Tuesday, September 2, 2014

செல்போனை பெற்றோர் பிடுங்கியதால் இளம்பெண் தற்கொலை தூக்கில் தொங்கினார் !!

செல்போனை பெற்றோர் பிடுங்கியதால் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மங்களூர் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
அக்ஷதா
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள கெலரே பகுதியை சேர்ந்தவர் உமேஷ். இவர் வனத்துறையில் பறக்கும் படை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கமாலாட்சி. இவர் கதிரி போலீஸ் நிலையத்தில் உதவி சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் அக்ஷதா என்ற மகள் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அக்ஷதாவின் தந்தையும், சகோதரரும் கோவிலுக்கு சென்று இருந்தனர். தாயார் கமாலாட்சி வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அக்ஷதா தனது அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
தூக்கில் தொங்கினார்
சிறிது நேரம் கழித்து, கோவிலுக்கு சென்று இருந்த அக்ஷதாவின் தந்தையும், சகோதரரும் வீட்டுக்கு திரும்பினார்கள். அப்போது வீட்டில் உள்ள தனது அறையில் அக்ஷதா தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். அதை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து உடனடியாக கதிரி போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த தனது மனைவி கமாலாட்சிக்கு உமேஷ் தகவல் தெரிவித்தார். உடனே கமாலாட்சி பதறியடித்து ஓடி வந்து, தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
காரணம் என்ன?
இதுகுறித்து உடனடியாக கங்கனாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அக்ஷதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அக்ஷதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அக்ஷதாவின் செல்போனை அவரது பெற்றோர் பிடுங்கிக் கொண்டதாகவும், இதனால் வேதனை அடைந்து அவர் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு அக்ஷதாவின் நண்பர் ஒருவர் இறந்து விட்டதாகவும், அதனால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து மீள முடியாமல் தற்கொலை முடிவை கையில் எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து கங்கனாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போனை பெற்றோர் பிடுங்கிக் கொண்டதால் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கெலரே பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval