பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களை பழி வாங்கும் கேடயமாக இளையதலைமுறையினர் பயன்படுத்த துவங்கியுள்ளனர்; மோசடி ஆசாமிகளின் வலையில் சிக்கி, இளம்பெண்கள் துாக்கத்தை தொலைத்து வருகின்றனர்.
நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற செயல்களை காட்டிலும், ‘கிரெடிட்’ கார்டு மோசடி, ஹேக்கிங், ஆபாச மிரட்டல்கள் என, நாளுக்கு நாள், ‘சைபர்’ குற்றங்கள் பெருகி கொண்டே செல்கின்றன. இதுஒருபுறம் இருக்க, மறுபுறம் இணையதளங்கள் வாயிலாக காதலித்த பெண்ணை பழிவாங்குவது, காதலிக்க மறுக்கும் பெண்களை மிரட்டுவது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இதை மெய்ப்பிக்கும் வகையில், நேற்று முன்தினம் தனியார் இன்ஜி., கல்லுாரியில் படிக்கும் நாமக்கல் மாணவர், தான் காதலித்த பெண்ணின் புகைப்படங்களை, ‘மார்பிங்’ செய்து ஆபாசமாக இணையதளங்களில் வெளியிட்டார். மாணவி அளித்த புகாரில், கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மாணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் இதேபோன்று தினமும் பல்வேறு, சைபர் குற்றங்கள் நடந்து வருகின்றன. கோவை மாநகரில், 2014ம் ஆண்டு, 1,343 சைபர் குற்ற வழக்குகளும், இந்தாண்டு ஆகஸ்ட் வரை, 869 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்தாண்டு மாதந்தோறும் சராசரியாக, ௧௦௩ சைபர் குற்ற வழக்குகள் பதிவான நிலையில், இந்தாண்டு மாதந்தோறும் சராசரியாக ௧௦௯ வழக்குகள் பதிவாகி வருகின்றன.
பழிவாங்கும் படலம்
இமெயில், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் ஆபாச கருத்துகள் பகிர்வது, மிரட்டுவது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கடந்தாண்டு, ௨௨௬ வழக்குகளும், நடப்பாண்டு எட்டு மாதத்தில், ௧௬௩ வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆபாச எஸ்.எம்.எஸ்., மிரட்டல் தொடர்பாக கடந்தாண்டு, ௨௭௫ வழக்குகளும், நடப்பாண்டு, ௧௬௨ வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இதேபோன்று ‘ஆன்லைன்’, வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக கடந்தாண்டு, 31 வழக்குகளும், இந்தாண்டு 90 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த, 2014ம் ஆண்டு ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு மோசடி குறித்து, 206 வழக்குகள் பதிவாகின. இந்தாண்டு இதுவரை, 181 வழக்குகள் பதிவாகியுள்ளன.
நடப்பாண்டு மொத்தம், ௮௬௯ சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 321 வழக்குகள் பைசலாகியுள்ளன; 548 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சைபர் குற்றங்களில், பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் இளையதலைமுறையினர் தான் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘பெரும்பாலான சைபர் குற்றங்களில் இளம்தலைமுறையினர் ஈடுபடுகின்றனர். காதலி மற்றும் பெண் நண்பர்களின் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு மிரட்டுவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற வன்ம செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்களும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval