Saturday, April 7, 2018

மனிதநேயத்தை மிஞ்சியது எதுவுமேயில்லை ..படித்ததில் நெகிழ்ந்தது! சமுத்திரகனி .இயக்குனர்


கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் வசித்துவருகிறார்கள். இந்த மாவட்டத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்குச் சென்று பணிபுரிகின்றனர்.

வளைகுடா, பணம் கொழிக்கும் பூமி. கேரள மாநிலத்தின் 'கால்பந்து தலைநகரம்' என்றும் மலப்புரத்தைச் சொல்வார்கள். மலப்புரம் மாவட்டத்தில் எங்கு நோக்கினாலும் மசூதிகள் காணப்படும்.

மலப்புரம் அருகே உள்ள புன்னதாலா என்கிற கிராமத்தில் மசூதிகளுக்கு மத்தியில் சிறிய இந்து கோயில் ஒன்று இருந்தது. 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில், நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலிக்கிறார் விஷ்ணு பகவான்.

புன்னதாலா கிராமத்தில் வசிக்கும் இந்து மக்களுக்கு, இந்தக் கோயில்தான் ஒரே வழிபாட்டுத்தலம். கோயிலோ இடிந்து தகர்ந்துபோய் கிடந்தது. அதைச் சீரமைத்துக் கட்டவேண்டும் என்பது புன்னதாலா வாழ் இந்து மக்களின் ஆசை. அவர்களிடத்திலோ, நிதி இல்லை. நிதி திரட்ட முயன்றும் முடியாமல்போனதால், கோயில் சீரமைப்புப் பணி பல ஆண்டுகளாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்து மக்களின் ஆசையையும் இயலாமையையும் அறிந்த புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், உதவிக்கு ஓடி வந்தனர்.

'உங்கள் கோயிலை நாங்கள் கட்டித்தருகிறோம்' எனக் கூறி நிதி வசூலிக்கத் தொடங்கினர். சுமார் 20 லட்சம் ரூபாய் திரண்டது. புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், இந்து கோயிலைச் சீரமைக்க நிதியை அள்ளி வழங்கினர்.

இந்துக்கள் கண்களிலோ ஆனந்தக்கண்ணீர்!
திரண்ட நிதியை கோயில் கமிட்டியிடம் அளித்து, நரசிம்மமூர்த்தி ஆலயத்தைக் கட்டுமாறு இஸ்லாமியர்கள் கேட்டுக்கொண்டனர். கோயில் முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டது. நிதி திரட்டிக் கொடுத்ததோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக இஸ்லாமிய மக்கள் ஒதுங்கிவிடவில்லை. கோயிலின் சீரமைப்புப் பணிகளிலும் உடல் உழைப்பை நல்கினர்.

நெகிழ்ந்துபோன புன்னதாலா இந்து மக்கள், நன்றிக்கடனாக இஸ்லாமிய மக்களுக்கு கைம்மாறு செய்ய முடிவுசெய்திருந்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ரம்ஜான் நோன்பும் வந்தது. புன்னதாலா வாழ் இந்து மக்கள், இஸ்லாமிய மக்களுக்கு கோயில் வளாகத்தில் இஃப்தார் விருந்து வழங்க முடிவுசெய்து, அழைப்புவிடுத்தனர்.

அத்தனை இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, கோயில் கமிட்டி சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டது.

நரசிம்மமூர்த்தி ஆலய வளாகத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு விருந்து வழங்கப்பட்டது. இதில், 400 இஸ்லாமிய மக்களும் உள்ளூர் கிராம மக்களும் மகிழ்வுடன் பங்கேற்றனர். பரிமாறப்பட்ட சைவ உணவை இஸ்லாமிய மக்கள் ருசித்தனர்.

கோயில் செயலாளர் மோகனன் கூறுகையில்,

''எங்கள் கிராமத்தில் இந்து-இஸ்லாமிய மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்துவருகிறோம். நல்லது கெட்டது எதுவென்றாலும் இஸ்லாமிய மக்களுடன் கலந்து பேசி முடிவுசெய்வோம். இந்தக் கோயிலைக் கட்ட, சுமார் 20 லட்சம் ரூபாய் இஸ்லாமிய மக்கள் தந்தனர். யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அது அவர்களின் உரிமை. எல்லாவற்றையும் தாண்டி 'மனிதம்' என்ற ஒற்றை வரியில் நாங்கள் இணைந்து நிற்கிறோம்'' என்றார்.

மனிதநேயத்தை மிஞ்சியது எதுவுமேயில்லை
இயற்கை கொடுத்த உயிரை பலிகொடுத்து எந்த கடவுளையும் திருப்தி படுத்த முடியாது

மனித பிறவி மேன்மையானது அதை அனைவரும் போற்றுவோம்

.......படித்ததில் நெகிழ்ந்தது!      சமுத்திரகனி .இயக்குனர்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval