திரத்துக்கு பின்னர், காவல்துறை சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றங்களை தடுக்கவும் அந்தந்த மாநில உள்துறை அமைச்சகத்தின் கீழ் காவல்நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், தமிழக காவல்துறை விரிவுபடுத்தப்பட்டு 16 பிரிவுகளாக தற்போது செயல் பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 1,452 காவல்நிலையங்களும், 196 மகளிர் காவல்நிலையங்கள் என மொத்தம் 1,648 காவல்நிலையங்கள் இயங்குகிறது. காவல்நிலையங்களில் பலக்கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவையாகும். சிவப்பு நிறத்தில் கட்டப்பட்டு காவல் நிலையத்துக்கென தனி அடையாளமாக விளங்கி கொண்டிருந்தது. காவல்துறையினர் பதிவு செய்யும் வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்கும் நீதிமன்றமும் சிவப்பு நிற கட்டிடங்களில் தான் செயல்பட்டு வந்தது. இப்படி 355 ஆண்டுகள் காவல்நிலையத்துக்கு அடையாளமாக விளங்கிய சிவப்பு நிற கட்டிடங்களை தற்போது பச்சை நிறத்திற்கு மாற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல் காவல்நிலையமாக வளவனூர் காவல்நிலைய கட்டிடத்தை சிவப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் காவல்நிலையத்தை வருடாந்திர ஆய்வு செய்வது வழக்கம். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது, காவல்நிலையம் முழுவதும் பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வளவனூர் காவல்நிலையத்தில் மாவட்ட எஸ்பி சில தினங்களில் ஆய்வுப்பணியை மேற்கொள்ள இருக்கிறார். அவர் ஆய்வுக்கு வருவதற்குள் காவல்நிலையங்களில் பச்சை நிற பெயிண்ட் அடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படி படிப்படியாக அனைத்து காவல்நிலையங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் பச்சைநிறத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், வனத்துறை அலுவலகங்களுக்கு மட்டும்தான் பச்சை நிறம் கொடுக்கப்படும். ஆனால் தற்போது காவல்நிலையங்களும் பச்சை நிறத்துக்கு மாற்றப்படுவதால் இரண்டிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். பல நூற்றாண்டுகாலமாக இருக்கும் இந்த முறையை மாற்றுவது சரியல்ல. என்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval