Monday, September 14, 2015

ஆப்பிள் நிறுவனத்தின் அதிசய உலகம்


மறைந்த ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் மரணத்திற்கு முன், 2006 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்திற்கென, 175 ஏக்கர் பரப்பளவில், அலுவலக வளாகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தார். உலகிலேயே தனித்துச் சொல்லப்படும் அளவிற்கு அது இருக்கும் என்றார். அவரின் கனவு விரைவில் நனவாகப் போகிறது. இதனை 'ஆப்பிள் வளாகம் இரண்டு (Apple Campus 2)' என அவர் அழைத்தார். அந்த வளாகம் தொடர்ந்து கட்டப்பட்டு, தற்போது அனைத்து வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த 2016 ஆண்டு முடிவதற்குள் அல்லது 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த அலுவலகம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த வளாகத்தினை விண்வெளி ஓட வளாகம் (ஸ்பேஸ் ஷிப்) என்றே அனைவரும் அழைக்கின்றனர். இதன் தோற்றம் அந்த வகையில் அமைந்துள்ளது. 
இது 176 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இடத்தில் அமைக்கப்படுகிறது. அலுவலக வளாகம் 28 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைகிறது. ஒரே கட்டடத்தில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் 13,000 பேர் பணியாற்றுவார்கள். சுற்றி வந்தால், இது ஒரு மைல் தூரத்திற்கும் சற்று அதிகமாகவே இருக்கும்.
வட்ட வடிவ வளாகமாக அமைக்கப்படும் இந்த கட்டடம் நான்கு மாடிகளால் ஆனது. இதன் இரு பக்க சுவர்களும் கெட்டியான கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு பணி புரிபவர்கள், இரண்டு பக்கமும் உள்ள இயற்கைச் சூழலைக் கண்டவாறே பணியாற்றலாம். கண்ணாடிகளால் ஆன மாடிப் படிக்கட்டுகளை அமைக்கும் சீலே (Seele) நிறுவனத்தின் கட்டட பொறியாளர் பீட்டர் ஆர்பர் இது பற்றிக் குறிப்பிடுகையில், இந்த கட்டடத்தில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகளை வரிசைப்படுத்தினால், ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான Foster+Partners இந்த வளாகத்தினைக் கட்டித் தரும் பொறுப்பினை ஏற்றுள்ளது. உலகின் மிகச் சிறந்த, பல பெரிய கட்டடங்களைக் கட்டிய அனுபவம் கொண்டது இந்த நிறுவனம். இந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளன. 
மிகப் பெரிய வளாகமாக அமைக்கப்பட்டுள்ளதால், ஆங்காங்கே உணவு நிலையங்களும், நடைவெளிகளும், நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய உணவகம், அங்குள்ள பரந்த புல்வெளியை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு மட்டும் 21,468 சதுர அடியாகும். Caffè Macs என அழைக்கப்படும் இந்த உணவகம், ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே. இரண்டு மாடிகளில் இது அமைகிறது. பொது மக்கள், இந்த வளாகத்தினுள் நுழைய அனுமதி இல்லை. ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இதன் ஊழியர்களும், ஆய்வாளர்களும் கலந்தாலோசிக்கும் வகையில், பொதுமக்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புல்வெளியின் கீழாக, பூமிக்கு அடியில் கார்களை நிறுத்துமிடம் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 14,200 கார்களை நிறுத்தலாம்.இதனால், கார்கள் நிறுத்தப்பட்டு அவை வளாகத்தின் அழகான தோற்றத்தைக் குறைக்கும் நிலையே ஏற்படாது. வளாகத்தைச் சுற்றி 7,000 மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பார்ப்பதற்கு இந்த வளாகம் ஒரு மிகப் பெரிய பூங்காவாக இருக்கும். மொத்தப் பரப்பளவில், 80% இடம் 'பசுமை வளாகம்' ஆக அமையும். 
இந்த வளாகம் அமைய இன்றைய திட்ட மதிப்பீட்டின்படி 500 கோடி டாலர் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது தேவையற்ற ஆடம்பரம் என ஆப்பிள் நிறுவன பங்கு முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் தனி இருப்பு நிதியில் 1% என்பது நூறு கோடி டாலர் ஆகும். இருந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இங்கு அமையும் உடற்பயிற்சி மையம் 7.5 கோடி டாலர் செலவில் அமைக்கப்படுகிறது. இதனை சிலிகான் பள்ளத்தாக்கில் வசிக்கும் 20 ஆயிரம் ஆப்பிள் நிறுவனத்தினர் பயன்படுத்தலாம். வளாகத்தைச் சுற்றி சுற்றி, நடை பயிற்சி மற்றும் ஓடும் பயிற்சி மேற்கொள்ள பல மைல்கள் அளவிலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்திற்குள்ளாக ஊழியர்கள் சென்று வருவதற்கெனத் தனியே 1,000 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படும்.
இது பயன்பாட்டிற்கு வந்த பின்னரும், குபர்டீனோ நகரில் உள்ள தற்போதைய ஆப்பிள் நிறுவன வளாகம் அப்படியே இருக்கும். 
இடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மியூசியம் ஒன்று அமைக்கப்படும் என சிலர் தவறாகக் கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு 'ஆப்பிள் மனித இனத்தின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் தான் பாடுபடும்; கடந்த காலத்தைக் கொண்டாடாது' எனப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் பேர் ஒருங்கே அமர்ந்து காணக் கூடிய அரங்கம் ஒன்று, பூமிக்கடியில் எழுப்பப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் சோதனைக் கூடங்கள் பல லட்சம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில் யாருக்கும் புகை பிடிக்க அனுமதி இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் இதன் திட்டம் குறித்துப் பேசுகையில், இதனை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க:https://www.youtube.com/watch?v=oPzVsrgaxmc) தன் பெற்றோர்கள் இருவரும், புகை பிடிக்கும் பழக்கத்தால், நுரையீரல் புற்று நோயால் இறந்ததாகவும், அதனால், புகை பிடிப்பது மனிதனுக்கு ஆகாது எனவும், அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 
இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இங்கு ஏறத்தாழ 7 லட்சம் சதுர அடி அளவில் சூரிய வெப்பத்திலிருந்து மின் சக்தியை உருவாக்கும் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகம் முழுவதும் இயங்குவதற்குத் தேவையான மின் சக்தியினை இந்த பேனல்கள் தரும்.
பல புகைப்படக் கலைஞர்கள் மற்றும் விடியோ தயாரிப்பாளர்கள், ஆளில்லா சிறிய விமானத்தினை அனுப்பி, இந்த வளாகம் கட்டப்படுகையில், அதன் பல நிலைகளை போட்டோவாக எடுத்து, விடியோ படங்களாக யு ட்யூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். மாதிரிக்கு ஒன்று https://www.youtube.com/watch?v=mj8cI4G5_PQ என்ற தளத்தில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு மிகப் பிரம்மிப்பாகவும் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புகழை அதன் சாதனங்கள், மனித இனச் சரித்திரத்தில் பதித்தாலும், இந்த வளாகம் கூடுதலாகப் புகழை இணைக்கும் என்பதில் ஐயமில்லை.

courtesy;Dinamalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval