Wednesday, September 9, 2015

பெண்கள், குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: ஐகோர்ட்

கட்டாய, ‘ஹெல்மெட்’ தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.’இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்; அணியவில்லை என்றால், ஆவணங்களை பறிமுதல் செய்யலாம்.பெண்கள், குழந்தைகள் ஹெல்மெட் அணிவதில் விலக்கு கிடையாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கழுத்து வலி:
இந்த உத்தரவின் அடிப்படையில், ஜூன், 14ல், தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிம்மு வசந்த் என்பவர் தாக்கல் செய்த மனு: மூச்சு திணறல், கழுத்து வலி, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் ஹெல்மெட் அணிவதில் பிரச்னை உள்ளது. ஹெல்மெட் அணிவதை, வாகன ஓட்டிகளின் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். 2007 ஆகஸ்டில் பிறப்பித்த அரசாணையில், பெண்கள், குழந்தைகள், மெய்வழி சபா உறுப்பினர்கள், ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தில் ஓட்டுவது, மோசமான சாலைகள் இவற்றின் காரணமாக, விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அவமதிப்பு :
இம்மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:கடந்த, 2005ல், ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்ட விபத்தின் மூலம் 1,670 பேர் இறந்துள்ளனர்; 2014ல், 6,419 பேர் இறந்துள்ளனர். ஹெல்மெட் அணியாததன் மூலம், தமிழகத்தில் மட்டும், தினசரி, 17 பேர் இறக்கின்றனர்.விதிகளை அமல்படுத்திய பின், சாலை விபத்துகள், உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். ஏற்கனவே, மனுதாரர் தாக்கல் செய்த பொது நல வழக்கை, ‘முதல் பெஞ்ச்’ தள்ளுபடி செய்துள்ளது. தற்போது, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புக்கு தடை விதிக்கக் கோரி, மீண்டும் உயர் நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.மனுவில், அரசையும், நீதித் துறையையும் கண்டனம் செய்துள்ளார். இது, நீதிமன்ற அவமதிப்பாகும்; கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம், ஒரு தீர்ப்பை வழங்கிய பின், அதனால் யாரும் பாதிக்கப்பட்டதாகக் கருதினால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். ஹெல்மெட் அணிவதன் மூலம் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும், ஊழல் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகவும் கூறுவதில், எந்த அடிப்படையும் இல்லை.தமிழகத்தில், ஹெல்மெட் அணியாததன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளில், 41 ஆயிரம் பேர் இறந்தது என்பது, வாகனங்களில் பயணிப்பவர்களில், 1 சதவீதம் தான் என, மனுதாரர் கூறியுள்ளார். 1 சதவீதம் என்பது முக்கியமில்லை என கூறுவது போல உள்ளது.
அவதுாறு:
மனுதாரரின் வழக்கானது, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன்களுக்கு எதிரானது. 155 நாடுகளில், ஹெல்மெட் அணிவது பின்பற்றப்படுகிறது.நீதிமன்றத்தின் நேரத்தை, மனுதாரர் வீணடித்துள்ளார். இதற்கு வழக்கு செலவு தொகை கணிசமாக விதிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் குறித்து அவதுாறான கருத்துகளை கூறுவதை ஏற்க முடியாது. மனித உயிர்களின் மதிப்பு கருதி, இந்த நீதிமன்றம், ஹெல்மெட் குறித்த சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. மனுதாரர் கூறிய கருத்துகள், பொதுமக்களுக்கு எதிரானது; அதை ஏற்க முடியாது.எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர், மூத்த குடிமகன் என்பதாலும், சமூக ஆர்வலர் என கூறியுள்ளதாலும், வழக்கு செலவு தொகை விதிக்கவில்லை. இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.மனுதாரர், மூத்த குடிமகன் என்பதாலும், சமூக ஆர்வலர் என கூறியுள்ளதாலும், வழக்கு செலவு தொகை விதிக்கவில்லை.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval