Saturday, May 10, 2014

உலகத் தலைவர்களுக்கு பிரியாவிடைக் கடிதங்கள் அனுப்பிய பிரதமர் மன்மோகன் சிங்

உலகத் தலைவர்களுக்கு பிரியாவிடைக் கடிதங்கள் அனுப்பிய பிரதமர் மன்மோகன் சிங்இந்தியாவில் பொதுத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வரும் 16ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து மறுநாள் தற்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன்சிங் தனது பதவியிலிருந்து விலகுகின்றார். இரண்டு முறை ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தலைவராக அரசை வழிநடத்தியபின் மன்மோகன்சிங் அரசியலிலிருந்து விலகுவதான தனது அறிவிப்பை வெளியிட்டார். வரும் 14ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைமையால் இவருக்கான பிரிவுபசார விழா நடத்தப்படுகின்றது. அதுபோல் இறுதிப் பணி நாளன்று பிரதமர், மக்களுக்கான தனது கடைசி உரையையும் நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதவி விலகும் பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் தலைவர்களுக்கும் பிரியாவிடைக் கடிதங்களை எழுதியுள்ளார். இவர்களில் அமெரிக்காவின் பராக் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முன்னாள் சீனப் பிரதமர் வென் ஜியாபோ, ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் அடங்குவர். தன்னுடைய பதவிக் காலத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து ஏஞ்சலா மெர்கலுக்கு தனது கடிதத்தில் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
சீனாவின் முன்னாள் பிரதமரான வென் ஜியாபோவை அவரது ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் பலமுறை சந்தித்துள்ளார். இருவரிடையேயும் பரஸ்பரம் நல்ல புரிந்துணர்தல் இருந்தது. சென்ற ஆண்டு இந்தியப் பிரதமர் சீனாவிற்கு பயணம் செய்தபோது பதவியில் இல்லாதபோதும் வென் ஜியாபோ அவருக்குத் தனிப்பட்ட முறையில் விருந்தளித்து தனது சிறப்பு சலுகையை வெளிப்படுத்தினார். இவருடன் பணியாற்றியதைப் பற்றி குறிப்பிடுகையில், இரண்டு ஓட்டுனர்களும் சரியான பாதையில் நிதானமாக சென்றதாக வென் கூறியுள்ளார். இவர் தன கைப்பட பிரதமருக்கு பதில் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபராக ஒபாமா கடந்த 2009ல் பதவியேற்றபின்னர் உச்சி மாநாடு கூட்டங்களுக்காக மூன்று முறை அவரை நேரடியாக சந்தித்த அனுபவம் கொண்ட மன்மோகன்சிங், அதுதவிர பன்னாட்டு மன்றங்களில் அவரைப் பலமுறை தனியே சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றதைத் தனது கடிதத்தில் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார். அதுபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் உச்சி மாநாடுகள் உட்பட பல முறை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றதைத் தனது நன்றிக் கடிதத்தில் சிங் குறிப்பிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
courtesy;malaimalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval