Sunday, May 18, 2014

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா: கருணாநிதி மறுப்பு

மு.க.ஸ்டாலின், கருணாநிதி | கோப்புப் படம்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் தவறானது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
இது குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை - கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் தவறானது. ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின், எனது அறிவுரையை ஏற்றுக்கொண்டு முடிவை மாற்றிவிட்டார். மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து திமுக உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தும்" என்றார்.
செய்தியாளர்கள் மீது தாக்குதல்
இதனிடையே, ஸ்டாலின் இல்லத்தில் திரண்ட செய்தியாளர்கள் சிலரை, அவரது ஆதரவாளர்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலின் ஆதரவாளர்கள் தாக்கியதில் 2 கேமராக்கள் உடைந்தன.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, திமுக பொருளாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய முன்வந்ததால், கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொண்டதாக, திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்ய முன்வந்து, சில மணி நேரங்களில் தனது முடிவை மு.க.ஸ்டாலின் கைவிட்டது கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. திமுக கட்சிக்கும் ஓர் இடம் கூட கிடைக்கவில்லை.
இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சிப் பதவிகளில் இருந்து விலக முன்வந்தார்.
மு.க.ஸ்டாலினின் முடிவு குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி தீவிர ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்டாலின், கருணாநிதி வீட்டின் முன்பு பரபரப்பு
ஸ்டாலின் ராஜினாமா தகவல் பரவியவுடன், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திமுகவினர் திரண்டனர். அவர் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யக் கூடாது என்று திமுகவினர் கோஷமிட்டனர்.
அதேபோல், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் திரண்ட தொண்டர்கள், ஸ்டாலினின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் தவறானது என்று அக்கட்சியின் தகவல் கருணாநிதி தெரிவித்தார்.
முன்னதாக, தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சிப் பதவிகளில் இருந்து ஸ்டாலின் விலக வேண்டும் என்று திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி தரப்பில் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, 'மு.க.ஸ்டாலினின் ராஜினாமா கடிதத்தை கருணாநிதி ஏற்பது வரை இதைச் செய்தியாக்க வேண்டாம். அனைத்து திமுக மாவட்டச் செயலர்களும் சென்று கருணாநிதியிடம் அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்கக் கூடாது என்றும் வலியுறுத்துவார்கள். அதன்பின், நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது. திமுகவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான நாடகம்?" என்று மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர், மு.க.ஸ்டாலின். அதேபோல், தேர்தல் பொறுப்பாளர்கள் தொடங்கி வேட்பாளர் தேர்வு வரை கட்சியின் சார்பில் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கவனிக்கத்தக்கது.
courtesy;theindu

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval