Tuesday, June 30, 2015

8 தமிழர்கள் கழுத்தறுத்துக் கொலை: இலங்கை ராணுவ அதிகாரிக்கு தூக்கு!


கொழும்பு: இலங்கையில் 8 தமிழர்களை கழுத்தை அறுத்துக் கொன்ற வழக்கில், அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின்போது சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. சபையும், உலக நாடுகளும் வலியுறுத்தி வந்தன. ஆனால், இலங்கை அரசு மறுத்து வந்தது.


இதையடுத்து, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த விசாரணைக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த விசாரணையின்போது, கடந்த 2000ஆம் ஆண்டு, டிசம்பர் 19ஆம் தேதி யாழ்ப்பாணம் அருகேயுள்ள மிருசுவில் என்ற கிராமத்தில் 8 தமிழர்களை விசாரணைக்காக ராணுவ அதிகாரி ரட்நாயகே என்பவர் அழைத்து சென்றார். இவர்களில் 4 பேர் பெரியவர்கள், 3 பேர் இளம்வயதினர், ஒரு 5 வயது குழந்தை அடங்கும்.

பின்னர், விசாரணைக்காக அழைத்து சென்ற 8 பேரின் கழுத்தையும் அறுத்து ராணுவ அதிகாரி கொலை செய்ததும், அந்த 8 பேரின் உடல்களையும் ஒரே இடத்தில் புதைத்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த ராணுவ அதிகாரி ரட்நாயகே உள்பட 5 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ள கொழும்பு நீதிமன்றம், ராணுவ அதிகாரி ரட்நாயகேவுக்கு தூக்கு தண்டனை விதித்து  உத்தரவிட்டது. அதே சமயம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 4 ராணுவ வீரர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval