பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையின மாணவர்களுக்கு 10 புதிய கல்லூரி விடுதிகள் கட்டப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் அப்துல் ரகீம் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் பேசினர். அவர்களுக்கு பதிலளித்து அந்த துறையின் அமைச்சர் எஸ்.அப்துல் ரகீம் பேசியதாவது:-
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 17 லட்சத்து 46 ஆயிரத்து 516 சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு ரூ.390.92 கோடி அளவில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
சொந்த கட்டிடம்
சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் 14 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2 விடுதிகள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. 12 விடுதிகளில் 10 விடுதிகளுக்குச் சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அவை திறக்கப்படும்.
இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமிற்கு கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இதுவரை ஆயிரத்து 968 பயணிகள் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஹஜ் பயணிகள்
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 14 ஆயிரத்து 341 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டார்கள். இந்த பயணத்துக்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2,486 இடங்களில் தற்போது 160 கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான வக்பு வாரிய சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன
இவ்வாறு அவர் பேசினார்.
10 புதிய விடுதிகள்
அதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.அப்துல் ரகீம் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் நலனுக்காக 5 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 3 மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், ஒரு சீர்மரபினர் நல விடுதி மற்றும் ஒரு சிறுபான்மையினர் நல விடுதி என மொத்தம் 10 புதிய கல்லூரி விடுதிகள் தொடங்கப்படும். இதன்மூலம் ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.
தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒரு கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்கப்படும்.
வருமான வரம்பு உயர்வு
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 3 மாணவர், 3 மாணவியர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர் மற்றும் 2 மாணவியருக்கு (மொத்தம் 10 மாணவ, மாணவியருக்கு) அவர்கள் விருப்பப்படி தமிழகத்தில் உள்ள சிறந்த தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கு அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval