Tuesday, August 9, 2016

பா.ம.கவின் அங்கீகாரம் ரத்து?! மரக்காணம் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு!

மாமல்லபுரத்தில் கடந்த 2013ல்  நடந்த சித்திரைப் பெருவிழாவில், இருசமூகத்தினருக்கு இடையே எழுந்த மோதல் தொடர்பாக, பா.ம.கவிற்கு எதிராக வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.<gt; இவ்வழக்கை விசாரித்த  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கவுல் மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய டிவிஷனல் பெஞ்ச், 'மோசடி செய்து பா.ம.க அங்கீகாரம் பெற்றது தெரியவந்தால், தேர்தல் கமிஷனே பா.ம.க மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று' தீர்ப்பு அளித்துள்ளது. 

மாமல்லபுரம் வன்னியர் சித்திரை பெருவிழா; ஒரு பிளாஷ் பேக்!

ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில், சித்திரை மாதம், பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் 'முழுநிலவு சித்திரை பெருவிழா' நடப்பது வழக்கம். இந்த விழாவிற்கு வருபவா்களில் ஒருசிலர்,  வழியில் உள்ள கொடிக்கம்பங்களை சிதைப்பதாகவும், மோதல்களில் ஈடுபடுவதாகவும்  புகார் எழுந்தது. இந்த நிலையில் 2012 ல் நடைபெற்ற சித்திரைப் பெருவிழாவில்,  பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் பேச்சு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரானதாக பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், 2013 ல்  'வன்னியர் சங்கம் சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடத்தக் கூடாது' என வாராகி என்பவர், காவல்துறையினருக்கு மனுக்களை அனுப்பினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். 
இந்நிலையில், “கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தில், வன்னியர் சங்கத்தலைவா் காடுவெட்டி குரு அவதூறு மற்றும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசினார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும் சித்திரைப் பெருவிழாவில் சாதிமோதல்களை தூண்டும் விதமாக பேசுவார்கள் என்ற அச்சம் மக்களிடையே நிலவியுள்ளது. இவ்வாறு பேசியதற்காக அவா் மீது பல வழக்குகள் பதியப்பட்டு விசாரணையில் உள்ளது.” என நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார் அப்போதைய காஞ்சிபுரம் எஸ்.பி. சேவியர் தன்ராஜ்.

சென்னை உயர்நீதிமன்றமும், அதுகுறித்து முடிவு செய்யும் பொறுப்பை காவல்துறை வசம் ஒப்படைத்தது. விழா நடத்த அனுமதிப்பதா… வேண்டாமா என காவல்துறை அதிகாரிகளுக்கே குழப்பம். விழா நடந்தால் பிரச்னை வரும். நடக்காவிட்டால் அதைவிட அதிகமான பிரச்னை எழும் என்பதால் பல்வேறு நிபந்தனைகளை அடுக்கி, ஏப்ரல் 25ம் தேதி நடைபெரும் சித்திரை பெருவிழாவிற்கு அனுமதி கொடுத்தார்கள்.
ஆனால் முந்தைய ஆண்டு நடந்த நிகழ்வுகளே 2013 ம் ஆண்டிலும் அரங்கேறியதாக புகார் எழுந்தது. மேலும் இந்த விழாவில் காடுவெட்டி குருவின் பேச்சு இன்னும் அனலடித்தது.

மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடந்து கொண்டிருக்கையில் மரக்காணம் பகுதியில் இரு பிரிவினருக்கிடையே இடையே கலவரம் மூண்டது. இதில், பல குடிசைகள் தீக்கிரையாயின. உயிர்ச் சேதமும் ஏற்பட்டது. கலவரத்தில்  ஈடுபட்டதாக பா.ம.க.வினர் 1,112 பேர் மீது காவல்துறையினர் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கி பேசியதும்,  கலவரமும் தமிழக அரசை கொதிப்படைய செய்தது. விழுப்புரத்தில் ராமதாஸையும், சென்னையில் அன்புமணி, காடுவெட்டி குரு மற்றும் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோரையும் மாமல்லபுரம் போலீசார் மடக்கி கைது செய்தனா்.

வறுத்தெடுத்த வாராகி!

இந்த நிலையில் பா.ம.க வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வாராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
“ மாமல்லபுரத்தில் ஒவ்வொரு முறை சித்திரைப் பெருவிழா நடக்கும் போதும், கலவரம் ஏற்படும். '2013 ம் ஆண்டு கலவரம் எற்படும்' என்று தடைகோரி, வழக்கு தொடர்ந்தேன். அதை மீறி காவல்துறை அனுமதி கொடுத்ததால், ஒரு பெரிய கலவரத்தை தமிழகம் சந்திக்க நேரிட்டது.  பேசிய ஆடியோ மற்றும் வீடியோக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். அதன் அடிப்படையில், 'கட்சி தொடங்கும் போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, கொடுத்த வாக்குறுதிகளை மீறி கட்சி செயல்பட்டால் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.” என்று நீதிபதிகள்  தீர்ப்பு வழங்கினர்" என்கிறார் வாராகி.

ரத்தாகுமா பா.ம.க அங்கீகாரம்?

வாராகியின் வழக்கறிஞர் விஜேந்திரன், “பா.ம.கவினர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக நடந்து கொண்டதாக வழக்கில் சொல்லியிருந்தோம். வழக்கு நேற்று (08.08.16) விசாரணைக்கு வந்தது. 2002 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஸ்டேட் ஆஃப் வெல்பர் அசோசியேஷன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், ‘தேர்தல் கமிஷனுக்கு, ஒரு அரசியல் கட்சியின் அங்கீகாரத்தையோ, பதிவையோ ரத்து செய்வதற்கு அதிகாரம் இல்லை. ஆனாலும் ஒரு அரசியல் கட்சி தனது கொள்கை அறிக்கைக்கு எதிராக செயல்பட்டால் மோசடி செய்து அனுமதி பெற்றதாக கருதப்படும். அந்த நிலையில் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்.’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை சுட்டிக் காட்டினோம்.

எனவே  கட்சியை தொடங்கும்போது அளித்த கொள்கை அறிக்கைக்கு மாறாக பாமக நடந்துகொண்டது தெரியவந்தால், தேர்தல் கமிஷனே பா.ம.க மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கவுல் மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய டிவிஷனல் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.

courtesyvikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval