Monday, March 3, 2014

ஜவ்வரிசி தமிழகம் வந்த கதை

சேகோ (Sago), மலேய மொழியின் சேகு என்கிற சொல்லிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்றதாகும். மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) வகையைச் சார்ந்த, தெற்காசியச் சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் ஊறலைக் (பதநீரை) காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவைக் கோள வடிவில் அரிசி போல் சிறிய உருண்டைகளாக்கி இந்தியாவில் விற்பனை செய்தனர்.
ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அது ஜாவா அரிசி எனப்பட்டது. காலப்போக்கில் ஜாவா அரிசி, ஜவ்வரிசியாக மருவிவிட்டது. ஜவ்வரிசி தமிழ்நாட்டில் பாயசம் தயாரிப்பதற்குத்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வங்காளத்தில் அது சேகோ என்றே அறியப்பட்டு வங்க மக்களின் பிரதான உணவில் ஒரு பகுதியாக விளங்குகிறது. மஹாராஷ்டிரத்தில் சாபுதானா என்று அறியப்பட்டு, அங்கும் பிரதான உணவாகவே உபயோகத்திலிருந்து வருகிறது.

சுதந்திரத்திற்கு முந்திய தமிழ்நாட்டில் மைதா மாவு, மரிக்கன் மாவு என்று அறியப்பட்டது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அமெரிக்கன் மாவு என்று அழைக்கப்பட்ட இது, மரிக்கன் மாவாக மருவிவிட்டது! வெல்லத்தில் செய்த இனிப்புகளே அதிகமாகப் புழக்கத்திலிருந்த காலகட்டத்தில் மரிக்கன் மாவின் பயன்பாடு மிக அதிகமாக இருந்ததில் வியப்பொன்றுமில்லை. தமிழ்
நாட்டில் அப்போது பிரபலமான இனிப்பான ஒப்பிட்டு (போளி) செய்வதற்கு மரிக்கன் மாவு இன்றியமையாததாக இருந்தது.

இரண்டாம் உலகப் போர் ஜவ்வரிசி, மரிக்கன் மாவு ஆகிய இரண்டின் இறக்குமதிக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இராணுவத் தளவாடங்கள் தவிர்த்து, நுகர்வுப் பொருள்களைக் கொண்டுவருவதற்குக் கப்பல்களில் இடமில்லை. இதனால், இந்தியா முழுவதும் இவ்விரண்டு பொருள்களுக்கும் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது; விலையும் விஷம்போல் ஏறிவிட்டது.

இந்தக் காலகட்டத்தில் சேலத்தில் கருவாடு வணிகராக இருந்த மாணிக்கம் செட்டியார் என்பவர் தன் வியாபாரத்திற்காக அடிக்கடி கொச்சி சென்றுவந்து கொண்டிருந்தார். அங்கே மரிக்கன் மாவிற்குப் பதிலீடாகக் குச்சிக்கிழங்கு மாவு பயன்படுத்தப்படுவதைக் கவனித்திருக்கிறார். சேலத்தில் புதிதாக இந்த வியாபாரத்தைத் தொடங்க முடிவெடுத்து, அதற்காகக் குச்சிக்கிழங்கையும் அதன் தோலைச்
சீவும் இயந்திரத்தையும் 1943-இல் வாங்கி வந்திருக்கிறார். அதற்காக அவர் செய்த முதலீடு 500தான். இவ்வாறு குச்சிக்கிழங்கிலிருந்து தயாரித்த மரிக்கன் மாவு வியாபாரம் வேகமாக விரிவடைந்தது.

இரண்டாம் உலகப் போரின்போதெல்லாம் சேலத்தில் குச்சிக்கிழங்கு அதிகமாகப் பயிரிடப்படவில்லை. ஏர்க்காடு மலைப்பகுதிகளில் சிறிதளவு மட்டுமே பயிரிடப்பட்டு வந்தது. எனவே மாணிக்கம் செட்டியார் கேரளத்திலிருந்துதான் தேவையான குச்சிக்கிழங்கை வாங்கி வந்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரிற்கு முன் மலேயாவில் போப்பட்லால் ஜி. ஷா என்கிற வணிகர் கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து சேகோவை வாங்கி இந்தியாவில் விற்றுப் பெரும் செல்வராயிருந்தார். முதல் தர சேகோ என்பது முழுக்கமுழுக்கப் பனைமரச் சாறிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதும், மட்ட ரக சேகோ என்பது பனைமரச் சாறிலிருந்து தயாரிக்கப்பட்ட சேகோவோடு மரிக்கன் மாவிலிருந்து
தயாரிக்கப்பட்ட கலப்படச் சரக்கையும் சேர்த்தது என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

மலேசியப் பகுதிகளை ஜப்பான் கைப்பற்றியபோது போப்பட்லால் ஷா மலேசியாவிலிருந்து 1941-42-இல் ஓட்டாண்டியாக இந்தியா ஓடிவந்ததாகச் சொல்வார்கள். அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்து மறுபடியும் சேகோ வியாபாரம் தொடங்க முயன்றார். இந்தியாவில் அப்போது சேகோவிற்கு நல்ல கிராக்கி. தரமான சேகோ விளையும் பகுதிகள் மொத்தமும் ஜப்பானியர் வசம் இருந்ததால், மரிக்கன் மாவிலிருந்து
தயாரிக்கப்பட்ட போலி சேகோவையாவது உற்பத்திசெய்து விற்கலாம் என அவர் முயன்றார். ஆனால் அதற்கான மூலப்பொருளான மரிக்கன் மாவு கிடைக்கவில்லை. இச்சமயத்தில் அவருக்குச் சேலம் மாணிக்கம் செட்டியார் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது; அவரைச் சந்திக்க சேலத்திற்கே வந்துவிட்டார். மாணிக்கம் செட்டியார் தயார் செய்துவந்த குச்சிக்கிழங்கு மாவிலேயே ஜவ்வரிசிக் குருணைகள் செய்ய
இயலுமா என்றும் அவர் பரிசோதித்துப் பார்த்தார்.

குழந்தைகளைத் தூங்கவைக்கும் தொட்டிலில் நனையவைத்த குச்சிக்கிழங்கு மாவைக் கொட்டி, மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதைக் குலுக்கியபோது சிறிது சிறிதாக அந்த மாவு, குருணைகளாக மாறுவதை அவர் கவனித்தார். அந்தக் குருணைகளைப் பிறகு ஒரு செப்புப் பாத்திரத்தில் வறுத்தார். வறுத்த குருணைகள் ஜவ்வரிசி போன்ற தோற்றத்தையும் ருசியையும் பெற்றிருந்ததில் இருவருக்குமே மிக
மகிழ்ச்சி.
உண்மையான சேகோ அப்போது சந்தையிலேயே இல்லை. எனவே 1943-இல் குச்சிக்கிழங்கு மாவை சேகோ என்றும் குச்சிக்கிழங்குக் குருணைகளை ஜவ்வரிசி என்றும் விற்பனை செய்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இந்தப் புதிய வியாபாரத்தில் அவர்களுக்கு அபரிமிதமான இலாபம் கிடைத்தது என்று சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் அங்காடியின் தேவை அளவிற்கு அவர்களால் தங்களின் அளிப்பை அதிகரிக்க முடியவில்லை. சேகோவிற்கும் ஜவ்வரிசிக்கும் இந்தியா முழுவதும் பரவலான தேவை இருந்தது. ஆனால் சாதாரண உபகரணங்களைக் கொண்டு, யானைப் பசிக்குச் சோளப்பொறி என்பதுபோல் ஒரு நாளில் ஐந்தாறு மூடை சேகோவும் இரண்டு மூன்று மூடை ஜவ்வரிசியும்தான் அவர்களால் உற்பத்தி செய்ய முடிந்தது.

அளிப்பை அதிகரிக்க வேண்டுமென்றால் அதற்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்பான இயந்திரங்கள் இன்றியமையாதவை என்பதை மாணிக்கம் செட்டியார் புரிந்துகொண்டார். அதற்காக சேலத்தில் அந்நாளில் புகழ்பெற்ற, அனுபவத்தால் இயந்திரநுட்ப வல்லுநரான, எண்ணெய்ச் செக்கையும் பஞ்சு பிரிக்கும் ஜின்னையும் வடிவமைத்தவருமான வெங்கடாசலக் கவுண்டரை அவர் அணுகினார். வெங்கடாசலக் கவுண்டரும்
நவீனமான சேகோ ஆலையை வடிவமைத்துத்தந்தார். அந்த அமைப்பின் அடிப்படை ஆதாரக் கூறுகள் இன்றுவரை மாறாமல் இருப்பது அவருடைய மதிநுட்பத்தைப் பறைசாற்றுகிறது.

இவ்வகைப் புதிய ஆலைகளில் தினமும் ஐம்பது அறுபது மூடை சேகோவும் பத்துப் பதினைந்து மூடை ஜவ்வரிசியும் தயாரிக்க முடிந்தது. இந்த உற்பத்தி முறையை அறிந்திருந்த மாணிக்கம் செட்டியாரும் வெங்கடாசலக் கவுண்டரும் அவர்களின் நண்பரான ஜெகந்நாதனும்தான் ஆரம்பத்தில் சேகோ ஆலைகள் தொடங்கினர் என்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை. அவை தம் உற்பத்தியை 1945-இல்தான் தொடங்கின.
குச்சிக்கிழங்கு மாவு மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியை மாணிக்கம் செட்டியாருக்குக் கொடுத்துவிட்டு, அதற்குப் பிரதியாகச் சேலத்தைத் தாண்டிய வணிகத்தைத் தனக்கு முற்றுரிமையாக போப்பட்லால் ஷா ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

அளவுக்கதிகமான இலாபமளித்த இந்தத் தொழிலுக்கு ஆரம்பத்திலேயே சில இடர்கள் வந்தன. 1943-இல் நாட்டைக் கடும் பஞ்சம் ஒன்று வாட்டியது. குச்சிக்கிழங்கை அப்படியே உணவாக உண்ண முடியுமென்பதால் அதை மாவாகவோ ஜவ்வரிசியாகவோ மாற்ற அப்போதைய (1944) சேலம் மாவட்ட ஆட்சியர் தடைவிதித்தார். சேலத்தைத் தாண்டி அவற்றை ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தத் தொழில் அதன்
குழந்தைப் பருவத்திலேயே நசிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டது. தொழிலைக் காப்பாற்ற மாணிக்கம் செட்டியாரைத் தலைவராகவும் ஜெகந்நாதனைச் செயலராகவும் கொண்ட சேகோ உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. தடையை நீக்க வேண்டுமென்ற சங்கத்தின் கோரிக்கையை அப்போதைய சிவில் சப்ளைஸ் ஆணையர் ஹெஜிமோடி என்ற ஐ.சி.எஸ். அதிகாரி ஏற்றுக்கொண்டார். அதே ஆண்டில், சேகோவையும் ஜவ்வரிசியையும்
சென்னை மாகாணத்துக்கு அப்பால் எடுத்துச்செல்லக் கூடாதென்ற புதிய தடை விதிக்கப்பட்டது. இதற்கெதிரான மேல் முறையீட்டையும் ஹெஜிமோடி ஏற்றுக்கொண்டார். இதனால் இந்தத் தொழிலுக்கு ஆரம்பத்தில் வந்த நெருக்கடிகள் நீங்கின.

குச்சிக்கிழங்கை மாவாக்கும் பழைய வகைக் கருவிகளைக் கொண்டு மிகக் குறைவாகத்தான் சேகோவும் ஜவ்வரிசியும் உற்பத்திசெய்ய முடிந்தது. 1944-களில் 24 பவுண்டுகள் கொண்ட ஒரு மனு குச்சிக் கிழங்கு ஆறு அணா (பழைய ஒரு ரூபாய் என்பது பதினாறு அணா அல்லது 192 காசுகள் கொண்டதாகும். ஓரணா தற்போதைய 6 நயா பைசாவிற்குச் சமம்) விலைக்கு விற்றது. ஒரு மனு மாவு தயாரிக்க ஆறு மனு குச்சிக்கிழங்கு தேவை.
அதாவது, ஒரு மனு மாவு தயாரிக்கக் கச்சாப் பொருள் விலை ரூ. 2, அணா 4. தயாரிப்புச் செலவுகள் ரூ. 1 அணா 12. ஒரு மனு மாவின் மொத்தச் செலவு ரூ. 4தான். அங்காடியில் மாவு ரூ. 20-இலிருந்து ரூ. 24 வரை விற்றது. ஜவ்வரிசி இதைவிட அதிகமான விலையில் விற்றது. எனவே 500 முதல் 1000 சதவிகிதம்வரை இலாபம் கிடைத்தது!

இந்தச் சமயத்தில் குச்சிக்கிழங்கு மாவிற்கு ஒரு புதிய உபயோகம் கண்டறியப்பட்டது. பருத்தித் துணிகளின் சலவைக்குக் கஞ்சிபோடக் குச்சிக்கிழங்கு மாவைக் காய்ச்சிப் பயன்படுத்தலாம் என்பது தெரிந்தது. இதனால் மாவின் தேவை மேலும் அதிகரித்தது. குச்சிக்கிழங்கின் விலையும் அதிகரித்தது. சேலத்தைச் சுற்றி வாழப்பாடி, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகளில்
குச்சிக்கிழங்கு புதிய பயிராக அறிமுகப்படுத்தப்பட்டது. கிழங்கின் உற்பத்தியைவிட மாவு, ஜவ்வரிசி ஆகியவற்றின் தேவை அதிகரித்தது. அதை ஈடுகட்டப் புதிய ஆலைகள் நவீன இயந்திரங்களுடன் ஆரம்பிக்கப்பட்டதை ஏற்கெனவே பார்த்தோம்.

சேகோ தொழில் இரண்டாம் உலகப் போரின்போது தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. வேறொரு கோணத்தில் பார்த்தால் இந்தத் தொழில் இரண்டாம் உலகப் போரின் விளைவாகச் சேலத்தில் அறிமுகமாகியது எனலாம். போர் முடிந்தவுடனேயே இந்தத் தொழில் தொடர்ந்து நடைபெறுவதை முடக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன.

போர் முடிவுக்கு வந்தவுடனேயே அப்போதைய பிரிட்டிஷ் அரசு, "அசல்" சேகோவை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யத் திறந்த பொது உரிமம் XI (Open General License XI) வழங்கியது. சேலத்தின் "நகல்" சேகோ தொழில் அதன் தளர்நடைப் பருவத்திலேயே வெளிநாட்டுப் போட்டியைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் பிரிட்டிஷ் அரசு போய் இந்திய இடைக்கால அரசு பதவியேற்றது. ராஜாஜி தொழில் மற்றும்
அளிப்பு மந்திரியாகப் பதவிவகித்தார். சேலம் சேகோ உற்பத்தியாளர் சங்கத்தினர் தங்களின் புதிய தொழிலைக் காப்பாற்றக் கோரி இடைக்கால அரசுக்கு விண்ணப்பித்தனர். உள்நாட்டில் வளரும் புதிய தொழிலொன்றை வெளிநாட்டுப் போட்டி அழிக்க அனுமதிக்கக் கூடாதென்று காரணம்காட்டி வெளிநாடுகளிலிருந்து சேகோ, ஜவ்வரிசி இறக்குமதிக்கு ராஜாஜி 1945-இல் தற்காலிகத் தடை விதித்தார். 1945 முதல் 1949
வரை இந்தத் தடை அவ்வப்போது புதிப்பிக்கப்பட்டது.

1949-இல் சுதந்திர இந்தியாவின் காப்பு வரி வாரியம் (Tariff Board) குச்சிக்கிழங்கு மாவிற்கு வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாப்புக் கொடுக்க வேண்டுமா என்கிற பிரச்சினையை விவாதிக்க ஆரம்பித்தது. சேகோ உற்பத்தியாளர் சங்கத் தலைவர் வெங்கடாசலக் கவுண்டரும், செயலர் ஜெகந்நாதனும் பம்பாய்க்குச் சென்று தங்கள் தொழிலைக் காத்திட வெளிநாட்டிலிருந்து சேகோவையும் ஜவ்வரிசியையும்
இறக்குமதி செய்வதைத் தடைசெய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் காப்பு வரி வாரியம் அதை ஏற்கவில்லை. அப்படிப்பட்ட இறக்குமதித் தடை ஜவுளித் தொழில் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.

எனவே உள்நாட்டுக் குச்சிக்கிழங்குத் தொழிலைக் காத்திட எவ்வளவு காப்பு வரி (சுங்க வரி) விதிக்க வேண்டுமென்பதை விவாதித்தார்கள். இந்தியாவிற்கு அப்போது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு நீஷ்t (நீஷ்t என்பது 112 பவுண்ட் எடையாகும்) சாபுதானா என்றும் ஜவ்வரிசி என்றும் அழைக்கப்பட்ட குருணையின் விலை ரூ. 22-14-4 என்றும் உள்நாட்டில் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு நீஷ்t சாபுதானா
என்றும் ஜவ்வரிசி என்றும் அழைக்கப்பட்ட குச்சிக்கிழங்கு மாவுக் குருணையின் விலை ரூ. 34-6-0 என்றும் கணக்கிட்டு, அந்த அடிப்படையில் மதிப்புக் கூட்டல் வரி (ad valorum tax) விதிக்கச் சிபாரிசு செய்தார்கள். அப்போதைய வழக்கப்படி பிரிட்டிஷ் காலனிகளிலிருந்து செய்யப்பட்ட இறக்குமதிகளுக்குத் தனிச் சலுகைகளைச் சிபாரிசு செய்தார்கள். அவர்களின் அறிக்கை மத்திய அரசுக்கு 1949 மே மாதம்
சமர்ப்பிக்கப்பட்டது.

காப்பு வாரியத்தின் சிபாரிசுகளை மத்திய அரசின் வணிக அமைச்சகம் 1950 செப்டம்பர் 1-இல் சிறு மாறுதல்களுடன் ஏற்றுக்கொண்டது. சாபுதானா என்றும் ஜவ்வரிசி என்றும் அழைக்கப்பட்ட குச்சிக்கிழங்கு மாவுக் குருணையின் அப்போதைய காப்பு மதிப்பாக ஒரு நீஷ்tக்கு ரூ 30 என்கிற அடிப்படையில் 35 சதவிகித மதிப்புக் கூட்டல் வரி விதித்து உள்நாட்டுச் சரக்குகளுக்குப் பாதுகாப்புக்
கொடுத்தார்கள். அதுபோலவே சேகோ என்றழைக்கப்பட்ட குச்சிக்கிழங்கு மாவிற்கும் பாதுகாப்புக் கொடுத்தார்கள். இந்த வரி விதிப்பு 1952 டிசம்பர்வரை மாறாதிருக்குமென்றும் அறிவித்தார்கள்.

1950-க்குப் பிறகு தமிழ் நாட்டில் சேகோ தொழில் பெரும் வளர்ச்சியடைந்தது. ஆரம்பகாலத்தில் ஆலை தொடங்கியவர்கள் தங்களின் தொழில் நுட்பத்தை இரகசியமாக வைத்துக்கொள்ள இயலவில்லை. ஆலைகளுக்குள் நுழைந்த எவரும் அந்தத் தொழில் நுட்பத்தை எளிதில் அறிந்து கொள்ள முடிந்தது. எனவே பல புதிய ஆலைகள் தொடங்கப்பட்டன. குச்சிக்கிழங்கிற்கான தேவை அதிகரித்ததால் அது பயிரிடப்பட்ட பரப்பும்
அதிகரித்தது.

அதே சமயம் சேகோ வாணிபம் வட இந்திய வணிகர்களிடமும், சேகோ மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி சேலம் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமும் என்று பிரிந்துவிட்டது. உற்பத்தியாளர்கள் எவரும் வியாபாரிகளாகவில்லை. எனவே சேலம் உற்பத்தியாளர்கள் பலருக்குத் தங்கள் சரக்கு எங்கே, எதற்காக, என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதே தெரியாது!
1950-க்குப் பிறகு இந்தியாவுக்குள் கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து அசல் சேகோவும் ஜவ்வரிசியும் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டன. மேற்கு வங்காளத்தில்தான் அது அதிகமாக விற்கப்பட்டது. அசல் ஜவ்வரிசி லேசான தவிட்டு நிறம் கொண்டதாகும். ஆனால் குச்சிக்கிழங்கு ஜவ்வரிசி பால் வெண்மை நிறமுடையது. அசல் சரக்கு என்பதாலும், அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டதாலும் பனைமர
ஜவ்வரிசி அதிக விலைக்கு விற்கப்பட்டது. ஆனால் ருசியை வைத்து அசலையும் நகலையும் பிரிப்பது எளிதானதாயில்லை!

இதைத் தெரிந்துகொண்ட சில கல்கத்தா வியாபாரிகள் குச்சிக்கிழங்கு ஜவ்வரிசியை வாங்கி, அதற்குத் தவிட்டு நிறச் சாயமேற்றி, அதை அசல் சரக்கென்று ஏமாற்றி விற்கலானார்கள். கொஞ்ச நாள்களுக்குப் பிறகு தயாரிக்கிற இடத்திலேயே தவிட்டு நிறச் சாயமேற்றுவது எளிதென்று கருதிச் சேலத்துக்கே வந்து அங்கே சில ஆலைகளில் இரகசியமாகச் சாயமேற்றுவித்தனர். ஆரம்பத்தில் சிறிய அளவில்
நடந்தது படிப்படியாக விரிவடைய ஆரம்பித்தது. சேலத்திலிருந்த எல்லா ஆலைகளுக்கும் இந்தத் தொழில் நுணுக்கம் தெரிந்துவிட்டது. இதனால் அனேகமாக எல்லா ஆலைகளுமே போலிச் சரக்கு உற்பத்தியில் ஈடுபடலாயின. அசல் சேகோவையும் ஜவ்வரிசியையும் இறக்குமதி செய்தவர்களுக்கு இதனால் இழப்பு ஏற்பட்டது. அவர்கள் கல்கத்தா மாநகராட்சி மற்றும் மத்திய அரசின் செயல்படுத்தும் உட்பிரிவின் (Calcutta
Corporation and the Enforcement Branch of the Central Government) துணையோடு 1953-இல் அப்போது அந்த நகரத்திலிருந்த சுமார் 8,000 மூடை சேகோ இருப்பையும் கைப்பற்றிச் சீல் வைத்துவிட்டார்கள். குச்சிக்கிழங்கிலிருந்து தயாரித்த சேகோவைப் போலி, கள்ளச் சரக்கு என்று அதன் விற்பனைக்குத் தடை விதித்தனர்.

சேலத்தின் குச்சிக் கிழங்கு மாவு உற்பத்தியாளர்களுக்கு இது பேரிடியாக விழுந்தது. சேலத்துச் சேகோவின் விலை மூடை ரூ.65இலிருந்து ரூ.20க்குச் சரிந்தது! அங்காடியில் உற்பத்தி ஒரேயடியாக நின்றுவிட்டது. குச்சிக் கிழங்கு விளைவித்திருந்த விவசாயிகள் தங்கள் சரக்கை வாங்க ஆளில்லாமல் அவதிக்காளாயினர்.

சேகோ உற்பத்தியாளர் சங்கம் இந்தச் சவாலைத் தைரியமாக எதிர்கொண்டது. குச்சிக்கிழங்கு மாவு சேகோவை பிரிக்ஸ் அண்டு கம்பெனி (Brigs & Co.) என்கிற அரசு அங்கீகாரம் பெற்ற பொது ஆய்வு நிறுவனத்தில் (Certified Public Analyst) ஆய்வுக்குக் கொடுத்து, அது உண்ணத் தகுந்தது என்றும் அதனால் உடல்நலக் கேடு வர வாய்ப்பு எதுவுமில்லை என்றும் சான்றிதழ் பெற்றார்கள். கள்ளச் சரக்கினால் உடல்நலக் கேடு வருமென்று
முதலில் சொல்லிய கல்கத்தா நகராட்சி தன் குற்றச்சாட்டை மாற்றிக்கொண்டு, குச்சிக்கிழங்கு மாவை சேகோ என்றும் குச்சிக்கிழங்கு மாவுக் குருணைகளை ஜவ்வரிசி என்றும் அழைப்பதே தவறென்று கூறியதோடு நில்லாமல், காப்பு வரி வாரியம் குச்சிக்கிழங்கு மாவுக்கு எந்தப் பாதுகாப்பும் நல்கவில்லை என்றும், அந்தப் பாதுகாப்பு அசல் சேகோவின் இந்திய உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே
கொடுக்கப்பட்டது என்றும் வாதிட்டார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் கைப்பற்றிய சரக்குகளை வியாபாரிகளுக்குத் திருப்பித் தரவும் மறுத்தார்கள்.

தாங்கள் உற்பத்தி செய்யும் குச்சிக்கிழங்கு மாவு சேகோவை அதே "சேகோ" என்ற பெயரில் அழைக்க உரிமை கோரியும், காப்பு வரி வாரியம் குச்சிக்கிழங்கு மாவைத்தான் சேகோ என்று ஏற்றுக்கொண்டதென்று உறுதி செய்யக் கோரியும், சட்டத்துக்குப் புறம்பாகக் கல்கத்தா மாநகராட்சி கைப்பற்றி வைத்திருக்கும் சேகோவைத் திருப்பிக்கொடுக்கக் கோரியும் சேகோ உற்பத்தியாளர் சங்கம் உச்ச
நீதிமன்றத்தில் ஒரு "ரிட்" மனு தாக்கல் செய்தது. கல்கத்தா மாநகராட்சிக்கு இது ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறிவிட்டது. அவர்கள் மத்திய அரசை, இந்த வழக்கை வாதாட அவர்களின் அட்டர்னி ஜெனரலை அனுப்பிவைக்க வேண்டுமென்று சிறப்புக் கோரிக்கை வைத்தார்கள். இந்த வழக்கே காப்பு வரி வாரியம் கொடுத்திருக்கும் பாதுகாப்பு அடிப்படையில் எழுந்துள்ளது என்றும், காப்பு வரி வாரியம்
மத்திய அரசின் கீழ் இயங்குகிறது என்றும், எனவே மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் இந்த வழக்கில் கல்கத்தா மாநகராட்சி சார்பில் வாதாடினால் மத்திய அரசின் ஒரு அங்கத்திற்கெதிராக இன்னொரு அங்கம் வாதிடுவதற்கொப்பாகும் என்று சேகோ உற்பத்தியாளர் சங்கம் எதிர்வாதம் செய்தது. மத்திய அரசு சேகோ உற்பத்தியாளர் சங்கத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, அட்டர்னி ஜெனரலை இந்த வழக்கிற்கு
வாதாட அனுப்புவதில்லை என்று முடிவெடுத்தது.

அடுத்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசும் மேற்கு வங்க அரசும் அதில் தலையிட்டன. வாதிடும் இரு தரப்பினரிடமும் ஒரு சமரசம் ஏற்படுத்த முயன்றனர். அப்போது மத்திய நிதி மந்திரி டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். மேற்கு வங்க மாநில முதல்வர் டாக்டர் பி.சி.ராய். இவ்விருவரின் தலையீட்டால்தான் ஒரு சமரசமான முடிவு எட்டப்பட்டது. அதன்படி சேகோ
உற்பத்தியாளர் சங்கம் உச்ச நீதிமன்றத்திலிருந்து தங்களின் "ரிட்" மனுவைத் திரும்பப்பெறுவதென்றும், அவர்கள் கைப்பற்றிய குச்சிக்கிழங்கு மாவுச் சரக்குகளைக் கல்கத்தா மாநகராட்சி வியாபாரிகளுக்குத் திருப்பித் தந்துவிடுவதென்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. சேகோ பெயர் மற்றும் தரம் பற்றிய கேள்விகளை இந்தியத் தர நிர்ணயக் கழகத்திடமும் சேகோ நிபுணர் கமிட்டியிடமும் (I.S.I. and
Sago Expert Committee) விட்டுவிடுவதென்ற முடிவு இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காலக்கிரமத்தில் இந்தியத் தர நிர்ணயக் கழகமும், சேகோ நிபுணர் கமிட்டியும் மேற்கூறிய கேள்விகளைத் தீவிரமாக ஆராய்ந்தன. அவை சிபாரிசு செய்தபடி குச்சிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட சரக்கிற்கு சேகோ என்று 1947-இலிருந்தே வழக்கத்திலிருந்த பெயர் உறுதிசெய்யப்பட்டது. அதே சமயம் சேகோவின் தரம் நிர்ணயம் செய்யப்பட்டு, அதற்குக் குறைவான தரமுள்ள சரக்குகளை விற்பவர்கள்
உணவுக் கலப்படச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்றும் முடிவு தெரிவிக்கப்பட்டது.
இந்த முடிவுகள் இரு தரப்பினரும் வெற்றிபெற்றுவிட்டதாகச் சவடால் அடித்துக்கொள்ளும் வாய்ப்பினை நல்கின! மேற்கு வங்காளத்தினர், தரமான சேகோ மாத்திரம் விற்பனைக்கு வருவதை நிச்சயப்படுத்திக்கொண்டதற்காகப் பெருமைப்பட முடிந்தது. சேலம் உற்பத்தியாளர்கள் தங்களின் புதிய தொழில் தப்பித்ததற்கும் சேகோ என்கிற பெயரைக் காப்பாற்றிக்கொண்டதற்கும் பெருமைப்பட முடிந்தது.

ஒரு நகலின் பெயர் அசலாக மாறுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாயிருந்தது இந்திய வரலாற்றில் வேறு எப்போதும் நடந்திருக்காதோ என்றே நினைக்கிறேன்!

இந்தச் சமரசத்துக்குக் காரணகர்த்தர்களில் ஒருவரான டாக்டர் பி.சி. ராய் புகழ்பெற்ற மருத்துவராவார். அங்கீகாரம் பெற்ற பொது ஆய்வு நிறுவனம் கொடுத்த சான்றிதழிலிருந்தே குச்சிக்கிழங்கு மாவு சேகோ 99 சதவிகிதம் குளூகோஸ் மாவுச் சத்துடையதென்றும் (starch), பனைமரச் சாற்றிலிருந்து தயாராகும் சேகோ அதைவிடச் சமன்பட்ட உணவு என்பதையும் அவர் அறிந்திருப்பாரென அனுமானிக்கலாம்.
இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் நன்கு வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு தொழிலை நசுக்க வேண்டாமென்ற நல்லெண்ணத்தினால்தான் அவர் இந்தச் சமரசத் தீர்வை ஏற்றுக்கொண்டிருப்பாரென்று நான் ஊகிக்கிறேன். அப்போது நாட்டின் பெரும் தலைவர்களிடமிருந்த பரந்த மனப்பான்மை இப்போது அருகிக்கொண்டே வருகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.
எஸ். நீலகண்டன் பாரதிதாசன் பல்கலைக் கழகப் பொருளியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (M.I.D.S.) முன்னாள் இயக்குநர். இவர் எழுதிய "ஒரு நகரமும் ஒரு கிராமமும்" என்ற நூல் காலச்சுவடு - எம்.ஐ.டி.எஸ். இணை வெளியீடாக அண்மையில் வெளி வந்துள்ளது.

நான் 1967-இல் சேலம் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியபோது, கல்லூரிகளில் திட்ட அரங்கம் (Planning Forum) தொடங்கச் சொல்லித் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. அந்தத் திட்ட அரங்கின் ஒரு பணியாகச் சேலம் மாவட்டத்தில் அப்போது வேகமாக வளர்ந்துவந்த குச்சிக்கிழங்கு மாவுத் தொழிலைக் கூர்ந்தாய்வு செய்வதென 1970-இல் முடிவுசெய்தோம். திட்ட அரங்கத்தின் செயலரான மூன்றாமாண்டுப்
பொருளியல் இளங்கலை அறிவியல் மாணவர் எம்.வீ. தனசேகரனும் இணைச் செயலர் இரண்டாமாண்டு மாணவர் எம். சுந்தரமும் பொருளியல் ஆசிரியர்கள் வீ. பாலகிருஷ்ணன், சி.ஏ.முத்து, வீ.பி. கிருஷ்ண மூர்த்தி ஆகியோரும் இணைந்து ஒரு குழுவை உருவாக்கிக் கள ஆய்வைச் செய்தனர். அந்த ஆண்டுச் செலவிற்காக இருநூறு ரூபாய்க்கு மட்டுமே அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அந்தச் சிறுதொகையில்தான் ஆய்வு
செய்தோம்.

எங்கள் நல்வாய்ப்பினால் சேலம் சேகோ உற்பத்தியாளர் சங்கத்தின் தொடக்கச் செயலராக இருந்தவரும் முன்னாள் நகராட்சித் தலைவருமான என். ஜெகந்நாதன், சேகோ தொழிலின் ஆரம்பகால வரலாற்றினை எங்களுக்கு நன்கு விவரித்தார். சங்கத்தின் அப்போதைய செயலர் ராஜனும் சேகோ வணிகர் ஸோகன்லால் சௌத்ரியும் மேல் விவரங்களைக் கொடுத்தார்கள். ஆய்வறிக்கை கல்வியாண்டு 1970-71இல் வெளியிடப்பட்டது. சேகோ
தொழில் தொடங்கப்பட்டது பற்றிய செய்திகள் அதில் உள்ளன. ஆனால் MIDS நூலகம் தவிர்த்து வேறெங்கும் இப்போது அதன் பிரதிகள் இருப்பதாகத் தெரியவில்லை. இக்கட்டுரைக்கு அந்த அறிக்கையே ஆதாரமாகும். 

நன்றி: காலச்சுவடு
    தகவல் N.K.M .புரோஜ்கான் 
    அதிரை

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval