‘செட்டில்மெண்ட்’ ஆவணங்களுக்கு விதிக்கப்படும் முத்திரைக் கட்டணம் 8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.
சந்தை மதிப்பு வழிகாட்டி
தமிழக சட்டசபையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-
பதிவுத் துறையில், கடந்த 2014-15-ம் நிதியாண்டில் 25 லட்சத்து 73 ஆயிரத்து 931 ஆவணங்களைப் பதிவு செய்ததன் மூலம் ரூ.8 ஆயிரத்து 279.64 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சுமார் 1.84 லட்சம் தெருக்களுக்கும், 4 கோடி சர்வே எண்களுக்கும் சந்தை மதிப்பு வழிகாட்டி, பதிவுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
48 மணி நேரத்தில்…
அதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
19 வணிகவரி அலுவலகங்கள் செயல்படும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக வளாகம் கட்டப்படும்.
தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டத்தின் கீழ், வணிகர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்று 30 நாட்களுக்குள் பதிவுச் சான்று வழங்கப்படுகிறது. இனி விண்ணப்பம் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பதிவுச் சான்று வழங்கப்படும்.
பெரு வணிகர்கள் பல்வேறு வணிகவரித் துறை சம்பந்தப்பட்ட சேவைகளை பெறுவதற்கு ஏதுவாக, வேலூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஐந்து கோட்டங்களில் அதிக வரி செலுத்தும் 50 முதல் 75 வணிகர்களை உள்ளடக்கிய, துணை ஆணையரை வரிவிதிப்பு அலுவலராகக் கொண்ட, ‘‘கோட்ட அதிக வரி செலுத்துவோர் பிரிவு’’ ஏற்படுத்தப்படும்.
உச்சவரம்பு உயர்வு
கோவை கோட்டத்தில் இயங்கிவரும் இரண்டு, “விரைவு வழி வரிவிதிப்பு வட்டங்கள் இனி ‘‘கோட்ட அதிக வரி செலுத்துவோர் பிரிவு’’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.
துணை வணிகவரி அலுவலர்களின் வரி விதிப்பிற்கான உச்சவரம்பு, வணிகர்களின் ஆண்டு மொத்த விற்பனை தொகை ரூ.75 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். இந்த உச்சவரம்பு ரூ.1 கோடியாக உயர்த்தப்படும்.
வணிகர்கள் சிரமத்தை குறைக்கும் வகையில், முதலீட்டுப் பொருட்கள் மற்றும் தொழிலக உள்ளீட்டுப் பொருட்கள் பிற மாநிலங்களில் உள்ளவாறு வரையறுக்கப்பட்டு பட்டியலிடப்படும்.
ஆலோசனைக்குழு
வணிகவரித்துறையில் தேவை யற்ற வழக்குகள் தொடுப்பதைத் தடுத்து, சட்டச் சிக்கல் உள்ளடக்கிய இனங்களில் மட்டுமே வழக்கு தொடரவும், மேல் முறையீடு செய்யவும் இந்தத் துறைக்காக தனி வரி வழக்குக் கொள்கை வரையறுக்கப்படும்.
வரி நடைமுறை தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்படும் அன்றாடச் சிக்கல்களை தீர்ப்பதற்காக, வணிக சங்கங்களுடன் கலந்தாலோசிக்க, வணிகவரி ஆணையர் தலைமையில் வரி செலுத்துவோர் மாநில ஆலோசனைக் குழு உருவாக்கப்படும்.
நலவாரியம்
அதிக அளவில் வரி செலுத்தும் வணிகர்களை பெருமைப்படுத்தும் விதமாக நற்சான்றிதழ் வழங்கவும், சிறு வணிகர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையிலும், வரி செலுத்துவோர் விழிப்புணர்வு மற்றும் தகவல் தொடர்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தின் உறுப்பினர் ஆக விரும்பும் வணிகர்களுக்கு பதிவுச்சான்று வழங்கப்படும் அன்றே வணிகர் நலவாரியத்தில் உறுப்பினராக்கப்படுவர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் கடலூர் மாவட்டம், புவனகிரி ஆகிய இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இந்த நிதியாண்டில் கட்டிடம் கட்டப்படும்.
செட்டில்மெண்ட் பத்திரம்
குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இடையேயான கூட்டுப் பங்காண்மை கலைப்பு, குடும்ப உறுப்பினர்கள் அல்லாத கூட்டுடைமைதாரர் அல்லது கூட்டுப் பங்குதாரருக்கு உரிமையை விட்டுக் கொடுக்கும் விடுதலை, குடும்ப உறுப்பினர் அல்லாதவருக்கு எழுதிக்கொடுக்கும் ‘‘செட்டில்மெண்ட்’’ போன்ற ஆவணங்களுக்கு, சொத் தின் சந்தை மதிப்பில் தற்போது வசூலிக்கப்படும் 8 சதவீதம்முத்திரைத் தீர்வை, இனி அனைத்து வகை ஆவணங்களுக்கும் 7 சதவீதமாகக் குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval