Monday, September 21, 2015

சென்னைசாலைகளில் பரவி வரும் நவீன வழிப்பறி கொள்ளை

HighwayRobbery
சென்னை நகர சாலைகளில் நீங்கள் அடிக்கடி கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவரா? ஒரு நிமிடம் இந்த செய்தியை படித்துவிட்டு, அதன்பின் உஷாராக செல்லுங்கள். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில், ஒரு காமெடி காட்சியில் வடிவேலு ஒரு கும்லை வைத்து வழிப்பறியில் ஈடுபடுவார். தங்களிடம் மாட்டும் அப்பாவியிடம் அவரது நகைக்கடையையே எழுதி வைக்க சொல்லும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோல், தற்போது சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத மற்றும் இருட்டான பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் நவீன வழிப்பறி கொள்ளைகள் நடைபெறுகின்றன. அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேன்ஜ் அலுவலக சிக்னல் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் காலைநேரத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் வலதுபுறம் திரும்பினார். அப்போது திடீரென குறுக்கே வந்த ஒரு சைக்கிள் அவரது வண்டியின்மீது இடித்தது.
அவர் பரிதாபப்பட்டு வண்டியை நிறுத்தி, அந்நபரை தூக்கி நிறுத்தினார். அந்த வாலிபரின் கையில் லேசான சிராய்ப்பு காயம் மட்டுமே இருந்தது. அந்த வாலிபரும் ‘ஸாரி சார், நான்தான் ஏதோ அவசரத்தில் குறுக்கே வந்துவிட்டேன். நீங்க போங்க’ என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த 2 பேர் ‘ஒரு அப்பாவியை ஏன் சார் இப்படி ஏமாத்துறீங்க? அவரது சைக்கிள் டேமேஜ் ஆயிடுச்சு. அவருக்கும் கை, கால்ல பலத்த அடிபட்டிருக்கு. இதை சரிசெய்ய ரூ.2 ஆயிரம் ஆகும். கொடுத்துட்டு போங்க’ என்று மிரட்டியிருக்கின்றனர். அவர்களிடம் மோட்டார் சைக்கிள் வாலிபர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, பணம் பிடுங்கும் ஆசையில் சைக்கிள் ஆசாமியும் மனம் மாறினார். இதைப் பார்த்ததும் மோட்டார் சைக்கிள் வாலிபர், சாலையோரம் நின்றிருந்த போலீஸ்காரரை அழைக்கவே… சைக்கிள் வாலிபர் எஸ்கேப்! மற்ற 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் மாட்டியிருந்த சாப்பாட்டு பையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதேபோல் பெரம்பூர் ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் 3 சக்கர வண்டியில் வந்த மாற்று திறனாளி மீது ஒரு சாலை திருப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதிவிட்டார்.
மாற்றுத்திறனாளி வாலிபரிடம் அவர் ‘எங்கேயாவது அடிபட்டதா?’ என்று கேட்டு, அவர் ‘இல்லை’ என்று கூறியதும், மோட்டார் சைக்கிள் வாலிபர் கிளம்ப தயாரானார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சம்பந்தமே இல்லாமல் மாற்றுத்திறனாளி வாலிபருக்காக பரிந்து பேசினார். அவர்களது பரிவான பேச்சில் மயங்கிய வாலிபர், மோட்டார் சைக்கிள் வாலிபரிடம் ‘சைக்கிள் வீல் உடைந்துவிட்டது. எனக்கும் பலமாக அடிபட்டு உள்ளது. இவற்றை சரிப்படுத்த ஆயிரம் ரூபாய் கொடு’ என்று மிரட்ட தொடங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத மோட்டார் சைக்கிள் வாலிபர், ‘நீதான் எங்கும் அடிபடவில்லை என்று கூறினாய். சம்பந்தமே இல்லாத 2 பேர் உதவிக்கு வந்ததும் ஆயிரம் ரூபாய் கேட்கிறாயே? நான் சைக்கிள் வீலை பெண்டு எடுக்க மட்டும் காசு தருகிறேன்’ என்று 300 ரூபாயைக் கொடுத்தார். ஆனால், அந்த பணம் அவருக்கு முழுமையாக போய் சேரவில்லை. இடையில் பஞ்சாயத்துக்கு வந்தவர்கள் ரூ.250 எடுத்துக் கொண்டு, மாற்று திறனாளி வாலிபரிடம் ரூ.50 மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டனர்.
தற்போது அந்த மாற்று திறனாளி வாலிபர் புலம்பியபடி, அடுத்த ஆளிடம் மோதி காசு பிடுங்குவதற்காக உடைந்த 3 சக்கர வாகனத்துடன் சென்னை நகர தெருக்களில் அலைந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் அருகே 4 முனை சந்திப்பு சிக்னல் அருகே மதிய நேரம் சிக்னல் கிடைத்ததும் அனைத்து வண்டிகளும் செல்ல தயாராகின. அப்போது நெசப்பாக்கத்தில் இருந்து வேகமாக வந்த கார், வடபழனி நோக்கி வேகமாகத் திரும்பியது. அதே நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் கடக்கவும், இரு வண்டிகளும் பலத்த சேதமடைந்தன. இருவரும் நடுரோட்டில் ஆக்ரோஷமாக சண்டை போட்டனர். பின்னர் இருவரும் சமாதானமாகப் போகும் சமயம், எங்கிருந்தோ வந்த ஒரு கும்பல் கார்காரரை மிரட்டி பணம் பறிக்க துவங்கியது. இதைப் பார்த்ததும் மற்ற வாகன ஓட்டிகள் அங்கிருந்து சிதறி ஓடினார்கள். கார்காரரும் தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்பதை அறிந்ததும், அக்கும்பலிடம் ரூ.5 ஆயிரத்தைத் தந்துவிட்டு, அங்கிருந்து ‘எஸ்கேப்’ ஆனார்.
அவரிடம் ரூ.5 ஆயிரம் பறித்த கும்பல், தங்களுக்கு ரூ.4,500-ஐ எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிள் வாலிபரிடம் ரூ.500 தந்துவிட்டு, ‘டாஸ்மாக்’ பாரை நோக்கி குஷியாக விசிலடித்தபடி பறந்தனர். மேற்கு மாம்பலம், அயோத்தியா மண்டபம் அருகே, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் விநாயகர் சிலையை வாங்குவதற்காக, தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரமாக நிறுத்தி வைத்தனர். பின்னர் அவர்கள் வண்டியை எடுக்க வந்தபோது, சாலையோரமாக கடை வைத்திருந்த 2 பெண்கள், ‘நீங்கள் வண்டியை நிறுத்தும்போது, எங்கள் கடையில் வைத்திருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டீர்கள். அதற்கு ரூ.500 நஷ்டஈடு கொடுத்தால்தான் வண்டியை எடுக்க விடுவோம்’ என்று சண்டை போட்டனர். இதனால் திகைத்துப் போன இருசக்கர வாகன ஓட்டி பெண்கள், ‘நாங்கள் வண்டியை நிறுத்தும்போது, இங்கு கடை இல்லை’ என்று வாய்த் தகராறில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே சண்டை வலுத்தது. மற்றவர்கள் இதை வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரும் சமாதானம் மேற்கொள்ளவில்லை.
அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு வயதான ‘மாமா’, ‘பூஜைக்கு நேரமாகலையா? அவா கேக்கறத கொடுத்துட்டு போங்கோ. இல்லேன்னா, இருக்கறதைக் கொடுத்துட்டு போங்கோ’ என்று கூறியிருக்கிறார். இதில் கடுப்பான இருசக்கர வாகன ஓட்டி பெண்கள், தங்கள் கையில் இருந்த ரூ.50, ரூ.100-யை சாலையோர பெண்களிடம் ‘தண்டம்’ அழுதுவிட்டு சென்றனர். இத்தனைக்கும் அதன் அருகிலே சாலையோர போலீஸ் செக்போஸ்ட் இருந்தும், அங்கு காவலர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நகரில் தற்போது இதுபோல் அதிரடி ஆசாமிகள் எந்நேரமும் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஏமாந்த ஆசாமிகளிடம் அதிரடியாக பணம், பொருட்களை பிடுங்குவது, தங்களைவிட வலுவானவர்கள் என்று தெரிந்தால், அவர்களிடம் இருந்து ‘எஸ்கேப்’ ஆவதுமாக சுற்றி திரிகின்றனர். எனவே, நீங்கள் இருசக்கர மற்றும் கார்களில் செல்லும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுகுறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற இன்ஸ்டன்ட் வழிப்பறி ஆசாமிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval