Friday, August 5, 2016

ஈஸியாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!


நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு செல்கிறோம் என்றால் அதற்கு நம் நாட்டின் தரப்பிலிருந்து வழங்கப்படும் அனுமதிதான் பாஸ்போர்ட். ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் அவர் அந்த நாட்டின் குடிமகன் என்பதை உறுதிபடுத்தும்.

இந்த பாஸ்போர்ட் வழங்கும் வேலையை வெளிநாட்டு விவகார அமைச்சகத்தின் (Ministry of External Affairs) கீழ் தூதரக பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு (Consular, passport and Visa Division), இந்தியாவில் 37-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஸ்போர்ட் அலுவலகங்களை அமைத்து, பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கி வருகின்றன. இந்தியாவில் பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்களான பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் 81 இருக்கின்றன.

இந்த 81 சேவா கேந்திரங்களிலும் அரசு - தனியார் கூட்டு முயற்சி (Public Private  Partnership) அடிப்படையில் வாடிக்கை யாளர் சேவை அளிக்கப்படுகிறது. பாஸ்போர்ட் அலுவலகத்தின்  குறிப்பிட்ட சில வேலைகளை டிசிஎஸ் நிறுவனம் செய்யும்; ஆனால், எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தினால் நேரடியாக பாஸ்போர்ட் வழங்க முடியாது. கடந்த 2010 முதல் டிசிஎஸ் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதுவே தற்போது நடைமுறையில் இருக்கிறது. ஒரு விண்ணப்பதாரருக்கு 150 ரூபாய் வீதம் டிசிஎஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. அரசும் தனியார் நிறுவனமும் இணைந்து செயல்படுவதினால், பாஸ்போர்ட் வழங்குவதில் இருந்த நடைமுறைச் சிக்கல்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயுள்ளன.



இதுபோல வேறு என்ன மாதிரியான மாற்றங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி (Regional Passport Officer) க.பாலமுருகனை சந்தித்தோம். பாஸ்போர்ட் நடைமுறையில் நடந்த மாற்றங் களை எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘பொதுச் சேவை மையங்கள் (Common Service Centre - CSC) என்று அழைக்கப்படும் இரண்டு புதிய சாளரங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்த சாளரத்தில் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களிடமிருந்து விவரங்கள் வாங்கி ஆன்லைனில் விண்ணப்பித்துத் தரப்படுகிறது. தனியார் ஏஜென்ட்டுகளிடம் ஒரு பாஸ்போர்ட்டுக்கு 2,500 ரூபாய் என்று அதிக கட்டணம் கொடுத்து ஏமாறுவதைவிட இந்த சாளரங்களில் 155 ரூபாய் கட்டணத்துக்கு ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அதேபோல், சோஷியல் ஆடிட் செல் (Social Audit Cell)  என்று ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது. ஒருவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அவரின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்றாலோ, பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என்றாலோ, அவர் இந்த செல்லில் கேட்கலாம்.

எந்த காரணத்துக்கு பாஸ்போர்ட் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது அல்லது பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என்பது விண்ணப்பதாரர் கேட்ட சில நிமிடங்களில் கடிதம் மூலம் பதில் தெரிவிக்கப்படும். எந்த காரணத்துக்காக தங்கள் விண்ணப்பம் ரத்து செய்யப் பட்டது என்பதைத் தெரிந்து கொண்டால், மீண்டும் அப்படிப்பட்ட தவறு நடக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த செல் இயங்கி வருவதை தெரியப்படுத்த தினமும் காலை நேரங்களில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படுகிறது.

சோஷியல் ஆடிட் செல்லை தொடர்ந்து, எந்த அலுவலர் விண்ணப்பத்தை ரத்து செய்தாரோ, அதே அலுவலர் அந்த விண்ணப்பதாரரின் உதவியோடு விண்ணப்பத்தை சரிசெய்து பாஸ்போர்ட் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று எங்கள் அலுவலகத்தில் ஒரு பழக்கத்தை கொண்டு வந்திருக்கிறோம்.



இதனால் பெருவாரியான விண்ணப்பதாரர்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்குமுன் நாள் ஒன்றுக்கு 2,000 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட இடத்தில் தற்போது 2,700 (சாலிகிராமம் - 1500, அமைந்தகரை - 600, தாம்பரம் - 600) விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் அதே எண்ணிக்கை யிலான அதிகாரிகளைக் கொண்டு இதை செய்திருக்கி றோம். இப்படி வருடத்துக்கு இந்தியாவில் உள்ள 81 சேவை கேந்திரங்கள் மூலம் ஒரு கோடி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு பாஸ்போர்ட் வழங்கப் பட்டு வருகின்றன” என்று கூறி முடித்தார்.

என்ன மாதிரியான மாற்றங் கள் வந்திருக்கின்றன என்பதை அமைந்தகரை சேவா கேந்திரத் தில் சென்று பார்த்தோம்.

1 தற்போது பாஸ்போர்ட் ஆன்லைனில்  (
https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink)மட்டுமே
விண்ணப்பிக்கக்கூடிய ஒரு ஆவணமாக மாற்றப்பட்டு இருக்கிறது. விண்ணப்பிக்கும் போதே என்ன மாதிரியான ஆவணங்களை இணைக்க வேண்டும் என்கிற விவரங்கள் இந்திய பாஸ்போர்ட் சேவை வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

2 ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போதே நாம் பிரின்ட் அவுட் எடுக்கும் படிவத் தில் எத்தனை மணிக்கு, எந்த பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திலிருந்து அடுத்த 15 - 30 நிமிடத்துக்குள் நமக்கான அழைப்பு வந்துவிடுகிறது.

3பாஸ்போர்ட் அலுவலகத்தில் நுழைந்தவுடன் ஒரு சாளரத்தில், பாஸ்போர்ட் அலுவலகம் கேட்டிருந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா என்பதை மட்டும் சரிபார்த்து டோக்கன் தரப்படுகிறது. இந்த சாளரத்தின் அருகில் மக்களின் வசதிக்காக போட்டோ காப்பி எடுப்பதற்கு சில இயந்திரங்கள் இருக்கின்றன.

4இந்த டோக்கனுடன் உள்ளே காத்திருப்பு அறையில் காத்திருக்கும்போதே ஒவ்வொரு டோக்கனாக அழைப்பு வருகிறது. டோக்கன் எண்படி முதலில் A சாளரத்துக்கு சென்றால், அங்கு நம் பேப்பர் டாக்குமென்ட்டுகளை ஸ்கேன் செய்துவிடுகின்றனர். இதனால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிறைய டாக்குமென்ட்டுகளை வைத்திருக்கத் தேவையில்லை. அதேபோல் ஒருவரைப் பற்றிய குறிப்புகள் தேவைப்படும்போது தேவையான விவரங்களை உடனே எடுக்க முடியும். அதோடு கைவிரல்களின் ரேகைகள் பயோ - மெட்ரிக் ஸ்கேன்கள் மூலம் எடுக்கப்படுகின்றன. மேலும், டிஜிட்டல் கையொப்பங்களும் இந்த சாளரத்தில் எடுக்கப்படுகின்றன.

5A சாளரத்தில் ஆவணங்கள் ஸ்கேன் செய்து முடித்தவுடன், B சாளரத்தில் நம் சான்றிதழ்களின் தன்மை சரிபார்க்கப்படும். அதன் உண்மைத்தன்மையில் சந்தேகம் வந்தால் கேள்விகள் கேட்கப்படும்.

6B சாளரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவுடன், சாளரம் C-க்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த சாளரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படுவதற்கான விவரங்கள் கேட்கப் பட்டு, பாஸ்போர்ட் வழங்குவதற்காக பாஸ்போர்ட் அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

7பாஸ்போர்ட் வழங்குவதற்கான பரிந்துரை வந்தவுடன், போலீஸ் சரிபார்ப்பு தேவையானவர் களுக்கு, அடுத்த இரண்டு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு  விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்படுகிறது. போலீஸார் சரிபார்த்தபின் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களின் வீட்டுக்கே பாஸ்போர்ட் அனுப்பப்படுகிறது. இந்த மொத்த செயல்பாடுகளும் முடிந்து நாம் பாஸ்போர்ட் விண்ணப்பித்ததி லிருந்து, பாஸ்போர்ட் நம் கைக்கு வரும் வரை சுமாராக 21 - 30 நாட்கள் ஆகின்றன.

8A, B, C ஆகிய சாளரங்களில் சரிபார்ப்பு நடக்கும்போது நம் படிவத்தில் சரிபார்ப்பதை நமக்கு வைக்கப்பட்டுள்ள மானிட்டர் மூலம் பார்த்துக்கொண்டே வரலாம். இதனால் நம் சான்றிதழ் கள் மற்றும் பாஸ்போர்ட்டில் ஏதேனும் தவறாக குறிப்பிடப் பட்டிருந்தால், அவற்றை திருத்திக் கொள்ளலாம்.

முன்பு பல வாரங்கள் காத்திருந்த பெற்ற பாஸ்போர்ட் இப்போது சில வாரங்களிலேயே கிடைக்கிறது என்றால் அது மிகப் பெரிய வளர்ச்சிதானே!

‘‘குழப்பம் இல்லாமல், எளிதாக இருக்கிறது!’’


குருநாதன், சென்னை

‘‘முன்பு லஞ்ச, லாவண்யம் தலைவிரித்தாடிய பாஸ்போர்ட் அலுவலகம்,  இன்று நன்கு சீரமைக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் காத்திருப்புக் காலம் மிகவும் அதிகமாக இருக்கும். அதோடு எந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு யாரை சந்திக்க வேண்டும் என்பதே குழப்பமாக இருக்கும். இன்று உள்ளே செல்வது தொடங்கி, வெளியே வருவது வரை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக குழப்பம் இல்லாமல் இருக்கிறது. இந்த நடவடிக்கைகளுக்கு சராசரியாக  2 - 3 மணி நேரம் ஆகிறது. இந்த நேரத்தை இன்னும் கொஞ்சம் குறைக்கலாம். எனக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது. என்னைப் போன்ற சாதாரண மனிதர்களும் எளிதில் புரிந்துகொள்வது போல் பிராந்திய மொழிகளிலும் விவரங்களைக் கொடுக்கலாம்.''

‘‘ஆவணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்!’’

சந்திரசேகர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் :

‘‘அடுத்த சில மாதங்களில் வெளிநாட்டுக்கு செல்கிறேன். அதற்காக பாஸ்போர்ட் விண்ணப்பித்தேன். நாமாக விண்ணப்பித்தால் ஏதாவது தவறு வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் 2,500 ரூபாய் கொடுத்து ஏஜென்ட் மூலம் விண்ணப்பித்தேன். தத்கல் முறையில் விண்ணப்பிக்க 4,500 ரூபாய் வரை ஏஜென்ட்கள் வாங்குகிறார்கள்.

இந்த அலுவலகத்துக்கு ஏகப்பட்ட ஆவணங்களை கொண்டுவர வேண்டி இருக்கிறது. இதையும் குறைத்து 3, 4 ஆவணங்களில் எங்களை பற்றிய முழு விவரங்கள் இருப்பதை போன்று அமைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval