Sunday, August 10, 2014

நிறம் மாறும் மனிதர்கள் !


மனித இனம் ஆறறிவைப்பெற்ற இனமாக இருந்தாலும் குணத்தால் ஒவ்வொருவரும் சற்று இயல்பு நிலையிலிருந்து மாறுபட்டுத்தான் இருப்பார்கள். அப்படி குணத்தால் மாறுபட்டு இருந்தாலும் அனைத்து செயல்பாடுகள் நடவடிக்கைகள் யாவும் மனசாட்சிக்கு உட்பட்டே இருக்கும்.அப்படி இருந்தால்தான் அம்மனிதன் ஆறறிவைப் பெற்றவனாக முழுமை அடைந்தவனாக இருக்க முடியும். சிந்தித்துச் செயல்படும் பகுத்தறிவைப் பெறாத யாவரும் முழுமனிதனாக இருக்க முடியாது. ஆனால் ஒரு சிலர் இதற்க்கு விதி விளக்காக நிறம் மாறும் குணமுடையோர்களாக தனது நிலைபாட்டில் சரியாக இருக்கமாட்டார்கள். தனக்கு சாதகமாக எப்படி உள்ளதோ அப்படி தன்னை மாற்றிக் கொள்வார்கள். இன்னும் சொல்லப் போனால் தன் கொள்கையைக் கூட மாற்றிக் கொள்ள தயங்க மாட்டார்கள்.போதிய பகுத்தறிவைப் பெற்றிருந்தும் சிந்தித்து செயல்படும் திறனிருந்தும் மனசாட்சியிலிருந்து விலகி சற்றுமாறுபட்டு இரட்டை வேடமிடுபவர்களாக இருப்பார்கள். இத்தகைய குணமுடையோர்களே நிறம்மாறும் மனிதர்களாவார்கள். இவர்கள் எதிரிகளைவிட மிக ஆபத்தானவர்களாகும்.

பசுத்தோல் போர்த்திய புலிகளான இத்தகையோர் போக்கு சற்று வியக்கத்தக்கதாக இருக்கும்.எப்படியென்றால் உள்ளொன்றும் புறமொன்றும் காட்டிப் பழகும் இத்தகையோர் அதிகம் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் தேவைகள் காரியங்கள் பூர்த்தியாகும்வரை அந்த அப்பாவிமனிதரை மிகைப்படுத்தி புகழ்மாலை சூடுவார்கள். எப்படியெல்லாம் தனக்குத் தெரிந்த தந்திரக்கலைகளை கையாளத்தெரியுமோ அப்படியெல்லாம் பேசிமயக்கி தனது காரியங்களை சாதித்துக் கொண்டு வருவார்கள்.தனது காரியங்கள் வெற்றி பெற வேண்டியும், தனக்கு உதவி தேவைப்படும்போது மட்டும் அவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.தனக்கு அவசியமில்லாத போது அம்மனிதனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்து கொள்வார்கள். அதாவது ரசத்தில் சேர்க்கும் கருவேப்பிலை போல பாவித்துக் கொள்வார்கள்.

அதே சமயம் கள்ளம்கபடமற்ற அந்த அப்பாவிமனிதன் இக்கபடப்போக்கு அறியாமல் அனைத்தையும் நம்பி கடைசியில் மோசம்போனபிறகு இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா..? என நினைத்து புலம்பி மனவேதனை அடைவார்.

இப்படி நிறம் மாறும் மனிதர்களால் சிலசமயம் அதிகம் பாதிப்புக்களையும் ஏற்ப்படுத்திவிடும். எப்படிஎன்றால் தனக்கு உடன்பட்டு நடக்காதவர்களை, தான் சொன்னபடி கேட்காதவர்களை, தனக்கு சாதகமாக உதவி செய்யாதவர்களை, கொஞ்சம்கூட யோசிக்காமல் தனது கொடூரக் குணம்கொண்டு அவதூறு பேசி மக்கள் மத்தியில் கெட்ட பெயரை முத்திரை குத்த முயற்ச்சிப் பார்கள்.

இதில் வேதனையளிக்கக் கூடியது என்னவென்றால் இத்தகைய காரியங்களை படிக்காத பாமரர்கள் யாரும் செய்வதில்லை நன்கு படித்த நன்றாய் உலக விபரமறிந்த ஆறறிவு நிரம்பப் பெற்றவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள். என்பதுதான் ஆச்சரியமளிக்கக் கூடியதாக உள்ளது.அப்படியானால் இதற்க்குக் காரணம் மனதில் காழ்ப்புணர்வும்,பொறாமை,தாழ்வு மனப்பான்மை இருப்பவர்களிடத்தில் தான் இத்தகைய குணம் மிகுதியாய் காணப்படும்.

அப்படியானால் இத்தகைய குணம் உள்ளவரிடத்திலிருந்து விலகி இருப்பதே நலமாகும். ஆரம்பத்திலேயே ஒருவரின் குணம் அறிந்து பழகுவது சிறந்ததாகும். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்று சொல்வதுபோல ஆரம்பத்திலேயே சிலரது சுயநலப் பழக்கங்கள் எப்படியும் தெரிபட்டுப் போகும். அப்போதே அவர்களின் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டால் நிறம் மாறும் மனிதர்களின் பகைமையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.அப்படி விலகிச் செல்வதன் மூலம் அத்தகைய குணம் படைத்தோர் உணர்ந்து திருந்திநடந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

குணத்தில் நிரந்தரமில்லாமல் கிடைக்கும் நேரத்தில்,கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அந்த சூழ்நிலையில் அகப்படும் மனிதர்களை பயன்படுத்தி தனக்கு ஆகவேண்டிய காரியங்களை பூர்த்தி செய்து கொள்வார்கள்.இத்தகையோர் எதிலும் பிடிப்பினை இல்லாது வாழ்க்கையை கடத்திக் கொண்டு போவார்கள்.

நல்லவர்யார் கெட்டவர்யார் என்பதைக்கூட எப்படியும் அறிந்துகொள்ளலாம்.ஆனால் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இத்தகையோரை இனம்காண்பது மிகக்கடினமே.இவர்களின் போக்கும் செயலும் நல்லோர்களைச் சார்ந்தே இருக்கும். ஆனால் இறுதியில் ஒருநாள் இவர்களின் உண்மை முகம் வெளிப்படும்போது நம்பிக்கையிழந்து மானமிழந்து அனைவரின் சாபத்துக்கு ஆளாகிப் போவார்கள்.

இவ்வுலக வாழ்வில் எதிலும் நேர்மையுடன் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். தாம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருக்கவேண்டும். எதிலும் ஒரு பிடிப்பினை வேண்டும். அப்படியல்லாது மனம்போனபோக்கில் நேரத்திற்கு ஒரு நிறமாக மாறிக் கொண்டு சென்றால் அவப்பெயரையே சுமக்க நேரிடும்.

ஆகவே உணராதவர்களுக்கு உணர்த்தாதவரை தனது தவறானபோக்கு ஒருபோதும் தெரியாமல் போய்விட வாய்ப்பு உள்ளது. .உணர்வதும் உணர்த்துவதும் இந்த இரண்டுமே மனிதனின் கடமையாகிறது. ஆகவே நாம் இந்த விஷயத்தில் கவனமுடன் கையாண்டு யார்மனதையும் நோகடித்து இலாபம் தேடிக் கொள்ளாமல் நிறம் மாறா மனிதர்களாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியுற வாழச் செய்வோமாக.!!!
                                               அதிரை மெய்சா 
                                                    

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval