Thursday, September 17, 2015

அகிம்சையை கற்பிக்க இறைச்சிக்கு தடை விதிப்பது வழியாகாது: உச்ச நீதிமன்றம்

Supreme Courtஇறைச்சித் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பர்யுர்ஷான் பண்டிகை காலத்தில் இறைச்சி மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லுதல் ஆகியவற்றுக்கு மகாராஷ்டிர மாநில அரசு தடை விதித்ததற்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசு உத்தரவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துத் தீர்ப்பளித்தது.
தற்போது ஜெயின் பிரிவினரின் அமைப்பு ஒன்று அரசு உத்தரவுக்கு தடை விதித்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.
அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயின் பிரிவினர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், “கருணை என்பது பண்டிகை காலத்துக்கு மட்டும் உரியது அல்ல.
கவிஞர் கபீர் கூறினார், ‘இறைச்சி உண்பவர்களின் வீட்டுக்குள் நீங்கள் ஏன் நுழைகிறீர்கள்? அவர்கள் என்ன செய்ய விருப்பமோ அப்படியே செய்யட்டும். நீங்கள் ஏன் அதைப்பற்றி இவ்வளவு கவலைப்படுகிறீர்கள் சகோதரரே’ என்றார்…பிற சமுதாயத்தினரை நோக்கிய சகிப்புத் தன்மை ஓரளவுக்காவது வேண்டும்.
இறைச்சித் தடை அகிம்சையை கற்பிக்க சிறந்த வழிமுறையாகாது. அகிம்சையை நாம் திணிக்க முடியாது. இதனை வேறொரு மட்டத்தில் வேறொரு வழியில் வளர்த்தெடுக்க வேண்டும்.
தடையை அமுல் செய்வதே கடினம். இறைச்சிக்கு தடை கோரும் அழைப்புகள் எல்லாம் சச்சரவுகளை ஏற்படுத்தும் சக்திகளுக்கு சாதகமாகப் பயன்படுவதில் போய் முடியும்.
நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களோ இல்லையோ, கசாப்புத் தொழில் நாடு முழுதும், உலகம் நெடுகிலும் காணப்படுகிறது. எனவே தயவுகூர்ந்து சகிப்புத் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரரை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval