Tuesday, September 1, 2015

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நாடு தழுவிய ஸ்டிரைக்

Strikeஇந்தியா முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று பொது வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. இந்திய அளவில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 20 கோடி ஊழியர்கள், தொழிலாளர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை அனைத்து தொழிலகங்களிலும் அமல்படுத்த வேண்டும். அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பிற்கு வகை செய்யும் தேசிய பாதுகாப்பு நிதியம் அமைக்க வேண்டும்.
பொதுத்துறை பங்குகளை விற்பதை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய சட்டம், சாலைப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சட்ட முன்வடிவு மற்றும் புதிய மின்சார சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 2ம் தேதி (இன்று) பொது வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்று கடந்த மே மாதம் 26ம் தேதி டெல்லியில் நடந்த அனைந்திந்திய தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ் உள்பட 11 தொழிற்சங்கங்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கம்,
இன்ஸ்சுரன்ஸ் வங்கி, வருவாய்த்துறை, தபால்துறை, லாரி, தனியார் பஸ், ஆட்டோ, டிராவல்ஸ் கார் உரிமையாளர்கள் சங்கம், இரண்டு மற்றும் நான்கு சக்கர பழுதுபார்போர் சங்கம் உள்பட 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் இன்று நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வதாலும் பயணிகள் போக்குவரத்து பெரும்பாலான இடங்களில் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று சரக்கு போக்குவரத்து பாதிக்ககூடும். வங்கிப் பணிகளில் பண பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் மற்றும் இதர சேவைகள் முடங்கும்.
மத்திய அரசு வேண்டுகோள்
புதுடெல்லி: மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது: இன்று நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட மாட்டாது. பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றே கருதுகின்றேன். தொழிலாளர்கள் மற்றும் தேசிய நலனை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு தொழிற்சங்கங்களுக்கு நான் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன். தொழிற்சங்கங்களுக்கு எதிராக செயல்பட நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. தொழிலாளர்களின் உரிமையும் நலனும் எங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நாளைய வேலை நிறுத்தத்துக்கு பின்னரும், தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval