சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இந்த leukoderma என்று சொல்லக்கூடிய இந்த வெண்புள்ளிகள் காரணமாக வெளியில் செல்ல அவமானப்பட்டுக் கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். எந்த உறவினர் வீட்டு நல்லதுக்கும் கெட்டதுக்கும் சென்றது இல்லை. தாழ்வு மனப்பான்மை. உலகில் பலகோடி மக்கள் இருக்கும் போது நமக்கேன் இது போன்ற ஒரு புள்ளிகள் உடல் முழுவதும் என மன உளைச்சல். எங்கெங்கெல்லாம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். சென்னையில் நான் சந்திக்காத பிரபல ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளே இல்லை டாக்டர் தம்பைய்யா உட்பட.
அல்லோபதி மருந்துகள் பக்க விளைவுகளைக் கொடுத்ததோடல்லாமல் முகத்தின் நிறத்தையே கருப்பாக மாற்றி விட்டது.
ஒரு சூழ்நிலையில் தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்தேன். இப்படியே எத்தனை நாள் முடங்கிக்கிடப்பது. இது ஒருநோய் அல்ல சருமத்தில் மெலோனின் திசுக்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அழிந்துவிடுகின்றது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை இது தொற்றுநோயும் அல்ல குடும்ப வாரிசுகளுக்கும் பாதிப்பில்லை என்றுணர்ந்தேன்.
அதன் பின்னர்தான் வெளியிடங் களுக்கு செல்ல ஆரம்பித்தேன். இதனைப்பற்றி அறியாதவர்கள் கைகுலுக்கக் கூட தயக்கம் காட்டினார்கள். உணவங்களில், பேருந்துகளில், இரயில்களில் அருகருகே உட்கார வந்து என்னைப் பார்த்தவுடன் வேறு இடத்திற்கு போய் விடுவார்கள்.
மனம் குறுகிப் போகும். ஏன் இப்படி என்று கேள்விகள். அதன் காரணமாக மன அழுத்தம். ஆனால் உள்ளே எவ்வளவோ நோய்களை வைத்துக் கொண்டு மனிதர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். நமக்கு என்ன நோயா வந்துவிட்டது என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். என்குடும்பம்என்னை ஆரம்பம் முதல் நிராகரிக்கவில்லை. இதனை பெரிதாக எடுத்துக்கொண்டு கவலைப்படவும் இல்லை. அந்த வகையில் மகிழ்ச்சியானேன்.
அதன் பின்னர் வெளியிடங்களுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் சென்று வந்தேன். யாராவது என்னை சற்று உற்றுப் பார்த்தால் அவர்களை அழைத்து இது நோயல்ல என்று சொல்லி விட்டு வருவேன்.
அதன் பின்னர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் Defence research development organisation (DRDO) இதற்கென ஒரு மருந்தினை கண்டு பிடித்தார்கள். முற்றிலும் மூலிகையால் ஆனது. வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தேன். ஏறத்தாழ 70 சதவீதம் வெண்புள்ளிகள் மறைந்து விட்டது.
பெண்ணின் திருமணம் என்னுடைய இந்தத் தோற்றம் தடை ஏற்படுத்துமோ எனப் பயந்தேன். ஆனால் நல்லபடியாக மகளின் திருமணமும் நடந்தேறியது. இன்னும் பெரும்பாலான மக்களுக்கு இது நோய் அல்ல தோலின் நிறம் மட்டும் வெள்ளை நிறமாக மாறுகின்றது என்று நினைப்பதில்லை. இந்த வெண்புள்ளிகள் இருப்போரை தீண்டத்தகாத வர்களைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றது இந்த சமூகம். நகர்ப்புறங்களில் இது சற்று மாறி உள்ளது. கிராமப்புறங்களில் இது பற்றிய விழிப்புணர்வு துளியும் இல்லை.
இந்த வெண்புள்ளிகள் உடலில் இருக்கும் சில திருமண வயதுடையவர்களுக்கு இதனால் திருமணத் தடையும் ஏற்படுகின்றது. திருமணத்திற்கு பின்னர் இதனால் எந்தப் பிரச்சனையும் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. மத்திய அரசின் இந்த மூலிகை மருந்து இந்த வெண் புள்ளிகளுக்கு நல்ல பலன் அளிக்கின்றது.
எது எப்படி இருந்தாலும் எனது விருப்பம் என்னவென்றால் நான் பிறக்கும் போது எந்த நிறத்தில் பிறந்தேனோ அந்த நிறத்திலே என் இறுதிக் காலத்திற்குள் நிறம் முற்றிலும் மாறவேண்டும் என்பதே! நிச்சயம் எனது விருப்பம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
அரசும், மருத்துவமனைகளும், சமூக நலஅமைப்புகளும் பொதுமக்களுக்கு இந்த வெண் புள்ளிகள் பற்றிய விழிப்புணர்வினை நாடு முழுவதும் ஏற்படுத்தவேண்டும்.
'வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்' என்ற ஒன்றை எனது நண்பர் திரு. உமாபதி நாடெங்கிலும் நடத்தி வருகின்றார். இதற்கான மருந்துகளையும் (DRDO) வழங்கி வருகின்றார். அவரும் ஆரம்பகாலத்தில் என்னைப்போன்றே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவர் தான். இன்று இந்த இயக்கத்தில் முழுமூச்சாக செயல்பட்டு இந்தவெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயம்வரம் கூட ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருகின்றார். சில சமயங்களில் நானும் கலந்துகொள்வதுண்டு. அவரது பணியைப் போன்றே இன்னும் பலர் இந்த வெண்புள்ளிகள் என்பதுநோயல்ல எனும் விழிப்புணர்வினை நாடெங்கிலும் ஏற்படுத்த
வேண்டும்
courtesy facebook
பதிப்புரை S R Ravi
pattukkottai
Ravi SR Ravi
Ravi SR Ravi
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval