Tuesday, May 23, 2017

சொத்து தகராறில் தாய், மகள் வெட்டிப் படுகொலை!

சொத்து தகராறில் தாய், மகள் வெட்டிப் படுகொலை!சொத்து தகராறில் திருமணத்துக்கு தயாராக இருந்த பெண்ணை சித்தப்பாவே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள சின்னக்கலையமுத்தூர் வீ.கே.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் தனலெட்சுமி. இவர் தனது மகள் தமிழ்செல்வியுடன் வசித்துவந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தனலெட்சுமியை விட்டுப் பிரிந்த கணவர் மாரிமுத்து, அவரது தம்பி தண்டபாணியுடன் வசித்துவருகிறார். தனலட்சுமி தன்னிடமிருந்த பசுமாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து தனது மகளை படிக்கவைத்தார். பழனி -கோவை தேசிய நெடுஞ்சாலையில் மாரிமுத்துவுக்கும் அவரது தம்பி தண்டபாணிக்கும் சொந்தமான பரம்பரை சொத்தாக எட்டு ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இதில் தனக்கு சொந்தமான பங்கை மாரிமுத்து தனது தம்பி தண்டபாணியின் குடும்பத்திற்கு எழுதிவைத்துவிட்டதாக தெரிகிறது. 

இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய தனலெட்சுமி கடந்த சில ஆண்டுகளாக வழக்கை நடத்திவந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தனலெட்சுமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் தனது மகள் தமிழ்செல்வியின் திருமணத்தை நடத்தி முடிக்க எண்ணிய தனலெட்சுமி அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில், தனலெட்சுமி தனது வீட்டின் அருகே அதிகாலை நேரத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த தனலெட்சுமியின் மகள் தமிழ்செல்வியும் கொடூரமான வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். தாயும், மகளும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்குவந்த பழனி டி.எஸ்.பி. வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார், தனலெட்சுமி மற்றும் தமிழ்செல்வியின் உடலைக் கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. சொத்து தன் கையை விட்டு போன ஆத்திரத்தில் மாரிமுத்துவின் தம்பி தண்டபாணி தனலெட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பால் கறப்பதற்காக வீட்டை பூட்டி விட்டுச் சென்ற தனலெட்சுமியை பார்த்த தண்டபாணி அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொன்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வீட்டிற்குள் உறங்கிய தமிழ்செல்வியையும் தண்டபாணி கொடூரமாகக் கொன்றதாக உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தனலெட்சுமி தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆனால் தனலெட்சுமி குடும்பத்திற்கு ஆதரவு பெருகிவிடும் என்பதால், சொத்தை மொத்தமாக அபகரிக்க தண்டபாணி இந்த இரட்டை கொலையை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்டபாணி மட்டுமின்றி அவரது மனைவி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயிரிழந்த தனலெட்சுமியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இரட்டை கொலையை தொடர்ந்து தனலெட்சுமியின் கணவர் மாரிமுத்து மற்றும் அவரது தம்பி தண்டபானி ஆகியோர் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சரண்டைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருமணம் ஆகப்போகும் பெண் என்றும் பாராமல் அவரையும், அவரது தாயையும் கொலை செய்தவருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டுமென பழனி சின்னக்கலையமுத்தூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
News7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval