Thursday, September 25, 2014

படித்தால் மட்டும் போதுமா !?


படித்தால் மட்டும் போதுமா..??? இக்கேள்விக்கு மாணாக்கர்களே நீங்களே பதிலுரைக்க வேண்டும். ஆனாலும் அறியாதவர்களுக்கு அறியத்தரும் நோக்கத்தில் இப்பதிவை தாங்களுக்கென பதிகிறேன்.<~!/span>

கல்வி அறிவு பெற்றிருப்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமானதாகும். கல்வியறிவு பெற்றிருப்பது எவ்வளவு அவசியமோ அதுபோல பொது அறிவையும் [General Knowledge] வளர்த்துக் கொள்வது மிகமிக  அவசியமானதாக இருக்கிறது.. பொது அறிவில் பின்தங்கி  கல்வியறிவு மட்டும் பெற்றிருப்பது வாழ்க்கையில் மேலும் சாதிக்க சிரமமாகவே இருக்கும். பொது அறிவில்தான் கடந்தகால,நிகழ்கால மற்றும் உலக நிலைமைகளை நன்கு அறியமுடிகிறது. அப்படி அனைத்தும் அறிந்து வைத்திருந்தால்தான் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தாம் கற்ற கல்வியை பயன்படுத்தக் கொள்ளமுடியும்.

கல்வியறிவு எந்ததொரு வேலைக்கும் தகுதிக்கும் உள்ளே நுழைய பெறப்படும் அனுமதிச் சீட்டைப் போன்றதாகும். பொது அறிவானது கல்வியறிவை கூடவே தாங்கி வரும் தூணாக இருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் கல்வியறிவு வைரத்தைப்போன்றது. பொது அறிவு என்பது அந்த வைரத்தை தீட்டி அழகுபடுத்தி மதிப்பை ஏற்ப்படுத்துவதை போன்றதாகும். உதாரணமாகச் சொன்னால் ஒரு வேலைக்கான தேர்வுக்குச் சென்றால் அங்கு முதலில் தமது கல்வித்தகுதிகளையும் சான்றிதழ்களைச் சரிபார்த்தபிறகு பொது அறிவு சம்பந்தமான கேள்விகள்தான் கேட்கப்படுகிறது. அப்போது அது சம்பந்தமான கேள்விக்கு யார் சரியான விடையளிக்கிறார்களோ அவர்களே இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அப்படியானால் அங்கு கல்வியறிவைத் தாண்டி பொது அறிவே முன்னிலை பெறுகிறது.

அது மட்டுமல்ல பொது அறிவு பற்றி அறிந்து வைத்திருப்பது நமக்கு பலவகையிலும் பயனுள்ளதாக இருக்கிறது. அரசியல்,ஆன்மீகம்,மருத்துவம் என அனைத்திலும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுதல் சிறந்ததாகும். .மற்றும் உலக நடப்புக்கள் நாட்டு நடப்புக்கள் மக்களின் தேவைகள், பிரச்சனைகள் இன்னும் பல நிகழ்வுகளை பொது அறிவின் மூலமாகத்தான் அறியமுடிகிறது. இன்னும் சொல்லப்போனால் போதிய விழிப்புணர்வையும் பொது அறிவின் மூலமாகத்தான் பெறமுடிகிறது

பொது அறிவின் உள்ளே நுழைந்தால் நம் வாழ்க்கைக்கு அவசியமான பலவகை செய்திகள் புலப்படும்.அதிலிருந்து அறியாதவைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.முன்னேற்றப் பாதைக்கு வழி காண முடியும். இப்படி பொது அறிவின் பலன்கள் நிறைய உள்ளன. எத்தனையோ உயர்கல்வி கற்று பட்டம் பெற்று வெளியில் வந்த மாணாக்கள் போதிய பொது அறிவு இல்லாமல் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பதென முடிவெடுக்கத் தெரியாமல் முழிபிதுங்கி நிற்கிறார்கள்.

நமது முன்னோர்கள் பலரும், பல சரித்திரத்திரங்களில் இடம் பெற்ற அரசியல்வாதிகள், அறிஞர்கள்,மேதாதைகள்,விஞ்ஞானிகள், யாவரும் பொது அறிவையே அதிகம் பெற்று இருந்தார்கள். எனவே இன்னும் உலகமக்களால் புகழாரம் சூட்டி பேசப்படுகிறார்கள்.

கல்வியறிவில் பின்தங்கி 8ம் வகுப்பைக் கூட சரியாக எட்டிப் பார்க்காத எத்தனையோ பேர் 7, 8 பாஷைகள் பேசக் கற்றுக் கொண்டு பெரிய முதலாளிகளாகவும், திறமையான தொழிலதிபர்களாகவும் கைதேர்ந்த பணியாளர்களாக திகழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் பொது அறிவைக் கொண்டுதான் புகழ் பெற முடிந்தது. ஆகவே கல்வி அறிவுடன் பொது அறிவை பெற்றிருப்பது  கற்ற கல்விக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லையென்றே சொல்லலாம்.

இன்றையகால மாணாக்கள் நன்கு கல்வியறிவில் முன்னேறிவருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதுபோல பொது அறிவை வளர்த்துக் கொள்வதிலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆகவே சமுதாயச் சிந்தனைகள், உலக நிகழ்வுகள், வரலாற்றுப் பாடங்கள் சமூக வலைதளங்களில் அனாச்சாரங்களை தவிர்த்து தேவையானவைகளில் கவனம் செலுத்துதல் இப்படி மாறுபட்ட சிந்தனைகள் வர வேண்டும். அப்போதுதான் பொது அறிவை பெற வாய்ப்பாக இருக்கும். பொது அறிவுக்கான போட்டியில், பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவசியம் தவறாது பங்கேற்க வேண்டும். இதன் மூலம் அறியாத விசயங்களை அறிந்து கொள்ளவும் அறிந்த விசயங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கிறது.

எனவே  கல்வியறிவு எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல  ஒருமாணவன் பொது அறிவையும் பெற்றிருப்பானேயானால் அவனது வருங்காலம் மிகப் பிரகாசமாக ஜொலிக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.ஆகவே மாணவ மாணவியர்கள்  கல்வி கற்கும்போதே பொது அறிவையும் வளர்த்துக் கொள்வதில் நாட்டம்  கொள்ள வேண்டும் என்பதே எனது அறிவுரையாக இருக்கிறது.
அதிரை மெய்சா 





No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval