Thursday, June 25, 2015

ரமலானின் வருகையும் நோன்புக்கஞ்சியின் வாசனையும்.!



ஆக்கம்: அதிரை மெய்சா

குரான் ஓதுதல்,தொழுகை, பாவமன்னிப்பு,இறையோனிடம் இருகையேந்தி துவா கேட்பது விபாதத்து செய்தல்,என இறைவணக்கத்தின் வாசனையோடு ஒவ்வொரு ரமலான் மாதத்துடன் நோன்புக் கஞ்சியின் வாசமும் சேர்ந்து நாம் நோற்க்கும் நோன்பை மனதார மகிழ்ச்சியடையச் செய்து மணக்க வைத்து கழிக்கச்செய்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நோன்புக் கஞ்சி நோன்புவைப்பவர்களுக்கு முக்கிய உணவாக நம்மோடு இரண்டரக்கலந்து விட்டது என்றுசொன்னால் அது மிகையல்ல.


ரமலான் மாதம் வருகிறது என்றாலே அடுத்ததாக உணவுவகைகளில் நமது நினைவுக்கு வருவது நோன்புக் கஞ்சியாகத்தான் இருக்கும். காரணம் மற்ற உணவுவகைகளை நாம் தினம்தினம் உண்டு ருசித்து சளைத்திருப்போம். ஆனால் நோன்புக்கஞ்சி இதற்க்கு விதிவிலக்காக பிரத்தியேகமாக நோன்பு மாதங்களில் மட்டுமே  தயாரிக்கப்படுகிறது.இதற்காக நாம் ஒருவருடம் காத்திருந்து சுவைக்கும்படி உள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்புடன் இருப்பவர்களாக நாம் இருக்கிறோம்.

நோன்புக்கஞ்சி என்றழைக்கப்படும் இந்த வகைக்கஞ்சி நமதூரில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலத்திலும் இன்னும் சொல்லப்போனால் வெளிநாடுகளிளும்கூட நோன்புதிறப்பதற்காக தயாரிக்கப்படும் மற்ற உணவுவகைகளுடன் நோன்புக் கஞ்சியும் தயாரித்து உண்ணப்படுகிறது.

ஏறக்குறைய சுமார் 13, 14 மணிநேரம் பட்டினியாய் நோன்பிருப்பவர்களின் காலிவயிற்றில் இந்த நோன்புக்கஞ்சியை குடிப்பதால் பசியடங்குவதுடன் உடல் புத்துணர்வு பெற்று உடல் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் தருகிறது. நோன்புக்கஞ்சியில் நீர்ச்சத்தும் அனைத்து புரதச்சத்தும் நிறைந்து இருக்கிறது.இதற்க்குக் காரணம் நோன்புக்கஞ்சி தாயரிக்க சேர்க்கப்படும் மூலப்பொருள்களேயாகும்.

ருசியான நமதூர் நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருள்களின் பட்டியல் இதோ....[ சுமார் 10 பேர் ருசியுடனான நோன்புக்கஞ்சி தயாரிப்பதற்கு ] 

அரிசி [2டீகப் அளவு],ஆட்டிறைச்சி அல்லது ஆட்டுத் தலை[வசதிக்கேற்ப], கடலைப்பருப்பு [கைப்பிடி அளவு],வெந்தயம் ஒரு டீ ஸ்பூன் அளவு, தக்காளி 1/4கிலோ பெல்லாரி வெங்காயம் 3, பச்சைமிளகாய் 10 கொடை மிளகாய் 1,தேங்காய் ஒருமூடி,பீன்ஸ் 50கிராம் அளவு,கேரட் 100கிராம் அளவு,இஞ்சிபூண்டு அரைத்தது சிறிதளவு,பட்டை ஏலம் கிராம்பு சிறிதளவு சன் ஃபுளவர் எண்ணெய் 150மிலி கருவேப்பிலை மல்லி இலை புதினா இலை[தேவையான அளவு ], உப்பு 2 தேக்கரண்டி,மஞ்சத்தூள் ஒரு ஸ்பூன் ,ஜீரகத்தூள் 3 ஸ்பூன் எலுமிச்சம்பழம் 1 ஆகிய மூலப் பொருள்களுடன் நன்றாக மசியும்படி சமைக்கும் பாத்திரம் அடிபிடிக்காத அளவுக்கு தீயை எரியவிட்டு மறக்காமல் ஆப்பையைக் கொண்டு கிளறிக் கொண்டு இருந்தால் எப்படிச் செய்தாலும் 3/4 மணிநேரத்தில் சுவையான அதிரை நோன்புக் கஞ்சி கமகம வாசத்துடன் ரெடியாகிவிடும்.[ நோன்புக் கஞ்சி தயாரிக்க 15 நிமிடத்திற்கு முன் அரிசி பருப்பை நன்றாக அலசிக்கழுகி வெந்தயமும் அத்துடன் சேர்த்து ஊறவைத்து விடவேண்டும்] 

நோன்புமாதத்தில் எந்தப் பள்ளிவாசலுக்கு சென்றாலும் நோன்புக்கஞ்சியின் வாசனையை நுகரமுடியாமல் இருக்கமுடியாது.அந்த வாசனையை நுகரும்போது வருடம் முழுக்க நோன்பாகவே இருந்துவிடக்கூடாதா என்றே தோன்றும். அந்த அளவுக்கு நோன்புக்கஞ்சியில் வாசமும் ருசியும் நிறைந்து இருக்கிறது.

நோன்பு திறப்பதற்காக என்னதான் அறுசுவை உணவு அருகில் இருந்தாலும் ஒரு கிண்ணத்தில் நோன்புக்கஞ்சி இருந்து அதைப்பருகினால்தான் நோன்பு திறந்த திருப்தி ஏற்படுகிறது. ஏனென்றால் ருசியுடன் பசிதீர்த்து உடலுக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது நோன்புக்கஞ்சி..

சில ஐந்து நட்சத்திர ஹோட்டலில்கூட நோன்புகாலங்களில் இஃப்தார் பார்ட்டி கொடுக்கும்போது அங்கு மற்ற உணவுவகைகளுடன் நோன்புக்கஞ்சியும் கொடுக்கப்படுகிறது.என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்னதான் இருந்தாலும் நமதூரில் தயாரிக்கப்படும் அதிரை  நோன்புக் கஞ்சியின் ருசியை எந்த ஊர் கஞ்சியாலும் மிஞ்சமுடியாது.என்பதை மார்தட்டிச் சொல்லலாம். 

                                                                 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval