Tuesday, August 2, 2016

இவரை போன்ற நல்ல மனிதர்களை பிரபலப்படுத்துவோம்.



சேலம் மாவட்டம் ஆத்தூர் விரைவு நீதிமன்றத்தில் செக் மோசடிகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சிவக்குமார். இவர் ஆத்தூர் நியூ ஹவுசிங் யூனிட் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். அரைக்கை சட்டை, வெள்ளை வேட்டி, ரப்பர் செருப்போடு கல்லூரி மாணவரைப் போல இரண்டு மூன்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறி நீதிமன்றத்துக்கு வருகிறார். சக நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்களோடு ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுகிறார். நீதிபதிக்கு யாராவது கையூட்டு கொடுக்க முற்பட்டால் நீதிமன்றத்துக்கு வரச் சொல்லி நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் முன்பு அவரைப் பகிரங்கப்படுத்தி எச்சரிக்கை செய்து அனுப்புகிறார்.

சமீபத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் குடல் அறுவைச்சிகிச்சை செய்துகொண்டார். அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், ‘‘எங்கள் மருத்துவமனையில் ஆறு நாட்கள் தங்கியிருந்தார். டிஸ்சார்ஜ் ஆன அன்றுதான் அவர் நீதிபதி என்றே எங்களுக்குத் தெரியும். அனைத்தையும் சகித்துக்கொள்ளும் பக்குவப்பட்ட மனிதர். அப்படி ஒரு மனிதரை பார்த்ததில்லை’’ என்கிறார்கள்.

சிவக்குமாரின் நண்பர் கண்ணன், ‘‘சிவக்குமாரை நான் சிவா என்றுதான் அழைப்பேன். சிவா கீரனூரில் வித்தியாசமான மனிதராக திகழ்ந்தார். உயர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சிறு வயதில் இருந்தே சாதி மறுப்பாளர். சட்டக்கல்லூரி மாணவராக இருந்தபோதும் தனித்துவமாக விளங்கினார். ஏழைகளுக்காக இரக்கப்படக் கூடியவர். சிவாவைப்போல ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. நேர்மையான மனிதர். நீதிபதி பதவிக்கு மிகப் பொருத்தமான மனிதர்’’ என்கிறார்.

ஆத்தூர் நீதிமன்ற வழக்கறிஞர் லெனின், ‘‘மிகவும் எளிமையான மனிதர். தினமும் சைக்கிளிலும், பேருந்திலும்தான் நீதிமன்றத்துக்கு வருவார். யார் மனதையும் புண்படுத்தமாட்டார். அதே சமயத்தில் அநீதிக்கு எதிரானவர். வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்காடிகளை தனக்கு நிகராக மதிக்கக்கூடியவர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்படும்வரை சுயமரியாதையோடு நடத்தும் மாண்பு உடையவர். தன்முன் யாரும் செருப்பைக் கழற்றிவிட்டுக் கைகளைக் கட்டிக் குனிந்து பேசுவதை அனுமதிக்க மாட்டார். வழக்குகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிப்பார். வழக்குக்கு ஏற்றவாறு வாய்தா கொடுப்பார். கடைசி ஏழை மனிதனுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர்’’ என்றார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval