Saturday, May 24, 2014

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு!

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தது 55 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனது.
இதனால் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக கமல்நாத்தை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் டெல்லியில் இன்று மாலை நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
சுருக்கமாக நடந்து முடிந்த இக்கூட்டத்தில் சோனியாவின் பெயரை மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்ததாகவும், அதனை மூத்த தலைவர் மொஷினா கிட்வாய் வழிமொழிந்ததாகவும் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து பேசிய சோனியா, பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு மீண்டும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர்,எதிர்க்கட்சியாக இருப்பது என்பதன் அர்த்தம்,  அதிக கேள்விகளை கேட்டு, நிறைய பிரச்னைகளை எழுப்பலாம், அதிக விவாதங்களை தொடங்கி வைத்து எப்பொழுதுமே கண்காணிப்புடன் செயல்படலாம் என்பதுதான் என்றார்.
தோல்வி காங்கிரஸுக்கு புதிதல்ல என்றும், கடந்த காலங்களிலும் தோல்வியிலிருந்து மீண்டு வந்து வெற்றிபெற்றுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
தோல்வியினால் துவண்டுபோயுள்ள கட்சியினரை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே சோனியா, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட முன்வந்ததாக தெரிகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval