Thursday, May 1, 2014

தாமரை சின்னத்துடன் பேட்டி மோடி மீது வழக்கு பதிவு!

modi34வாக்குச் சாவடிக்கு வெளியே தாமரை சின்னத்துடன் பேட்டியளித்த குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து குஜராத் அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.
7வது கட்ட லோக்சபா தேர்தல் இன்று நாடு முழுவதும் 89 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் குஜராத்தின் 26 தொகுதிகளும் அடங்கும்.
குஜராத்தின் காந்திநகரில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிட்டார். அங்கு தனது தாயாருடன் சென்று நரேந்திர மோடி இன்று காலை வாக்களித்தார்.
அதன் பின்னர் வாக்குச் சாவடிக்கு வெளியே தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் மோடி. அதேபோல் தாமரை சின்னத்துடன் தாம் வாக்குப் பதிவு செய்ததற்கான அடையாளமாக இருந்த மை விரலையும் மோடி போட்டோ எடுத்துக் கொண்டார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வாக்குப் பதிவு நேரத்தின் போது தாமரை சின்னத்தை மோடி பயன்படுத்தியபடி பேட்டியளித்தது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். வாக்குச் சாவடி அருகே தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தது விதிமீறலாகும். இது வாக்காளர்கள் இந்த சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தூண்டுவதாகும் என்று கண்டனம் தெரிவித்தது காங்கிரஸ்.
மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் இன்று காங்கிரஸ் கட்சி புகார் மனு கொடுத்தது. அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய மோடி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியது.
மோடி மீதான நடவடிக்கைக்கு உத்தரவு!
இந்தப் புகாரைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது, இந்த சம்பவம் குறித்து அகமதாபாத் மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறிய நரேந்திர மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு குஜராத் மாநில தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
குஜராத அரசு வழக்குப் பதிவு
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று குஜராத் மாநில அரசு நரேந்திர மோடி வழக்குப் பதிவு செய்தது.
அருண் ஜேட்லி எதிர்ப்பு
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாக்குச் சாவடிக்கு வெளியே மோடியிடம் கேள்வி கேட்ட ஊடகங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
2 ஆண்டு சிறைத் தண்டனை?
தற்போது நரேந்திர மோடி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126 1(b)ன் கீழ் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதாவது வாக்குப் பதிவின் போது பிரஸ் மீட் நடத்தினாலோ, கட்சி சின்னத்தை காண்பித்தாலோ 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை விதிக்கப்படும் என்கிறது இந்த சட்டப் பிரிவு.
இந்த தடையான வாக்குப் பதிவு முன்னும் பின்னும் 48 மணிநேரத்துக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
courtesy;todayindia.info

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval