Wednesday, May 21, 2014

மோடிக்கு கலாம் வாழ்த்து: நாட்டை வளமாக்கத் தேவையான 3 யோசனைகள்!

abdul-kalam0பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டை வளமாக்கத் தேவையான 3 யோசனைகளையும் அவர் மோடிக்குத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது பேஸ் புக் பக்கத்தில் கலாம் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நரேந்திர மோடிதன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும், தான் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்ததாகவும், அப்போது அவரிடம் தான், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல 3 வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் கலாம் கூறியுள்ளார்.
பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி என்னுடன் தொலைபேசியில் பேசினார். அவரை நான் பாராட்டி வாழ்த்தினேன். மேலும் நாட்டை வல்லரசாக்க பாடுபடுமாறும் அதற்காகவும் வாழ்த்தினேன். அமைதி, முன்னேற்றத்துடன் கூடிய வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்லுமாறும் அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
மேலும் நாட்டை சிறந்த நாடாக்குவதற்குத் தேவையான 3 செய்திகளையும் மோடியிடம் தெரிவித்தேன்.
நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்களில் தடையில்லாத குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். 6 லட்சம் கிராமங்களில் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்கு தேசிய நீர் வழிப்பாதை இணைப்பை ஏற்படுத்துவதுதான் ஒரே வழி. இப்படிச் செய்வதன் மூலம் குடிநீர் விநியோகம் மற்றும் பாசன வசதியை உறுதி செய்யலாம். மேலும் வறட்சிக் காலங்களில் அப்பகுதிளிலும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யலாம். மேலும் வெள்ளத்தால் நாட்டின் சில பகுதிகள் அழிவதையும் தடுக்கலாம்.
நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வசிப்போரில், ஒவ்வொரு குடும்பமும் ஊதியம் ஈட்டும் குடும்பமாக மாற வேண்டும். நாட்டில் 200 மில்லியன் மக்களில் 150 மில்லியன் மக்கள் வருவாய் பற்றாக்குறையில்தான் உள்ளனர். அவர்களுக்காக, கிராமப்புறங்களிலேயே நகர்ப்புறங்களின் வசதிகள் கிடைக்கச் செய்யும் ‘புரா’ ( PURA – Provision of Urban Amenities in Rural Areas). தொகுப்புகளை ஏற்படுத்த வேண்டும். இப்படி 7000 தொகுப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் இதை சரி செய்யலாம்.
பொருளாதார முன்னேற்றத்தை மட்டும் ஏற்படுத்துவது சாதனையாக இருக்க முடியாது, அது போதாததும் கூட. மாறாக நாட்டில் உள்ள 6.4 கோடி இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகளையும் நாம் வழங்க வேண்டும்.
நான் கூறிய இந்த 3 யோசனைகளையும், திட்டங்களையும் ஏற்பதாக மோடி தெரிவித்தார். மேலும், இந்த இலக்குகளை தான் முக்கிய அம்சமாக ஏற்று செயல்படுத்த முனைவதாகவும் அவர் தெரிவித்தார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மையமாகக் கொண்டு நல்லாட்சி தரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்திய குடிமக்களை சாதாரண மக்களாக இல்லாமல் மாபெரும் மக்களாக நாம் மாற்ற வேண்டும். அப்படியென்றால், ஒவ்வொரு குடிமகனும் ஊதியம் ஈட்டுபவராக, அறிவு சார் வளர்ச்சி அடைந்தவராக மாற்ற வேண்டும். இதயத்தில் சுத்தி இருந்தால் செயலில் அழகு தெரியும் என்பதற்கேற்ப, நமது பெற்றோரிடமிருந்து நாம் நல்ல மக்களாவதை தொடங்க வேண்டும். பின்னர் ஆசிரியரிடத்தில் நல்ல மக்களாக பெயர் பெற வேண்டும். இதன் மூலம் நாம் நல்ல குடிமக்களாகவும் திகழ முடியும், மாபெரும் மக்களாகவும் மாற முடியும் என்று கலாம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval