காரைக்குடி: பேரூராட்சி குப்பை கிடங்குகள் தற்போது வளம் மீட்பு பூங்காவாக மாறி, உரம் தயாரிக்கும் தொழிற்சாலையாக, காய்கறி தோட்டமாக மாறி வருகிறது. சமீபத்தில் பேரூராட்சிகளில் பாலிதீன் பை ஒழிப்பு தீவிரமாக நடந்தது. கடைகள் தோறும் ரெய்டு நடத்தி, பழங்காலத்திலிருந்து நாம் பயன்படுத்திய மஞ்சள் பையின் மகிமை எடுத்துரைக்கப்பட்டது. 100 சதவீத முயற்சியில் 10 சதவீதம் பேர் திருந்தினால் கூட தங்களுக்கு திருப்தி தான் என்று இத்திட்டத்தை செயல்படுத்தினர். அடுத்ததாக பேரூராட்சியின் குப்பை கிடங்கு எல்லாம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்கும் இடமாக மாறி வருகின்றன.
பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும் மட்கும், மட்காத குப்பை, குப்பை கிடங்குக்கு கொண்டு வரப்பட்டு, மட்கும் குப்பை பிரித்தெடுக்கப்பட்டு நீண்ட படுக்கை வசத்தில் பரப்பப்படுகிறது.
அதன் மீது சாணம், "இ சொலுஷன்' எனப்படும் கரைசல் தெளிக்கப்பட்டு 15 நாளுக்கு ஒரு முறை, திருப்பி விட்டு, 45 நாட்கள் மட்க வைக்கப்படுகிறது. மக்கிய குப்பை சலித்து, தொட்டியில் பரப்பப்பட்டு, சணல் சாக்கு பரப்பில் அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, சிறந்த இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. மக்கிய உரத்தை சாணக்கரைசல் ஊற்றி, மண்புழுவை வளரவிட்டு மண்புழு உரமாகவும் மாற்றி வருகின்றனர். இந்த மண்புழு உரம் கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகிறது. இயற்கை உரம் கிலோ ரூ.3 ரூபாய்.
கோட்டையூர் பேரூராட்சி செயல் அலுவலர் கவுஸ் முகைதீன் : நாளுக்கு நாள் குப்பை அதிகரித்து வருகிறது. அவற்றை பயனுள்ளதாக மாற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோட்டையூர் பேரூராட்சி குப்பை கிடங்கை, வளம் மீட்பு பூங்காவாக மாற்றியுள்ளோம். எங்கள் பேரூராட்சியில் ஒரு நாளைக்கு ஒரு டன் 300 கிலோ குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் 800 கிலோ மக்கும் குப்பை. இவற்றை, இயற்கை உரமாகவும், மண்புழு உரமாகவும் மாற்றி விற்பனை செய்து வருகிறோம். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை ரூ.3,400 ரூபாய்க்கு இந்த உரத்தை விற்பனை செய்துள்ளோம். தென்னை மரத்துக்கு, மாடித்தோட்டம், தோட்டக்கலை பயிர்களுக்கு வாங்கி செல்கின்றனர். பேரூராட்சி குப்பை கிடங்கில், உரத்தை பயன்படுத்தி, கத்தரி, பூசணி, புடலை, பீர்க்கங்காய், பப்பாளி, வெண்டை, கத்தரி விளைவிக்கிறோம். மக்காத பாலிதீன் கழிவுகளை, அதே குப்பை கிடங்கில் தூளாக அரைத்து ரோடு போட பயன்படுத்துகிறோம். நாங்கள் எவ்வளவோ திட்டங்கள் செயல்படுத்தினாலும், பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால்தான் அதை முழுமையாக நிறைவேற்ற முடியும். விவசாயிகளும், இயற்கை உரத்தை வாங்கி பயனடைய வேண்டும், என்றார்.
courtesy;Dinamalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval