Saturday, August 13, 2016

ஆன்லைனில் எக்ஸ்சேஞ்ச்... விலையாக உயிரைக் கொடுத்த நபர்!

முன்பெல்லாம் நாம் ஒரு வண்டியை எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு, புதிதாக ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், ஏதேனும் ஒரு ஏஜென்சிக்கு செல்ல வேண்டும். இல்லையெனில், குறிப்பிட்ட கம்பெனியிலேயெ எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு, அதே நிறுவனத்தில் வேறொரு வண்டியை வாங்குவோம்.
தற்போது எல்லாமே, OLX, குயிக்கர்தான். அது போன்று தளங்கள் இல்லையென்றால், சமூக வலைதளங்களிலேயே விற்பதுதான் லேட்டஸ்ட் ஸ்டைல். அதைத்தான் 35 வயதான சோகன் ஹல்டார் செய்து இருக்கிறார். ஆனால், அது இவ்வளவு பெரிய ஆபத்தில் அவரைக் கொண்டு சேர்க்கும் என அவர் நினைத்திருக்க மாட்டார்.
Second to None என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், தனது KTM Duke 390 பைக்கின் விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த பைக்கை விற்றுவிட்டு, வேறு பைக் வாங்கலாம் என்பது அவரது எண்ணம். சோகன்,  அவரது மொபைல் எண் போன்றவற்றை வெளியிட்டு, பைக் விபரங்களை அறிய, அவரைத் தொடர்பு கொள்ளுமாறும் கூறி இருக்கிறார். இதைப் பார்த்த கார்த்தி டௌலத் என்பவர், சோகனைத் தொடர்பு கொண்டிருக்கிறார். கார்த்திக்கிடம், தனது அபார்ட்மென்ட் முகவரியைக் கொடுத்து, அங்கு வர சொல்லி இருக்கிறார் சோகன்.

வண்டியின் பேப்பர் வேலைகளை முடிக்க வேண்டும் என்பதால், அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு, வீட்டில் இருந்திருக்கிறார் சோகன். செவ்வாயன்று சோகனின் வீட்டுக்கு சென்ற கார்த்தி, அங்கு வண்டியை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு, வண்டியை வாங்க விருப்பமும் தெரிவித்துள்ளார்.பணம் எடுத்து வருவதாக சொல்லிவிட்டு,  கடைக்குச் சென்று 100 கிராம்  பொட்டாசியம் சயனைடு வாங்கியுள்ளார்.
மறுநாள் புதன் அன்று சோகனுடன் இணைந்து, கார்த்திக்கும்  மது அருந்தி இருக்கிறார். மது மயக்கத்தில் சோகன் இருந்தபோது, கார்த்திக்  சிறு அளவு சயனைடை எடுத்து, சோகனின் வாயில் போட்டு இருக்கிறார். சோகன் மூச்சுவிட கடினப்பட்டு நிலை தடுமாற, தண்ணீர் எடுத்து வருவதாகக் கூறி, ஒரு டம்ளர் தண்ணீரில், சர்க்கரையை கலந்து கொடுத்து இருக்கிறார் கார்த்திக். மயங்கி விழுந்த சோகனை, அங்கு இருந்த ஒரு துணியில் சுற்றி வைத்துவிட்டு, சோகனின்  மொபைல், ஏடிஎம் கார்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டு, பார்க்கிங்கில் இருந்த சோகனின் பைக்கிலேயே, சென்றுவிட்டார் கார்த்திக்.
இரண்டு நாட்களாக, அறைக்குள்ளேயே, பிணமாக கிடந்தார் சோகன். அவரது அறைத் தோழர்கள், அறையில் ஏதோ வாசனை அடித்தும், அதை கண்டுகொள்ளாமல் , அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்கள். சோகனை காணவில்லையென என வெள்ளியன்றுதான், அவரது அறையை திறந்து பார்த்து இருக்கிறார்கள். அபார்ட்மென்ட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில், கார்த்திக் வண்டியை எடுத்துச் செல்வது படமாகி இருந்ததால், காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்டார் கார்த்திக்.
நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை சமூக வலைதளங்களிலோ, அல்லது பிற தளங்களிலோ விற்பனைக்கு விளம்பரம் செய்யும் போது, பொதுவான ஒரு இடத்திற்கு வரச் சொல்வது நல்லது என அறிவுறுத்துகிறார்கள் காவல்துறையினர்.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval