பலருக்கும் பிடித்தமான அசைவ உணவு பிராய்லர் சிக்கன். அது தீவனத்துக்குப் பதிலாக ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது.
இந்த சிக்கனை சாப்பிடுவதால் காய்ச்சலுக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் நாம் சாப்பிடும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் செயலிழந்து போகலாம் என்பதை அறிவியல், சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு செல்லும் சாலை வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இந்த வழியில் வரும் பங்கனப்பள்ளி, 1700-கள் வரை வைரச் சுரங்கங்களுக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரங்கள் நிஜாம் ஆண்ட ஹைதராபாத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன.
1800-களின் இறுதிவரை இங்கே வைரங்கள் வெட்டப்பட்டன. அதேபோலப் பங்கனப்பள்ளி மாம்பழங்களும் கனிகளில் உயர்ந்த இடத்தைப் பெற்றன.
ஆனால், சமீபகாலமாக வியாபாரிகளின் பேராசையால் பங்கனப்பள்ளி மாம்பழங்களின் புகழுக்குப் பங்கம் ஏற்பட்டது. வேகமாகப் பழுக்க வைப்பதற்காகக் கால்சியம் கார்பைடைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த கால்சியம் கார்பைடு, பழங்களைச் செயற்கையாகப் பழுக்கவைக்கும் வாயுவான எத்திலீனை வெளியிடும்.
இந்த கால்சியம் கார்பைடு, மனித ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பது. ஒருவழியாக அரசாங்கம் விழித்துக்கொண்டு கார்பைடு உபயோகம் குறித்து வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
என்ன வகைப் புரட்சி?
இப்போதெல்லாம், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு வரும் வழியில் வரிசைகட்டி நிற்கும் கோழிப் பண்ணைகளைப் பார்க்கமுடியும். இவை கிராம மக்கள் நடத்தும் கோழிப் பண்ணைகள் அல்ல. பெரிய தொழில் நிறுவனங்களால் நடத்தப்படும் சிக்கன் தொழிற்சாலைகள் இவை. இதைப் போன்ற பண்ணைகளின் வாயிலாகத்தான் கோழி, முட்டைப் புரட்சி இந்தியாவில் ஏற்பட்டது.
பசுமை, வெண்மைப் புரட்சிக்குச் சமமான மாற்றம் இது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் சத்துணவுத் திட்டத்தில் முட்டையை அறிமுகப்படுத்தியது, உணவுடன் ஊட்டச்சத்தை வழங்குவதற்கான பாராட்டத்தக்க யோசனை.
ஆனால், அதில் ஒரு ஆபத்தும் உள்ளது. மாம்பழத்தைப் பழுக்கவைக்க கார்பைடைப் பயன்படுத்துவதைப் போல, பாலை அதிகம் சுரக்கவைக்க ஆக்சிடோசின் ஹார்மோனை மாடுகளுக்குச் செலுத்துவதைப் போல, வர்த்தகரீதியாக உற்பத்தி செய்யப்படும் கோழிகளிலும் ஆரோக்கியக் குறைபாடுகள் நிறைய உள்ளன.
அதிர்ச்சி முடிவுகள்
கோழிகள் வேகமாக வளர்வதற்காகவும், முட்டை பொரிக்கும்போது தொற்று நோய்களைத் தடுப்பதற்காகவும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அவற்றின் உடலில் செலுத்தப்படுகின்றன. பிரபலமான சிக்கன் கம்பெனிகளான வெங்கிஸ், வெட்லைன் இந்தியா, ஸ்கைலாக் ஹேட்சரிஸ் ஆகியவை கோழிகளுக்குக் குறைந்த உணவைத் தந்து அதிக வளர்ச்சியைப் பெறுவதற்காக ஆன்ட்டிபயாட்டிக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன.
சுற்றுச்சூழல் அறிவியல் இதழான டவுன் டு எர்த், இந்தியாவின் வெவ்வேறு சந்தைகளில் விற்கப்படும் கோழி இறைச்சியைத் தனது பரிசோதனைக் கூடத்தில் பரிசோதித்து வெளியிட்டிருக்கும் முடிவுகள் அதிர்ச்சி தருபவை. கோழி ஈரல், தசைகள், சிறுநீரகங்களில் டெட்ராசைக்ளின் (டாக்சிசைக்ளின் போன்றவை), புளூரோகுயினலோன்ஸ், அமினோகிளைகோசைட்ஸ் ஆகியவை படிந்திருக்கின்றன.
ஏன் ஆபத்து?
இந்த மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் எந்த மருந்தாலும் எதிர்க்க முடியாத பாக்டீரியாக்கள் உருவாகும். இந்த பாக்டீரியாக்கள் உள்ள கோழிகளைச் சாப்பிடும் மனிதர்களுக்கும் இவை நேரடியாகக் கடத்தப்படும். வளர்சிதை மாற்றம் அடையாத பாக்டீரியாக்கள் இறைச்சியில் இருந்தால், வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களைத் தாக்கும். கோழிப் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் ஆன்ட்டிபயாடிக்குகள், மனிதப் பயன்பாட்டுக்கான வீரியத்தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பயன்படுத்தப்படாத பாகங்கள்
நாம் வாங்கும் கோழியில் பயன்படுத்தாமல் தூக்கி எறியும் பாகங்கள் என்ன ஆகின்றன? மேலே சொன்ன ஆபத்தான பாக்டீரியாக்கள் அவற்றின் சிறகுகள், எலும்புகளில் இருக்கும். அவை மண், நிலத்தடி நீர், நீர்நிலைகளில் கலக்கும். இதன்மூலம் இந்த பாக்டீரி யாக்கள் சுற்றுச்சூழல் முழுவதும் பரவும் ஆபத்து உருவாகிறது.
பரிந்துரைகள்
கோழிப் பண்ணைத் தொழிலில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக டவுன் டு எர்த் இதழில் டாக்டர் சந்திர பூஷன் சில பரிந்துரைகளைத் தந்துள்ளார்.
1. கோழிகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஆன்ட்டிபயாடிக்குகளைத் தடை செய்ய வேண்டும்.
2. கோழித் தீவனத்தில் ஆன்ட்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாது. தொழிற் பாதுகாப்பு கழகத்தின் (பி.எஸ்.ஐ.) ஒழுங்கு விதிகளைக் கடுமையாக்க வேண்டும்.
3. மனிதப் பயன்பாட்டுக்கான ஆன்ட்டிபயாடிக்குகளைக் கோழிகளுக்குப் பயன்படுத்து வதைத் தடுக்க வேண்டும்.
4. ஆன்ட்டிபயாடிக்குகளைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை விலங்கு மருத்துவர் களுக்கு அளிக்க வேண்டும்.
5. கோழிப் பண்ணைகளி லிருந்து சுற்றுச்சூழலுக்குக் கடத்தப்படும் பாக்டீரியாக்கள், ஆன்ட்டிபயாடிக்குகளால் ஏற்படும் மாசுபாட்டின் அடிப்படையில், மாசுபாட்டு அளவீடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.
6. ஆன்ட்டிபயாடிக்குகளுக்கு மாற்றாகக் கோழிகளின் வளர்ச்சிக்கு உதவும் மூலிகை ஊட்டப்பொருட்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்.
7. மனிதர்கள், விலங்குகள், உணவு சங்கிலித் தொடரில் ஆன்ட்டிபயாடிக்குகளை எதிர்க்கும் மண்டலங்கள் உருவாகியுள்ளனவா என்பதைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறையை உருவாக்க வேண்டும்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அரசு விரைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில், நுண்ணுயிர்கள் வேகமாகத் திடீர் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியவை. ஒரு நிமிட நேரத்தில் பல தலைமுறை வளர்ச்சியை எட்டிவிடக்கூடியவை இந்த பாக்டீரியாக்கள். அதனால் புதிய புதிய எதிர்ப்புத்தன்மை கொண்ட பாக்டீரியாக்கள் வளர்ந்து பெரும் பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பு அதிகம்.
அச்சுறுத்தும் கோழிகள்
# இந்தியாவில் பிறந்து ஒரு மாதத்துக்குள் இரண்டு லட்சம் குழந்தைகள் இறந்து போகின்றன. இதில் மூன்றில் ஒரு குழந்தை ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தியால் (Antibiotic Resistance) இறக்கிறது.
# காசநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களில் 15 சதவீதம் பேருக்கு ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி இருக்கிறது.
# இந்த ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்திக்கு நாம் சாப்பிடும் பிராய்லர் கோழிகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று டெல்லி சி.எஸ்.இ. அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
# பிராய்லர் கோழிகளுக்கு ஆண்டிபயாட்டிக் கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் அவை வேகமாகவும் கொழுகொழுவென்றும் வளர்கின்றன.
# ஆண்டிபயாட்டிக் கொடுக்கப்பட்ட கோழியைச் சாப்பிடுவதன் மூலம், நம் உடலிலும் ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி ஏற்படலாம். அந்த நிலையில் நமக்கு நோய் வந்து ஆண்டிபயாட்டிக் மருந்து உட்கொண்டால், உடல் குணாமாகாமல் போக நேரிடலாம்.
# ஏனென்றால், கோழியைச் சமைத்து சாப்பிட்டாலும்கூட, அதிலிருக்கும் ஆண்டிபயாட்டிக் முற்றிலும் அழிவதில்லை.
# அத்துடன், கோழியின் உடலில் இருக்கும் ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி பெற்ற பாக்டீரியா நமது உடலுக்குப் பரவக்கூடும்.
தமிழில்: ஷங்கர்
courtesy© தி இந்து (ஆங்கிலம்)
பதிப்புரை ;S.R.RAVI @ facebook
PATTUKKOTTAI
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval