சீனர்களும் இந்தியர்களும் அதிக அளவில் வாழும் ஒரு நாடு சிங்கப்பூர். ஆனால் அந்நாட்டுக்கு வெளியிலிருந்து செல்லும் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் அங்கே வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
வாடகைக்கு வீடு விளம்பரம் செய்யும்போதே, இந்தியர்களுக்கும் சீனாவிலிருந்து வருபவர்களுக்கும் வீடு இல்லை என்றே வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதை பிபிசியும் காணநேர்ந்துள்ளது.
சுனிலின் அனுபவம்
பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைநிமித்தமாக சென்றுள்ள இளைஞர், சுனில். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் அவர்.
சிங்கப்பூரில் இவர் வாடகைக்கு வீடு கிடைக்குமா என்று பல்வேறு நிறுவனங்களை அவர் தொடர்புகொண்டபோது, அந்நிறுவனங்கள் முதலில் பிடிகொடுத்து பேசினாலும், சுனில் தனது பெயரை சொன்னவுடன், “மன்னிக்கனும் இந்தியர்களுக்கு வீடில்லை” என்ற பதில்தான் இவருக்கு கிடைத்திருந்தது.
“நான் இலங்கையைச் சேர்ந்தவன், இந்தியன் அல்ல.தவிர வீட்டில் சமைக்கவும் மாட்டேன்” என்று அவர் உத்திரவாதமெல்லாம் கொடுத்தாலும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.
பின்னர் வீட்டு உரிமையாளரும் இந்தியர் என்பது மாதிரியான இடங்களைத் தொடர்புகொண்டபோதுதான் தனக்கு வாடகைக்கு வீடு கிடைத்ததென்று சுனில் கூறுகிறார்.
சுனில் மட்டுமல்லாது இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் செல்லும் பலருக்கும் இதே நிலைமை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
வாடகை வீடு விளம்பரம்
பிராபர்டி குரு என்ற வாடகைக்கு வீடு தேடுவோருக்கான இணையதளத்தை பிபிசி ஒரு வாரம் முன்பு அலசியபோது, அதிலிருந்த வாடகைக்கு வீடு விளம்பரங்களில் கிட்டத்தட்ட 160 விளம்பரங்களில், No Indians/ No PRC (Peoples Republic of China) என்ற குறிப்பு இருந்தது.
அதாவது இந்தியர்களுக்கோ, சீனாவிலிருந்து வருவோருக்கோ வீடு இல்லை என்பது விளம்பரத்திலேயே இடம்பெற்றிருந்ததை காணமுடிந்தது.
“சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை”
இந்தியாவிலிருந்து வருபவர்களும் சீனாவிலிருந்து வருபவர்களும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை; தவிர அதிக எண்ணெய் பிசுக்கும், வாசனையும் கொண்ட சமையலை இவர்கள் செய்கிறார்கள் என்ற எண்ணம் வீட்டு உரிமையாளர்களுக்கு உள்ளது என சிங்கப்பூரில் விற்பனை வீடு மற்றும் வாடகை வீட்டு தொழில் முகவராக இருந்துவரும் ஃபௌஸியா அஷ்ரஃப் கூறினார்.
ஜனத்தொகையில் 74 சதவீதத்தினரை சீனப் பூர்வீகம் கொண்டவர்களாகவும், 13 சதவீதத்தை மலாய் மக்களாகவும் 9 சதவீதத்தை இந்தியப் பூர்வீகம் கொண்டவர்களாகவும் கொண்டுள்ள சிங்கப்பூரில், அந்நாட்டின் பிரஜைகள் 90 சதவீதம் பேர் சொந்த வீடுகளில் வாழ்கின்றனர். எனவே வெளிநாட்டிலிருந்து செல்லக்கூடியவர்கள்தான் வாடகைக்கு வீடு எதிர்பார்ப்பதில் பெரும்பான்மையானோர்.
இனம், மொழி அடிப்படையில் மக்களிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விதி சிங்கப்பூரின் அரசியல் சாசனத்திலேயே இருக்கிறது என்றாலும், தனியார் விஷயங்களில் அவற்றை எந்த அளவுக்கு வலியுறுத்த முடியும் என்பதுதான் சவாலாக உள்ளது.
மாமிசம் சாப்பிடுவோருக்கு வாடகைக்கு வீடு இல்லை என்று விளம்பரம் செய்வது இந்தியாவின் யதார்த்தம் என்றால், இந்தியர் என்றாலே வாடகைக்கு வீடில்லை என்று விளம்பரம் செய்வது சிங்கப்பூரின் யதார்த்தமாக உள்ளது.
courtesy;todayindia.info
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval