Friday, May 19, 2017

மேக் இன் இந்தியாவுக்கு பின்னடைவு இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்த ஜெனரல் மோட்டார் முடிவு


புதுடெல்லி: நடப்பாண்டுக்கு பிறகு இந்தியாவில் கார்களை விற்கும் திட்டம் இல்லை என்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முடிவு பிரதமரின் கனவு திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தையில் ஜெனரல் மோட்டார்ஸ் (ஜிஎம்) நிறுவனம் இருந்தாலும் அதனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. நாட்டின் மொத்த கார் விற்பனையில் ஒரு சதவீதத்துக்கு கீழ் இந்த நிறுவனத்தின் பங்கு உள்ளது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 1995-ம் ஆண்டில் இந்திய சந்தையில் ஜெனரல் மோட்டார்ஸ் நுழைந்தது. ஒபெல் என்னும் பிராண்டை அறிமுகம் செய்தது. தாய் நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் மற்ற நாடுகளில் இருக்கும் துணை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. 

அதன் இந்தியாவில் 100 கோடி டாலர் முதலீடு அறிவிப்போடு புதிய மாடல்கள் நின்றுபோயின.இலகு ரக வர்த்தக வாகனங்களில் புதிய மாடல் எதுவும் அறிமுகம் ஆகவில்லை. செவர்லே பிராண்ட் பெயரில் விற்பனையை ஏற்கெனவே நிறுத்தி விட்டது. போர்டு மோட்டார் கடந்தாண்டு சிறிய ரக அனைத்து வசதிகளையும் கொண்ட பேமிலி கார் தயாரிப்பு திட்டத்தையும் கைவிட்டது. இந்நிலையில், ஜி எம் நிறுவனம் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தாண்டு இறுதியில் இருந்து இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்தி கொள்ள போவதாக அது சமீபத்தில் தெரிவித்துள்ளது. குஜராத் ஆலையை மூடிய சில வாரங்களில் இத்தகைய முடிவை இந்த நிறுவனம் எடுத்திருக்கிறது. 

அதே சமயம் புனே ஆலையில் ஏற்றுமதி நோக்கத்துக்காக மட்டும் கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக ஜிஎம் அறிவித்துள்ளது. பெங்களூருவிலுள்ள தொழில் நுட்ப மையம் தொடர்ந்து செயல்படும் என அது தெரிவித்துள்ளது. இந்தாண்டு முதல் இந்தியாவில் கார் விற்பனை இல்லை. புனே ஆலை தயாரிப்புகள் 100 சதவீத ஏற்றுமதியை அடிப்படையாக கொண்டவை என்ற ஜிஎம் நிறுவனத்தின் இந்த முடிவு இந்தியாவை சர்வதேச தயாரிப்பு மையமாக உருவாக்கும் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஜப்பானுக்கு அடுத்தப்படியாக கார் உற்பத்தி, விற்பனை கேந்திரமாக இந்தியா முன்னேறி வரும் நிலையில், ஜிஎம்மின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval